சென்னை : சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு,எடை குறைவாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுவதை தடுக்க,நிரந்தர தீர்வு காணுமாறு தமிழக அரசுக்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்களுக்கு'சப்ளை'செய்கிறது. அவை, தங்களின் கிடங்குகளில் பொருட்களை இருப்பு வைத்து, தேவைக்கு ஏற்ப கடைகளுக்கு வினியோகம் செய்கின்றன.பொருட்களை எடுத்து செல்லும் போது, ஒவ்வொரு மூட்டையிலும் 5 கிலோ வரை எடை குறைவாக அனுப்பப்படுவதாக புகார்கள் எழுகின்றன.இதனால்ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக, கடை ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு வழங்கும்போது முறைகேடு செய்கின்றனர்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு, ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
லாரியில் பொருட்களை எடுத்து செல்லும் போது தான், மூட்டைகளில் இருந்து திருடப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் முன்னிலையில் எடை போட்டு வழங்குமாறு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டும், கிடங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் பின்பற்றுவதில்லை.அதை, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும்; உணவுத்துறையின் கீழ் இயங்கும் வாணிபக்கழக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
எனவே, 'செக்யூரிட்டிஏஜன்சி' நிறுவன ஊழியர்கள் கண்காணிப்பில், கிடங்குகளில் இருந்து சரியான எடையில் பொருட்கள் அனுப்புவது மற்றும் கடைகளில் இறக்குவதையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE