புதுடில்லி :'கொரோனா வைரஸ் புதிதாக உருமாறினால், இந்தியாவில் மூன்றாவது அலை, அக்., - நவ., மாதங்களில் உச்சத்தை எட்டும். அதே நேரத்தில், இரண்டாவது அலையுடன் ஒப்பிடுகையில், பாதிப்பு, 25 சதவீதமே இருக்கும்' என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
கான்பூர், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் கணித நிபுணர் மணீந்திர அகர்வால் உட்பட மூன்று பேர் குழு, கணித அடிப்படையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.அந்தக் குழு வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் புதிதாக உருமாறாத நிலையில், தற்போதுள்ள நிலையே நாட்டில் தொடரும். அதே நேரத்தில், செப்.,ல் வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்தால், மூன்றாவது அலை, அக்., - நவ., மாதங்களில்உச்சத்தை எட்டும்.மூன்றாவது அலை உருவானாலும் பாதிப்பு அதிகமாக இருக்காது.
இரண்டாவது அலையுடன் ஒப்பிட்டால், அதில் 25 சதவீதம் அளவுக்கே பாதிப்பு இருக்கும்.அதாவது, இரண்டாவது அலையில் உச்சத்தை எட்டியபோது, நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், மூன்றாவது அலையில் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு ஒரு லட்சமாக இருக்கும்.தற்போது, தடுப்பூசி செலுத்துவது வேகமெடுத்துள்ளது. இதுவரை 63 கோடி, 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதனால், மூன்றாவது அலை ஏற்பட்டாலும் பாதிப்பு குறைவாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.