சென்னை :அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும்,நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு அனுமதி
தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகளை நாளை முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மற்ற மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று பல்கலைநிர்வாகம் தெரிவித்து உள்ளது. மாணவர்களுக்கான முழுமையான விடுதி வசதிஇருந்தால் மட்டும், அனைத்து மாணவர்களையும் அழைக்கலாம் என, கல்லுாரிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:தமிழக அரசு அறிவிப்பின் படி, மாணவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில், அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி.கட்டட வடிவமைப்பியல் கல்லுாரி, குரோம்பேட்டை ஐ.ஐ.டி., ஆகியவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், நாளை முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.
சமூக இடைவெளி
சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகம் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட பிற இடங்களிலுள்ள அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகளிலும், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களை சமூக இடைவெளி பின்பற்றி அமர வைக்க வேண்டும் என்பதால், முதல் கட்டமாக இறுதியாண்டு மாணவர்களை மட்டும் வர வைத்துள்ளோம்.அடுத்து வரும் 10 நாட்களுக்குள், கல்லுாரிகளின் இட வசதி, விடுதி வசதிகளை பொறுத்து, ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் படிப்படியாக நேரடி வகுப்புகள் துவங்கப்படும்.
அண்ணா பல்கலையின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரி முதல்வர்களும், தனியார் கல்லுாரி முதல்வர்களும், இடவசதிக்கு ஏற்ப, மற்ற ஆண்டு மாணவர்களை வரவழைக்க முடிவெடுக்கலாம். நேரடி வகுப்புகள் நடந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடக்கும். வெளியூர் மாணவர்கள் அவற்றில் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE