சந்தைகளில் துணி ரகங்களின் தேவை டல் :பாதியாக குறைக்கப்பட்டது ஜவுளி உற்பத்தி அலை... கிடைக்கவில்லை விலை...! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்தைகளில் துணி ரகங்களின் தேவை 'டல்' :பாதியாக குறைக்கப்பட்டது ஜவுளி உற்பத்தி அலை... கிடைக்கவில்லை விலை...!

Added : ஆக 30, 2021
Share
சோமனுார்:கொரோனா அலையால், காடா துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகளில், கிரே காடா துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சொந்த ரகமாகவும் மற்றும் கூலியின் அடிப்படையில் நெசவு செய்யப்படும் துணி ரகங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு

சோமனுார்:கொரோனா அலையால், காடா துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகளில், கிரே காடா துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சொந்த ரகமாகவும் மற்றும் கூலியின் அடிப்படையில் நெசவு செய்யப்படும் துணி ரகங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தினமும் பல கோடி மீட்டர் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக இரு மாவட்டங்களும் உள்ளன.ஸ்பின்னிங் மில்களில் நுால் ரகங்கள் உற்பத்தி, விசைத்தறிகளில் துணிரகங்கள் உற்பத்தி, துணி ரகங்கள் விற்பனை இந்த மூன்றும் சீராக இருந்தால் தான், ஜவுளி தொழில் நிலையாக இருக்கும். தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு தடையின்றி கிடைக்கும்.கொரோனா முதல் அலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தில் ஜவுளித்தொழில் முடங்கியது. ஊரடங்கு முடித்து, ஜவுளி சந்தை இயல்பு நிலைக்கு மெல்ல, மெல்ல திரும்ப பல மாதங்கள் ஆயின. இரண்டாவது அலையால், மீண்டும் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை ஏற்றத்தால், நுால் ரகங்களின் விலை சீராக இல்லாமல் போனது. நுால் விலைக்கு ஏற்ப துணி விலை ஏறவில்லை. அதிக விலைக்கு நுால் வாங்கியவர்கள், துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தை சந்தித்தனர். இனியும் தாக்குப்பிடிப்பது சிரமம் என்பதால், ஜவுளி உற்பத்தியாளர்கள், உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:கொரோனா தொற்று பரவலால், உள்நாடு மட்டுமில்லாமல் உலக நாடுகளும் நிலை குலைந்து போயுள்ளன. சந்தைகளில் துணி ரகங்களின் தேவை குறைந்து விட்டது. அதனால், துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. அசலுக்கு கூட விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளது. அதிகளவு விலையை குறைத்து கொடுத்தால் தான், வியாபாரிகள் துணி ரகங்களை வாங்குகின்றனர். மக்களும் கடைகளுக்கு சென்று துணி வாங்குவதை குறைத்து விட்டனர். கடைகளில் துணி வகைகள் தேங்கியுள்ளன; விற்பனை படு மந்தமாக உள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் குறைந்து விட்டது. ஓணம் உட்பட பண்டிகைகள் வந்தபோது, மார்க்கெட் சூடு பிடிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து துணி ரகங்களின் விலை குறைந்து வருவதால், உற்பத்தியை குறைப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால், உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டோம்.

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு அனைத்தும் திரும்பினால் தான் மாற்றம் ஏற்படும். வரும் தீபாவளி பண்டிகைக்கு ஓரளவு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்துள்ளோம். அதுவரை தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் குறைந்த அளவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறோம். மந்த நிலை நீங்கி இயல்பு நிலை வந்தால் மட்டுமே முழு உற்பத்தியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X