புதுச்சேரி மீனவர்கள் இடையே பயங்கர மோதல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, பெட்ரோல் குண்டுகளை வீசி மோதலில் ஈடுபட்ட வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்களை, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர்.கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் சுருக்கு வலை தொடர்பாக மீனவர்களிடையே இருவேறு கருத்து நிலவி வருகிறது.ஒரு தரப்பினர்
 புதுச்சேரி மீனவர்கள் இடையே பயங்கர மோதல்

அரியாங்குப்பம் : சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, பெட்ரோல் குண்டுகளை வீசி மோதலில் ஈடுபட்ட வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்களை, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர்.

கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் சுருக்கு வலை தொடர்பாக மீனவர்களிடையே இருவேறு கருத்து நிலவி வருகிறது.ஒரு தரப்பினர் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறும், மற்றொரு தரப்பினர் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக வீராம்பட்டினம் - நல்லவாடு மீனவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நல்லவாடு மீனவர்கள் நேற்று காலை அரியாங்குப்பம் கடல் பகுதியில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.அதனை, வீராம்பட்டினம் மீனவர்கள் கண்டித்தனர். அதனால் மோதல் ஏற்பட்டது.ஆவேசமடைந்த வீராம்பட்டினம் மீனவர்கள், நல்லவாடு மீனவர்களை தாக்க ஈட்டி, சுளுக்கி, சூலாயுதம் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், கடல் வழியாக படகுகளில் நல்லவாடு கிராமத்திற்கு புறப்பட்டனர்.அதனை அறிந்த நல்லவாடு மீனவர்களும் வீச்சரிவாள், ஈட்டி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடற்கரையில் திரண்டனர்.

இதற்கிடையே, புதுக்குப்பம் கடற்கரையில் இரு தரப்பு மீனவர்களும் கல், பீர்பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.அதே நேரத்தில் கடல் வழியே பைபர் படகுகளில் நல்லவாடு பகுதிக்கு வந்த வீராம்பட்டினம் மீனவர்கள், வாணவெடியை கொளுத்தி போட்டு, சண்டைக்கு அழைத்தனர்.உடன், நல்லவாடு மீனவர்களும், வாணவெடியை கொளுத்தி போட்டனர். பின்னர், இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

தகவலறிந்து வந்த எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார், மோதலில் ஈடுபட்ட மீனவர்களை கலைக்க முயன்றனர். முடியாததால் போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, கலவரக் கும்பலை கலைத்தனர்.இரு தரப்பு மீனவர்களும் ஆயுதங்களுடன் புதுக்குப்பம் கடற்கரையில் கூடி நிற்பதால் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

மீண்டும் துப்பாக்கி சூடு

நல்லவாடு மீனவர்களை தாக்கச் சென்ற வீராம்பட்டினம் மீனவர்கள், புதுக்குப்பத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, ஊர் திரும்பினர். படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்த சென்றனர்.அதனை அறிந்த, வம்பாகீரப்பாளையம் மீனவர்கள், ஈட்டி, சுளுக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடற்கரையில் திரண்டு, கடலில் படகில் வந்து கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கத் துவங்கினர்.உடன், வீராம்பட்டினம் மீனவர்கள் வாணவெடிகளை கொளுத்தி போட்டும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.பி., ரட்சனாசிங் தலைமையிலான போலீசார், இருதரப்பு மீனவர்களையும் கலைக்க முயன்றனர்.முடியாததால், போலீசார் ஐந்து முறை வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, கும்பலை கலைத்தனர்.அதிகாரிகள் சமாதானம்:பின்னர் மீண்டும் மீனவர்கள் ஆயுதங்களுடன் கூடினர்.

அதனைத் தொடர்ந்து சப் கலெக்டர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், சீனியர் எஸ்.பி., ரட்சனாசிங் உள்ளிட்டோர் மீனவர்களை சமாதானப்படுத்தினர்.இதேபோல, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வீராம்பட்டினம் சென்று ஆயுதங்களுடன் திரண்டிருந்த மீனவர்களை சமரசம் செய்து, கலைந்து போகச் செய்தனர்.

படகு எரிப்பு

வீராம்பட்டிணம் மீனவர்கள் நேற்று மாலை விசைப் படகுகளில் சென்று, நல்லவாடு மீனவர்களின் படகில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அதில் படகு மற்றும் மீன்பிடி வலைகள் தீப்பற்றி எரிந்தன..கடலோர காவல் படையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.தொடர்ந்து, புதுக்குப்பம் பகுதியில் நிறுத்தியிருந்த நல்லவா்டு மீனவர்களின் 4 படகுகளை கயிறு கட்டி வீராம்பட்டிணத்திற்கு இழுத்துச் சென்றனர்.மீனவர்கள் மோதல் காரணமாக நல்லவாடு, புதுக்குப்பம், வீராம்பட்டிணம், தேங்காய்த்திட்டு துறைமுகம், வம்பா கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.

அரசின் அலட்சியமே மோதலுக்கு காரணம்

புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களில், பெரும்பாலான மீனவ கிராமத்தினர் சுருக்கு வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக, கடந்த மாதம் ஊர்வலமாக சட்டசபைக்கு சென்று, சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 22ம் தேதி வீராம்பட்டினம் மீனவர்கள், சுருக்கு வலையை தடை செய்ய வலியுறுத்தி படகுகளில் கறுப்புக் கொடி கட்டி, கடல் வழியே தலைமை செயலகம் எதிரில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுருக்கு வலை பிரச்னை மீனவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்து வந்த போதிலும், அதனை அதிகாரிகள் அலட்சியப் படுத்தியதால், நேற்று பெரும் மோதலாக வெடித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X