போக விரும்பாத மூணு பேரு... போனவரு வசூலு சூப்பரு! | Dinamalar

'போக விரும்பாத' மூணு பேரு... 'போனவரு' வசூலு சூப்பரு!

Updated : செப் 01, 2021 | Added : ஆக 30, 2021 | |
சுடச்சுட டீயை ருசித்தவாறே, ''மித்து... நீ ஒரிஜினல் ஊட்டி துாள்ல, டீ போடற போல... செம டேஸ்ட்ப்பா...'' என புகழ்ந்தாள் சித்ரா.''ஒரு சில வியாபாரிங்க, சாயம் கலந்து, கலப்பட டீத்துாள் தயாரிச்சு விக்கறாங்களே... அதனாலதான், ஒரிஜினல் டீத்துாளானு பாத்து பாத்து வாங்கறேன்.''போன வாரம், அவிநாசி தாமஸ்புரத்துல கலப்பட டீத்துாள் தயாரிச்சு வித்ததா சொல்லி, உணவு பாதுகாப்பு பிரிவு
 'போக விரும்பாத' மூணு பேரு... 'போனவரு' வசூலு சூப்பரு!

சுடச்சுட டீயை ருசித்தவாறே, ''மித்து... நீ ஒரிஜினல் ஊட்டி துாள்ல, டீ போடற போல... செம டேஸ்ட்ப்பா...'' என புகழ்ந்தாள் சித்ரா.

''ஒரு சில வியாபாரிங்க, சாயம் கலந்து, கலப்பட டீத்துாள் தயாரிச்சு விக்கறாங்களே... அதனாலதான், ஒரிஜினல் டீத்துாளானு பாத்து பாத்து வாங்கறேன்.

''போன வாரம், அவிநாசி தாமஸ்புரத்துல கலப்பட டீத்துாள் தயாரிச்சு வித்ததா சொல்லி, உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலருங்க, ஒருத்தரைப் பிடிச்சு, 116 கிலோ கலப்பட டீத்துாளை பறிமுதல் பண்ணாங்க. அவரோட வீட்ல போன வருஷம், ஒரு டன் கலப்பட டீத்துாளை, இதே அதிகாரிங்க தான் பிடிச்சாங்க; அவரு மேல வழக்கும் பதிவும் பண்ணாங்க.

''அந்த வழக்கு எந்த பாதிப்பையோ, மன மாற்றத்தையோ அந்த வியாபாரிகிட்ட ஏற்படுத்தல... திரும்பவும் கலப்பட டீத்துாள் தயாரிக்கிற வேலைல இறங்கிட்டாரு...

''இவங்கள்லாம் திருந்தணும்னா கடுமையா தண்டனை கொடுத்தா தான் நல்லது. தண்டனை தாமதமாவதும் தப்பு... 'சுப்ரமணி' புது வீட்டுக்கு பால் காய்ச்றாங்களாம். அழைப்பு வந்திருக்கு'' என்றாள், மித்ரா.

'பளபள'க்கப்போகுது பங்களா''கார்ப்பரேஷன் பெரிய அதிகாரிக்கு 'குவார்ட்டர்ஸ்' காலேஜ் ரோட்ல இருக்கு. அவருக்கு வீடு பிடிக்கலையாம். தன்னோட அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி, கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டுல இருக்கிற, பங்களாவை கொடுங்கன்னு கேட்டிருக்காரு. மொதல்ல தயக்கம் காட்டுன பொதுப்பணித்துறை அதிகாரிங்க, இப்ப, பங்களாவ இவருக்கு ஒதுக்கிட்டாங்க. அங்கு, பல லட்சம் ரூபாய் செலவுல, உள் அலங்கார வேலை நடந்துட்டு இருக்காம். ஐ.ஏ.எஸ்., அதிகாரிங்கறதுனாலதான் ஒதுக்கறோம்னு கறாரா சொல்லீட்டாங்களாம்'' என்று புதிய தகவலை சொன்னாள் சித்ரா.

''அக்கா... இனிமே கார்ப்பரேஷனுக்கு எப்பவுமே ஐ.ஏ.எஸ்., அதிகாரிய தான் நியமிக்கப்போறாங்க... அதனால, அந்த பங்களா, இனி கார்ப்பரேஷன் அதிகாரிக்கானதாகவே இருக்கப்போகுது. சரி... கார்ப்பரேஷன்ல, 'தீயா வேலை செய்யணும் குமார்'னு சுறுசுறுப்பா வேலை நடந்தா சரிதான்'' என்ற மித்ராவிடம் கலகலப்பு.

'சமூக சேவை'

''தடுப்பூசி 'டோக்கன்' தர்றது முதற்கொண்டு, முகாமுக்கு மக்களை கூட்டிட்டு வர்றதுன்னு, ஆளும் கட்சிக்காரங்க சுறுசுறுப்பா வேல பாக்குறாங்க. அப்பத்தான் வரக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்ல, ஓட்டு அள்ள முடியும்னு கணக்கு போடுறாங்க... உண்மையான சமூக அக்கறையோட, ஆளும் கட்சிக்காரங்க இதைச் செஞ்சாங்கன்னா பாராட்டலாம்.

''தடுப்பூசி போடுற விவகாரத்துல, துவக்கத்துல ஆளும் கட்சிக்காரங்களுக்கும்,அ.தி.மு.க.,காரங்களுக்கும் அடிக்கடி பிரச்னை வந்துச்சு. இப்ப, அ.தி.மு.க.,காரங்க 'சைலன்ட்' ஆகிட்டாங்க. இருந்தாலும், ஆளும் கட்சிக்கு போட்டியா, எப்படிப்பட்ட'சமூக சேவை' செஞ்சா மக்களை கவரலாம்னு அ.தி.மு.க.,காரங்க யோசிச்சுட்டு இருக்காங்களாம்... எது எப்படியோ, 'சமூக சேவை', சமூகத்துக்கு பயன்பட்டா சரிதான்'' என்ற, சித்ரா சொன்னதை ஆமோதித்தாள் மித்ரா.

''சமீபத்துல, கமல் கட்சி நிர்வாகிகளோட ஆலோசனை கூட்டம் சென்னைலநடந்திருக்கு. திருப்பூர்ல இருந்து கூட்டத்துல கலந்துகிட்ட மாநில பொறுப்பு வகிக்கிற நிர்வாகிங்ககிட்ட, 'உங்க ஊர்ல நிறையபதவி காலியா இருக்கு;உள்ளாட்சி தேர்தல்வர்றதுக்குள்ள நிரப்ப வேண்டியது தானே'ன்னு, கேட்டிருக்காங்க... 'உறுப்பினர் சேர்க்கிற வேலைய கவனிச்சுட்டு தான் இருக்கோம். ஆனா, மாவட்ட தலைவரே இல்லையே'னு இவங்க சொல்லிருக்காங்க... 'நல்லா ஆளா பாருங்க... நியமிச்சுடலாம். உள்ளாட்சி தேர்தல்ல ஓட்டு வாங்கி குவிக்கணும்'னு சொல்லிருக்காங்களாம். 'தலை' இல்லைனா சிக்கல்தானே'' என்று கேட்டாள், மித்ரா.

''உண்மையான சமூக சேவைக்கான எண்ணம் மனசில இருந்து வரணும். ஆனா இப்ப கட்சிகளோட 'சமூக சேவை' எல்லாம், ஓட்டு வேட்டையை மையமா வச்சுத்தானே இருக்கு'' என்று கவலைப்பட்டாள் சித்ரா.

'அட்வைஸ்' போதுமா?

''கொஞ்ச நாளா, பி.என்., ரோடு, போயம்பாளையம் பகுதில, வழிப்பறி அதிகமாகிடுச்சாம். அதுவும், 'மொபைல் போன்'ல பேசிக்கிட்டே வர்றவங்ககிட்ட இருந்து, போனை பறிச்சுட்டு போயிடறாங்களாம். ரெண்டு மாசத்துல மட்டும், ஆறு பேர், மொபைல் போனை பறிகொடுத்திருக்காங்க. அனுப்பர்பாளையம் போலீஸ்ல புகார் கொடுத்தாலும், போலீஸ்காரங்க புகாரை வாங்கிக்க மாட்டேங்கறாங்களாம். 'நீங்க எதுக்கு போன் பேசிக்கிட்டே போறீங்க'னு 'பிராக்டிக்கலா' கேட்டு, திணறடிக்கிறாங்களாம்... அறிவுரை சொல்ற போலீஸ், திருடர்களை பிடிக்க 'பொறி' வைக்காமலே இருக்கறாங்கனு புகார்தாரர்கள் புலம்பறாங்களாம்'' என்று, 'விறுவிறு'வென பேசி முடித்தாள் மித்ரா.

ஆபீசரா... அப்டீன்னா!

''பல்லடம் சாலையோரம் இருக்கிற ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த, வேளாண் விற்பனை வணிகத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் போயிருக்காங்க. சில அலுவலர்ங்க, ஆக்கிரமிப்பு கடைகள மொபைல் போன்ல, 'வீடியோ' எடுத்திருக்காங்க. 'ஹலோ...நீங்க யாரு? எங்க கடையை எதுக்கு வீடியோ எடுக்கிறீங்க? கடையை நாங்க ஏன் காலி பண்ணணும்'னு, கேள்வி மேல கேள்வி கேட்டிருக்காங்க அங்க இருந்த வியாபாரிங்க.

''டென்ஷன் ஆன, அதிகாரிங்க, 'நாங்க ஆபீசருங்க, பார்த்தா தெரியலையா'ன்னு சொல்லி, தங்களோட அடையாள அட்டையை எடுத்து வியாபாரிகள்கிட்ட காண்பிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''பொதுவா, ரெண்டு மாசத்துக்கு ஒரு முறையாவது கண்காணிப்புல ஈடுபட்ட அதிகாரிங்க, கொரோனாவால மாசக்கணக்குல அங்க போகல... அதிகாரிகளோட முகத்தை, வியாபாரிங்க மறந்துட்டாங்க போல,'' என கலாய்த்தாள் மித்ரா.

''திருப்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்தவர, திருப்பத்துாருக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. புதிய அதிகாரி இன்னும் நியமிக்கல. இதனால, பகல் நேரத்துலயே ஸ்டேஷன் பூட்டி கெடக்குதாம். போலீஸ்காரங்க யாரும் இருக்கறது இல்லையாம்,

''திரும்பவும் கொரோனா பரவல் அதிகமாகிட்டு வர்றதால, அடுத்த மாசம், 30ம் தேதி வரைக்கும் மத்திய அரசு வேலை, ரயில்வே வேலைக்கு, பணி நியமனம், பணிமாறுதல்ன்னு எதுவும் கிடையாதுன்னு நிர்வாகம் சொல்லியிருக்கு. அப்படீன்னா, அந்த ஸ்டேஷனுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு, பெரிய ஆபீசர் நியமிக்கமாட்டாங்க. வேலை பாக்குறவங்களுக்கு ஜாலி தான்'' என்று புன்னகைத்தாள் சித்ரா.

'குறுநில மன்னர்கள்'
''சிட்டி போலீஸ்ல, பணிமாறுதல் பட்டியல் தயார் பண்றதுல நடந்த 'தில்லாலங்கடி' வேலை வெளிய தெரிஞ்சதால, ரெண்டாவதா ஒரு 'டிரான்ஸ்பர் ஆர்டர்' தயார் பண்ணியிருக்காங்க. இந்த பட்டியல்ல இருக்க மூணு இன்ஸ்பெக்டருங்க, எதிர்பார்த்த ஸ்டேஷன் கிடைக்கலைன்னு கவலைல இருக்காங்களாம். அதுல, ரெண்டு பேரு, மதுவிலக்கு பிரிவுல காலியா இருக்கற இடமாவது கிடைக்குமான்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க.

''மதுவிலக்கு பிரிவில இதுக்கு முன்னாடி இருந்த ஸ்டேஷன் அதிகாரியை, வெளியூருக்கு இடமாற்றம் செஞ்சுட்டாங்க. அவரு, உடனே கிளம்பாம, இந்த மாசம், தனக்கு வரவேண்டிய கலெக்ஷனை முடிச்சுட்டு தான் போயிருக்காரு. அந்த ஸ்டேஷன்ல, 20 பேர் வேலைல இருக்கணுமாம்; ஆனா, நாலு பேரு மட்டும் தான் இருக்காங்களாம். குறுநில மன்னர்கள் மாதிரி, அவங்க 'ஆதிக்கம்' தாங்கலையாம்,'' என்று விவரித்தாள் மித்ரா.

''மனுக்கள்னு வந்தாலே, பட்டா கேட்டுதான் பாதிக்கும் மேல வருதுனு அதிகாரிங்க சொல்றாங்க... அவ்ளோ பேருக்கு பட்டா கொடுக்கறது சாத்தியம்னு தெரியலேனு சொல்றாங்க...திருப்பூர் வடக்கு தாலுகா சூசையாபுரம் மிலிட்டரி காலனில, 40 வருஷமா வசிக்கிற மக்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சில ஏற்பாடு நடந்தது. பட்டா கொடுக்க,எம்.எல்.ஏ., ஏற்பாடு செஞ்சாரு... ஆனா, அதுக்குள்ள தேர்தல் அறிவிச்சுட்டாங்க... இப்ப ஆட்சி மாறினதால அதிகாரிங்க, இத்திட்டத்தை கிடப்பில் போட்டுட்டாங்க... மீண்டும் முதல்ல இருந்து, துவங்கணுமானு மக்களிடம் சலிப்பு... 'ஆட்சி மாறுனா காட்சி'யும் மாறத்தானே செய்யுது...'' என்று யதார்த்தத்தை பதிவு செய்தாள் சித்ரா.

''இலவச பட்டா எனக்கு வேண்டாம்க்கா... இருக்கற இடத்துல ஒரு இலவச பங்களா கட்டி தந்தா 'ஜம்'னு இருக்கும்'' என்று நகைச்சுவையாககூறிய மித்ராவின் தலையில்குட்டு வைத்தாள், சித்ரா.

''டென்ஷன் ஆன, அதிகாரிங்க, 'நாங்க ஆபீசருங்க, பார்த்தா தெரியலையா'ன்னு சொல்லி, தங்களோட அடையாள அட்டையை எடுத்து வியாபாரிகள்கிட்ட காண்பிச்சிருக்காங்க,''

''அறிவுரை சொல்ற போலீஸ், திருடர்களைப் பிடிக்க 'பொறி' வைக்காமலே இருக்கறாங்கனு புகார்தாரர்கள் புலம்பறாங்களாம்''

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X