சண்டிகர் : ''ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல், நம் நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தில் பல புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது. தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி, தேச விரோத சக்திகள், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை தடுக்க மத்திய அரசு உஷார் நிலையில் உள்ளது. எப்பேர்பட்ட சூழ்நிலைகளையும் சமாளிக்க நம் படைகள் தயார் நிலையில் உள்ளன,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுதுமாக திரும்ப, இரண்டு வார கால அவகாசம் இருந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பினார். தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 180க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கார் மீது அமெரிக்க படைகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், நம் நாட்டின் பாதுகாப்பு நிலவரத்திற்கு புதிய சவால்களை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு அரண்
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலையில், தேசிய பாதுகாப்பு குறித்து நேற்று நடந்த கருத்தரங்கில் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீர் விமான படை தளத்தில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க, புதுப் புது உத்திகளை நம் ராணுவத்தினர் கையாண்டு வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பில் மிகப் பெரிய சக்தியாக நம் நாடு உருவெடுப்பது, பல சிறிய நாடுகளுக்கும் பாதுகாப்பு அரணாக அமையும். நாம் ஒரு போதும் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை.இந்தியா - பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கையில் குறைபாடு உள்ளது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் நாம் பாகிஸ்தானிடம் உஷாராக இருக்க வேண்டி உள்ளது.
முழு அதிகாரம்
இரு நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை மீறுவதன் வாயிலாக ஒரு பயனும் இல்லை என்பதை பாக்., உணர்ந்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தானால் விஷம செயல்களில் ஈடுபட முடியவில்லை. கடந்த 1965, 1971ல் நடைபெற்ற போர்களில் பாக்., நம்மிடம் தோல்வியை சந்தித்தது. எனவே, நம்முடன் நேரடியாக போரிட்டு வெல்ல முடியாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
எனவே தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத இயக்கங்களுக்கு பயிற்சி அளித்து, பண உதவி செய்து வளர்த்துவிட்டு நமக்கு எதிராக ஏவி விடுகின்றனர்.ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க, கடந்த ஏழு ஆண்டுகளாக ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள பயங்கரவாத குழுக்களுக்கும் விரைவில் முடிவு கட்டப்படும்.தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்வதை மோடி அரசு அனுமதிக்காது. எனவே தான், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பயங்கரவாதிகளை ஒடுக்குவது மட்டுமின்றி, தேவைபட்டால் எல்லை தாண்டி பயங்கரவாதிகளின் புகலிடங்களை அழிப்பதிலும் நம் வீரர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போதுநிரூபித்துள்ளோம். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் நம் நாட்டில் படிப்படியாக அழிந்து வருகின்றன.அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல், நம் பாதுகாப்பு நிலவரத்தில் பல புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது. நாளுக்கு நாள் அங்கு ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.
இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி தேச விரோத சக்திகள், எல்லையில் பயங்கரவாத நடவடிக்கையை ஊக்குவிப்பதை தடுக்க மத்திய அரசு உஷார் நிலையில் உள்ளது.
தரைவழி, ஆகாய மார்க்கம், கடல் வழி என, எந்த திசையில் இருந்து அச்சுறுத்தல் வந்தாலும் அதை நாம் எளிதில் சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக உள்ளோம்.
எப்பேர்பட்ட சவால்களையும் எதிர்கொள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
சீன விவகாரத்தை பேசி தீர்ப்போம்!
இந்தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னைக்கு பேச்சு வாயிலாக தீர்வு காண்பதையே நாம் விரும்புகிறோம். எல்லையில் அத்துமீறுவதையும், நம் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. எல்லைகளின் புனிதத்தை மீற, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE