ஆயிரம் கவிதைகள் சொல்லும் ஆழமான பார்வை... பேச்சில் பளிச்சிடும் முத்துக்களின் கோர்வை... காதோடு கதைகள் பேசும் காதணிகளுக்கும் கர்வம், பேரழகிகளையும் பொறாமை கொள்ள செய்யும் புருவங்களின் திருப்பம், வில்லியாக நடிக்கும் கண்கவரும் மல்லி, குயில் கூட்டங்கள் பாடுமே இவள் பெயரை சொல்லி... என பார்த்ததும் வர்ணிக்க வைக்கும் நடிகை மலர் அழகாக மனம் திறக்கிறார்...
அழகு மலராக ஆடும் இந்த மலரின் அறிமுகம்
சொந்த ஊர் கோவை, சின்ன வயதிலிருந்தே மீடியாவுக்குள் வர ஆசை இருந்தது. அப்பா செல்வராஜ், அம்மா கற்பகலட்சுமி, அண்ணன் மதன்குமார் முதலில் சம்மதிக்கவில்லை. ஒரு வழியாக சம்மதம் வாங்கி டிவி செய்தி வாசிப்பாளரானேன். என் நடிப்பு திறமையை நிரூபிக்க விளம்பர படங்கள், சீரியலில் நடிக்கிறேன்.
செய்தி துறையில் இருந்து நடிப்பு துறைக்கு வந்தது
நடிப்பும் ரொம்ப பிடிக்கும்... தற்போது 'தாலாட்டு' சீரியலில் 'தாரா' என்ற மெயின் வில்லி கேரக்டரில் நடிக்கிறேன். சீரியலில் மோகன் ஷர்மா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் நடிப்பை பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்
'சென்னை அப்பா' என அன்பாக நான் அழைக்கும் வெங்கட் ரங்க குப்தா மறக்க முடியாத நபர். அவரை அப்பா என அழைப்பதை விட அம்மா என அழைத்ததே அதிகம். அந்த அளவு பாசம் என்றால் என்ன என்பதை எனக்கு புரியவைத்தவர். நடிப்பை பாராட்டி என் வளர்ச்சிக்கு துணையாக இருப்பவர்.
செய்தி துறையில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்
கேமரா முன் அமர்ந்து செய்தி வாசிப்பதை விட பெரிய தலைவர்கள் வருகை உள்ளிட்ட நிகழ்வுக்கு சென்று பேட்டி எடுத்து செய்தி சேகரிக்கும் பெண் நிருபர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். அதில் அவர்கள் வெற்றியும் காண்கிறார்கள். எனக்கு நானே நம்பிக்கை தந்து தான் முன்னேறினேன்.
மெயின் வில்லி கேரக்டரில் நடிக்க பிடிச்சிருக்கா
முதல் சீரியலிலேயே வில்லி கேரக்டர் சந்தோஷம்... இப்போதெல்லாம் 'தாரா' என்றே என்னை பலர் அழைக்கிறார்கள். அந்த அளவு கேரக்டர் ரீச் ஆகியிருக்கு. இன்னும் திறமையாக நடிக்க வேண்டும்.
அடுத்தது சினிமாவில் நடிக்கும் எண்ணம் ஏதாவது
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். 'பரியேறும் பெருமாள்' கயல் ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கேரக்டர்போல் நடிக்க விரும்புகிறேன். குடும்பத்துடன் பார்க்கும் தரமான படங்களுக்காக காத்திருக்கிறேன்.
நிஜத்தில் எந்த விஷயத்தில் வில்லி
யாராக இருந்தாலும் என் முன் பேச வேண்டும். என்னை பற்றி பிறரிடம் குறை கூறினால் அவர்களுக்கு நான் வில்லி. அன்பு காட்டும் போது மலராக இருப்பேன், வம்பு காட்டும் போது நான் 'தாரா'வாக மாறிவிடுவேன்.
கொரோனா ஊரடங்கு நாட்களில் நீங்கள் கற்றது என்ன
ஊரடங்கால் லைட், உதவி கேமரா மேன், சிறு தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டனர். வறுமையில் தவித்த சிலருக்கு சிறு உதவிகள் செய்தேன். இது போல் எளியவர்களுக்கு உதவ வேண்டும் என கற்றேன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE