சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், பதவி உயர்வு மற்றும் சமூக பாதுகாப்பு நிதி வாயிலாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, தனிக்குழு அமைத்து விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், விதிமுறைகளை மீறி பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களை, மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் சுணக்கமும், குளறுபடியும் நிலவுகிறது. சரியான கல்வித் தகுதி இல்லாத அலுவலர்கள் பலர் இத்துறையில் இருப்பதால், மாற்றுத் திறனாளிகள் பற்றிய சரியான புள்ளி விபரத்தை கூட அவர்களால் இதுவரை சேகரிக்க இயலவில்லை. இதுகுறித்து, உயர் நீதிமன்றமும் விமர்சனம் செய்துள்ளது.
முறைகேடுகள்
பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை ஒப்புதல் இன்றி, முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தில், பதவி உயர்வு வாயிலாக பேச்சு பயிற்சியாளரை நியமித்தது. இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான கல்வித் தகுதியை, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து, துறை அளவில் தன்னிச்சையாக ஒரு அரசாணையை பிறப்பித்தது, அவர்களை பதவி உயர்வு வழியாக, மாவட்ட அலுவலர்களாக நியமித்தது. கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான முதுநிலை பட்டியலில் குளறுபடிகள் செய்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
கணக்கு இல்லை
வேலுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாநில தலைவருமான, ஆவின் பாஸ்கரன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்காக பயன்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான தகவல்களை சேகரித்தார். சமூக பாதுகாப்பு நிதியாக, 15 நிறுவனங்களிடம் இருந்து, 1.82 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது; அச்செலவினம் தொடர்பாக முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது.
சென்னை, கே.கேநகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், 'காவலர் வீட்டு வசதி கழக சமூக பாதுகாப்பு நிதியில் கட்டப்பட்டது' என்ற அறிவிப்போடு கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் கட்ட பெறப்பட்ட தொகை மற்றும் பல கோடி ரூபாய்க்கான சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.இது குறித்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும், ஆர்.டி.ஐ., தகவல் ஆர்வலர் பாஸ்கரன் கூறினார்.
உத்தரவிடுவாரா?
எனவே, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் வழங்கப்பட்ட பதவி உயர்வு; சமூக பாதுகாப்பு நிதி வாயிலாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் கணக்கு. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கியது போன்றவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, தனிக்குழு அமைத்து விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு, மாற்றுத்திறனாளிகளிடம் எழுந்து உள்ளது.
வெளிப்படையான நிர்வாகம் செய்வதாக கூறி வரும் தமிழக அரசு, சமூக பாதுகாப்பு நிதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பெறப்பட்ட நிதி, செலவு விபரங்கள் குறித்த முழு விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உதவித்தொகை
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கான மானிய கோரிக்கை, செப்., 1ல் சட்டசபையில் நடக்கிறது. தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் 1,000 ரூபாய் உதவி தொகையை, 5,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, சில அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளன. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 1,000 ரூபாய் உதவி தொகை, 1,500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்ற அறிவிப்பு, சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உலக வங்கியின் 1,702 கோடி ரூபாய் கடன் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக, அ.தி.மு.க., அரசு, 'ரைட்ஸ்' திட்டத்தை அறிவித்தது. அதை, முறைகேடான பதவி உயர்வுகள் வாயிலாகவும், மாற்றுப்பணி வாயிலாகவும் வந்துள்ள அதிகாரிகளை வைத்து, தமிழக அரசு எப்படி வெற்றிகரமாக நிறைவேற்றப் போகிறது? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதிகாரிகள் மறைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், இது துாய்மையாக செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, உயர் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். முதல்வரின் துறை குறித்து புகார்களோ, விமர்சனங்களோ வந்தால், அவற்றை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லாமல், அதிகாரிகள் மட்டத்திலேயே மறைத்து விடுகின்றனர். மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து வரும் செய்திகள், ஏதாவது, ஒரு மழுப்பலான அறிக்கையுடன், அதிகாரிகள் மட்டத்திலேயே முடித்து வைக்கப்படுகின்றன. இதனால், முதல்வரின் பார்வைக்கு பிரச்னைகளை கொண்டு சென்று, தீர்வு காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
காலி பணியிடங்கள்
முதுநிலை அலுவலர்கள், மாவட்டங்களில் பணியாற்றும் நிலையில், உதவி இயக்குனர் நிலையை அடையாத ஜூனியர் மாவட்ட அலுவலர்களை, மாற்று பணியில் உதவி இயக்குனர்களாக நியமித்துள்ள சம்பவமும், மாற்றுத் திறனாளி துறையில் நடந்து வருகிறது.இந்த மாவட்ட அலுவலர்கள், ஆணையரகத்தில் பொறுப்பு உதவி இயக்குனர்களாக பணியாற்றி, வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் பணியை, பக்கத்து மாவட்ட அலுவலர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். ஏற்கனவே பணியிடங்கள் பலவும் காலியாக இருக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில், இதுபோன்ற நிகழ்வுகள் பணிச்சுமையை அதிகரித்து, அரசின் திட்டங்கள், மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதையும் மிகவும் பாதிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE