சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன்: 'ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை' என்று முடிவு வந்தால், அ.தி.மு.க., தொண்டன் அளவற்ற மகிழ்ச்சி அடைவான். எனவே முதல்வர் ஸ்டாலின், இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: உங்கள்
 'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன்: 'ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை' என்று முடிவு வந்தால், அ.தி.மு.க., தொண்டன் அளவற்ற மகிழ்ச்சி அடைவான். எனவே முதல்வர் ஸ்டாலின், இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கையே பல விதமான, 'டவுட்'டுகளை கிளப்புகிறதே. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தானே, அ.தி.மு.க., தலைவர்கள் பேசி வருகின்றனர். இப்போது, 'இல்லை என வந்தால் மகிழ்ச்சி' என்கிறீர்களே...' சரி, இந்த கோரிக்கையை உங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போது வலியுறுத்துவதில்லையே ஏன்?

தமிழக முதல்வர் ஸ்டாலின்:

இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலைஇல்லா அரிசி வழங்கப்படும். ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 5 கோடி ரூபாய் வழங்கப்படும். கல்விக்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அகதிகள் முகாம்களில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் 58 ஆயிரம் இலங்கை தமிழர்கள், 108 முகாம்களில் அகதிகளாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் அறிவிப்பு, கடலில் பெருங்காயம் கரைத்தது போன்றது தான் என்பதில், 'டவுட்'டே இல்லை. எனவே, இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள், உதவி தொகை மற்றும் கூடுதல் சலுகைகளை அவர்களுக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைக்குமா?

தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்:

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை, டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

'டவுட்' தனபாலு: மே.வங்க எழுத்தாளரின் படைப்பு கூட நீக்கப்பட்டிருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு. நீக்குவதற்கு தகுந்த காரணம் கேட்க வாய்ப்பு இருக்குமே. நீங்கள் கேட்டு, அதற்கு பதில் கிடைத்தால், தமிழக மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவர் என்பதில், 'டவுட்'டே இல்லை!lll

தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி: வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன் எதிர்காலம், தன் ​பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு, எதிர்கால திட்டங்களையும், கவுரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

'டவுட்' தனபாலு: தமிழக அரசு அறிவித்திருக்கும் சலுகைகளை ஒவ்வொரு இலங்கை தமிழ் அகதிக்கும் பிரித்து கணக்கிட்டால், மிகவும் குறைவாகத் தான் வரும். தமிழகம் வந்தால், தங்கள் வாழ்வு சிறக்கும் என நம்பி வந்தவர்களை இத்தனை காலமும் ஆட்சியில் இருந்த அரசுகள் மிக மோசமான நிலையில் தானே வைத்துள்ளன. எனவே, அவர்கள் இலங்கைக்கு சென்று வாழ வழி ஏற்படுத்துவது தான், அவர்களுக்கு உண்மையில் கவுரவம் என்பதில், 'டவுட்'டே வராது!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ்: 80 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மாணவர்கள் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

'டவுட்' தனபாலு: கொரோனா மூன்றாவது அலை தாக்கி விட்டதோ என, கேரள மக்கள், 'டவுட்'டுடன் பதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தைரியமாக முடிவு எடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்ததால், மாணவர்கள் பலரும் குண்டாகி விட்டனர். அதனால், பள்ளிகள் திறந்ததும், தனிநபர் இடைவெளியுடன் விளையாட வழிவகை காண்பீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!lll

பத்திரிகை செய்தி: சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன், அண்ணாதுரை, ஈ.வெ.ரா., கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த மாதிரியான புகழ்ச்சியை கைவிட வேண்டும் என தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'டவுட்' தனபாலு: அப்படியே மேலும் சில வேண்டுகோளை முதல்வர் விடுப்பாரா... குறிப்பாக, இளைஞரணி தலைவரான உங்கள் மகனுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் வந்து வணக்கம் வைப்பது; சாதாரண நிகழ்ச்சிகள், 'பிரஸ்மீட்'டில் கூட, நுாற்றுக்கணக்கான கட்சியினர் சுற்றி நின்று கொள்வது; கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவது; ரேஷன் கடைகளில் தகராறு செய்வது போன்றவற்றையும் கைவிட வேண்டும் என கேட்பாரா என்பதே, நடுநிலையாளர்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
29-ஆக-202115:29:57 IST Report Abuse
D.Ambujavalli பள்ளிப்பிள்ளைகள் நண்பர்கள், பலநாள் காணாத பள்ளிச் சூழ்நிலையால் உற்சாக மிகுதியில் விதி,உரைகளை மீறாது பொறுப்புடன் நடக்க எவ்வளவு தூரம் கண்டிப்புக் காட்டப் படும் ? ஆரம்ப சூரத்தனமாக சோப், சானிடைசர் என்று நாலு நாள் நாடகம் நடக்கும். பிறகு அவைகளின் கொள்முதல் ஊழல், அமுக்குதல் ஆரம்பிக்கும். கழிப்பறைகள் ....... கேட்கவே வேண்டாம் பார்க்கலாம் எவ்வளவு நாள் ஓடுகிறதென்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X