சென்னை:'தமிழக விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறும் திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும், முதல்வர்ஸ்டாலின் குறுக்கே நிற்பது வேதனை அளிக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்கள்
முதல்வருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர் வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு மாநில விவசாயிக்கும், ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்க துவங்கியபோது, 'கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய அரசு எப்படி நேரடியாக உதவலாம்? மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக எப்படி இந்த முடிவு எடுக்கலாம்?' என, தாங்கள் ஏன் போர்க்குரல் எழுப்பவில்லை?
ஆனால், வேளாண் சட்டங்களை மட்டும் எதிர்க்கிறீர்கள். விவசாயிகள் சுதந்திரமாக, தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்க வழி வகை செய்யும் சட்டத்தை தடுக்க நினைக்கிறீர்கள்.காலம் காலமாக விவசாயிகளை ஏமாற்றி, அதிக லாபம் பெறும் இடைத்தரகர்களை காப்பாற்ற, மாநில அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் சட்டங்களை எதிர்க்கிறது.
போராட்டம் நடப்பதாக சொல்லப்படும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், இடைத்தரகர்கள் தான் போராடுகின்றனர். விவசாயிகள் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இது நன்றாகத் தெரிந்தும், எதிர்க்கட்சி என்பதால் எதிர்க்கிறீர்கள்.கடந்த 2016ம் ஆண்டு தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 23ம் பக்கத்தில், 24வது வாக்குறுதியாக, 'வேளாண் பொருள் விற்பனைக்கு புதிய கொள்கை; இடைத்தரர்கள் நீக்க நடவடிக்கை. 'தமிழக விளைபொருளை சர்வதேச சந்தையில் விற்க ஒரு அமைப்பு. குறைந்தபட்ச விலைக்கு பதிலாக, அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி தாங்கள் கூறிய வாக்குறுதிகளுக்கும், புதிய வேளாண் சட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதைத்தானே வேளாண் சட்டங்களாக, மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.நீங்கள் தமிழகத்தில் செய்ய நினைத்தது, இந்தியா முழுதும் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மகிழ்ச்சி அடையாமல் பதற்றமடைவது ஏன்?
பொற்காலம்
இன்ஷூரன்ஸ், சோலார் பம்ப், செயற்கை குளம், கிணறு வெட்ட வசதிகள்என, விவசாயிகளின் பொற்காலமாக மத்திய அரசு திகழ்கிறது.ஆனால், தமிழக விவசாயிகள் வாழ்க்கை வளம் பெறும் திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும், தாங்கள் குறுக்கே நிற்கிறீர்கள் என்பது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE