எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அறை எண் 302: போலீசாரை அதிர வைக்கும் விவகாரம்!

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அறை எண் 302. இது தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் போலீசாரை அதிர வைத்துள்ளது. அது என்ன 302? கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது: கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். அதன்பின், சசிகலா, கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த இளவரசி, சுதாகரன் சிறை சென்றனர். தமிழக முதல்வராக, 2017 பிப்., 16ல் பழனிசாமி பதவி ஏற்றார்.
அறை எண் 302: போலீசாரை அதிர வைக்கும் விவகாரம்!

அறை எண் 302. இது தான் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் போலீசாரை அதிர வைத்துள்ளது.


அது என்ன 302?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறியதாவது: கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தார். அதன்பின், சசிகலா, கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக இருந்த இளவரசி, சுதாகரன் சிறை சென்றனர்.

தமிழக முதல்வராக, 2017 பிப்., 16ல் பழனிசாமி பதவி ஏற்றார். ஏப்., 23 நள்ளிரவில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளைசம்பவங்கள் நடந்தன. அங்கு ஜெயலலிதா அறையில், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், கரடி பொம்மை, நான்கு விலைஉயர்ந்த கைக்கடிகாரங்கள்மட்டுமே கொள்ளை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.


வரித்துறை சோதனை

சில மாதங்களுக்கு பின், நவம்பரில் சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடைய 109 இடங்களில், வருமான வரி துறை, சோதனை நடத்தியது.அப்போது, வருமான வரி துறையின் ஒரு குழு, அதிகாரி சுபஸ்ரீ தலைமையில், சென்னை தி.நகரில் இருக்கும் இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியாவின் வீட்டிலும் சோதனை நடத்தியது.அந்த வீட்டில் இருந்த மொபைல்போன் கேலரி யில், சில ஆவணங்களுக்கான குறிப்புகள் சிக்கின. அவற்றை வைத்து, அவை என்ன மாதிரியான ஆவணங்கள் என்பதை, அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. கிருஷ்ண ப்ரியாவிடம் விசாரித்தபோதும், எந்த விபரம் என்று சொல்லவில்லை.


அறை எண் 302!

சோதனை முடிந்த பின், வருமான வரித் துறை சென்னை அலுவலகத்தை தொலைபேசி வழியாக, மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.'சசிகலா தொடர்புடைய சில ஆவணங்கள், சென்னை, சி.ஐ.டி., காலனியில் இருக்கும், 'ஷைலீ நிவாஸ் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில், அறை எண், 302ல் வைக்கப்பட்டுள்ளது' என்றார்.உடனே, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பூட்டப்பட்டிருந்த அறையை உடைத்து, சோதனை நடத்தினர். அங்கே, ஐந்து ஆவணங்கள் கிடைத்தன. அவற்றின் மதிப்பு 1,600 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என, கணிக்கப்பட்டது.

அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களும், சோதனையின் போது கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த தகவல்களும் ஒத்துப் போயின. உடனே, அறை எண் 302ல் தங்கியது யார் என்ற கேள்வி எழுந்தது. சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் விசாரிக்கப்பட்டனர். கேரளாவை சேர்ந்த செபஸ்டின் என்பவரின் டிரைவிங் லைசன்சை அடையாள அட்டையாக கொடுத்து, அறை எடுத்து தங்கியது கண்டறியப்பட்டது.


கோட்டயத்தில் விசாரணை

சசிகலா தரப்புக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி சோதனை நடந்த நாளுக்கு முந்தைய நாள், அந்த அறை வாடகைக்கு எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனே, வருமான வரித் துறை குழு கோட்டயத்துக்கு சென்று விசாரித்தது. அங்கிருந்த செபஸ்டினிடம் விசாரித்த போது, அவரது டிரைவிங் லைசன்சை யாரோ மோசடியாக பயன்படுத்தி, அறை எடுத்து தங்கியது தெரிய வந்தது. கடந்த 2015ல், செபஸ்டின் சென்னை வந்துள்ளார். மது அருந்தி விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஓட்டியுள்ளார். அப்போது நடந்த வாகன சோதனையில் சிக்கியுள்ளார்.

தமிழக போலீசார், அவரது ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை பறிமுதல் செய்தனர். அதன்பின், அது செபஸ்டினிடம் திருப்பி கொடுக்கப்படவில்லை. போலீசார் பறிமுதல் செய்த செபஸ்டினின் டிரைவிங் லைசன்ஸ், வெளியே எடுத்து செல்லப்பட்டு, அறை எண் 302ல் தங்க அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு, இந்த விவகாரத்தில் வருமான வரி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.


மீண்டும் விசாரணை

தற்போது தான் இந்த விபரங்கள், கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீசுக்கு கிடைத்துள்ளது.அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடையவை. கோடநாடு எஸ்டேட் தொடர்புடைய ஆவணங்கள், அவற்றில் பிரதான இடம் பெற்றுள்ளன. அதனால், அந்த ஆவணங்களை யார், அறை எண் 302ல் வைத்தது என்ற கேள்வி, விசாரணை அதிகாரிகள் பலருடைய மூளையை குழப்பிஉள்ளது. கோடநாடு கொலைக்கும், வருமான வரி துறையிடம் இருக்கும் விபரங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். ஆனால், புது தகவல் ஏதும் கிடைக்கவில்லை.ஆனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் கூறும் விஷயங்கள், வேறு திசையில் பயணிக்கின்றன.


புதிய கோணம்

கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் போன்றோர் கொடுத்திருக்கும் வாக்குமூலம், புதிதாக சொல்லும் விஷயங்கள் என, எல்லாவற்றையும் வைத்து போலீஸ் தரப்பு, இந்த வழக்கை புது கோணத்தில் எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது. அறை எண் 302ல் சிக்கிய ஆவணங்கள், கோட்டயம் செபஸ்டின் பெயரில், அந்த அறையில் தங்கியது யார் என்பது குறித்து, மீண்டும் விசாரணை நடத்தலாமா என, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.ஒரு வேளை, அதிலிருந்து கிடைக்கும் விபரங்கள், சயான் உள்ளிட்டோர் கூறும் விபரங்களுடன், எங்காவது ஒத்து போனால், செபஸ்டின் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு உயிர் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


302ல் கிடைத்த சொத்துக்கள்!

-கிருஷ்ண ப்ரியா வீட்டில் கிடைத்த விபரங்கள் மற்றும் அறை எண் 302ல் கிடைத்த ஆவணங்கள், சென்னை பெரம்பூர் எஸ் - 2 தியேட்டர்; சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஓசோன் ஸ்பிரே ரிசார்ட்; மதுரையில் உள்ள ஒரு வணிக வளாகம், சர்க்கரை ஆலைக்கு தொடர்புடையவை என, வருமான வரி துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-202116:28:22 IST Report Abuse
Kanthan Iyengaar சாமர்த்தியம் அடேங்கப்பா வகை...
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
30-ஆக-202115:56:23 IST Report Abuse
jysen The people especially the students should be allowed to visit the Cave of the Ali Baba and 40 Thieves.
Rate this:
Cancel
தமிழ் எனது உயிர் - Kabul,ஆப்கானிஸ்தான்
30-ஆக-202113:14:38 IST Report Abuse
தமிழ் எனது உயிர் இவ்வளவும் செஞ்சுட்டு சசிகலா இன்னமும் தெனாவட்டா திரியிற பாருங்க அங்கேதான் நமது சட்டம் பல்லை காட்டுகிறது ஸ்டாலின் அவர்களும் ஒரு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது நல்லது அல்ல
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-202116:26:32 IST Report Abuse
Kanthan Iyengaarநாயகனே அவர் தானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X