மத்தியில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 1.07 லட்சம் கோடி ரூபாய் அரசு சொத்துகள் விற்கப்பட்டுள்ளன. எனினும், சொத்தின் உரிமை அரசிடம் தான் இருக்கிறது. இந்த உண்மையை காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமும், முன்னாள் தலைவர் ராகுலும் மறைப்பது ஏன்?
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
'அவர்கள் செய்தால், நாட்டிற்கு நன்மை பயக்கும். பா.ஜ., செய்தால், நாட்டையே விற்பதற்கு ஈடானது. இது தான் அவர்களின் அரசியல்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பெண்களை மிகவும் மதிக்கக் கூடியவர். பெண்களை, சகோதரி என்று தான் அழைப்பார். கண்ணியம் மிக்க அவரைப் பற்றி தவறாக வெளியாகியுள்ள, 'ஆடியோ' எந்த நோக்கத்திற்காக வெளியிடப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
- நடிகை காயத்ரி ரகுராம்
'இனிமேலாவது, கவனமாக இருக்க வேண்டியது, பா.ஜ., தலைமையின் பொறுப்பு...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் பேச்சு.
தமிழக பா.ஜ.,வில் நடந்து வரும் அவலங்கள், ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரம் அல்ல. பெண்களின் கவுரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது. எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நம் சகோதரிகள். அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
- கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி
'எண்ணம் நல்ல எண்ணம் தான். ஆனால் எந்த பெண்ணை காங்., இதுவரை காப்பாற்றியுள்ளது என்ற கேள்விக்கும், எம்.பி.,யிடம் பதில் இருக்க வேண்டுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.
மேற்கு வங்கத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என, பா.ஜ., கூறுகிறது. மொழி வாரி மாநிலங்களை சிதைப்பதே சங் பரிவார் அமைப்புகளின் இலக்கு. அப்போது தான் ஒற்றை ஆட்சி முறையை அவர்களால் எளிதில் செயல்படுத்த முடியும் என்பது அவர்களின் கணக்கு.
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'இப்படித் தானே காலம் காலமாக நடந்துள்ளது. பெரிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இப்படித் தானே பிரிக்கப்பட்டுள்ளன...' என, பதிலடி கொடுக்கத் துாண்டும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
கூடங்குளத்தில் மேலும் புதிய அணு உலைகளை அமைக்க இந்திய அரசு முனைகிறது. மனித குலத்தை அழிக்கும் பேராபத்து நிறைந்த அணு கழிவுகளை பாதுகாப்புடன் புதைப்பது பற்றிய அறிவியல்பூர்வமான திட்டம் ஏதுமின்றி, அவற்றை தொடங்கக் கூடாதென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'உங்கள் கோரிக்கை நியாயமானதே. அந்த விபரத்தை நம் போன்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியுமா... ராக்கெட் அறிவியலை விட, அணு அறிவியல் சிக்கலானதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம், மேல் விஷாரம் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக, தனியார் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள், கழிவுகளை சுத்திகரிக்காமல் பாலாற்றில் விடுகின்றன. அந்த ஆலைகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

'இருபது ஆண்டுகளாக நடக்கும் முறைகேட்டை, எந்த கட்சியும் தடுக்கவில்லை; எந்த மக்கள் பிரதிநிதியும் குரல் கொடுக்கவில்லையே ஏன் என்ற கேள்வி எழுகிறதே...' என, கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
தொழில்நுட்ப கல்லுாரிகளில் ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கிலம் பேசும் ஆற்றலை மேம்படுத்தவும், முறையாக ஆங்கிலம் பேச வைக்கவும் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
'அப்போ, தமிழக்கு, 'கல்தா' தானா; ஆங்கிலத்தை வளர்க்க துடிக்கும் அளவுக்கு, தமிழ் மீதும் கொஞ்சம் அக்கறை காட்டுங்களேன்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி.
உலகின் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் துறையை ஏற்படுத்தி, தமிழை வளர்க்கின்றனர். ஆனால், நம் நாட்டின் டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழை புறக்கணிக்கின்றனர். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
- தமிழக சட்டசபை காங்., கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை
'தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அதைத் தான் டில்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. முதலில் பிரச்னையை புரிந்து கொள்ளுங்கள்...' என, அறிவுறுத்தத் துாண்டும் வகையில், தமிழக சட்டசபை காங்., கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
நட்பு வேறு, அரசியல் வேறு. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமலை தோற்கடித்து, வானதி சீனிவாசன் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி தான். எனினும் கமல், கடினமாக போராடினார்; அவரையும் நான் பாராட்டுகிறேன்.
- பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு
'தேர்தலுக்கு பின் ஆளையே பார்க்க முடியவில்லையே. தோல்வியால் துவண்டு விட்டீர்களா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு பேட்டி.
குறுவை நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கப்படாது என, தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகளுக்கு முழுமையாக காப்பீடு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்
'தஞ்சை மாவட்டத்தின் பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், உங்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் புரிகிறது. பிற கட்சித் தலைவர்கள் தேவையில்லாத பிறவற்றை பேசிக் கொண்டிருக்கின்றனரே...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE