தமிழகத்திற்கு உரம் வழங்க மத்திய அரசுக்கு மந்திரி கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு உரம் வழங்க மத்திய அரசுக்கு மந்திரி கடிதம்

Added : ஆக 31, 2021
Share
சென்னை-தமிழகத்திற்கு உர ஒதுக்கீட்டின்படி, உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தின், தென் மேற்கு பருவ மழை காலத்தில், நல்ல மழை பெய்துள்ளது. உரிய நேரத்தில், சேலம் மாவட்டம், மேட்டூர்

சென்னை-தமிழகத்திற்கு உர ஒதுக்கீட்டின்படி, உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தின், தென் மேற்கு பருவ மழை காலத்தில், நல்ல மழை பெய்துள்ளது. உரிய நேரத்தில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பாசனத்திற்காக திறக்கப்பட்டது. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக, நடப்பாண்டில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பரப்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 3.50 லட்சம் ஏக்கரை காட்டிலும், அதிகமாக, 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த, 46 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில், தென்மேற்கு பருவ மழை நல்ல முறையில் வலுப்பெற்றதால், அனைத்து அணைகளும் நிரம்பின. பல ஆண்டுகளுக்கு பின், பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் காரணமாக, கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில், நடப்பாண்டு நெல் பயிர், 10 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலாக, சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, 2.72 லட்சம் ஏக்கரில், கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை, அனைத்து பயிர்களின் சாகுபடி, 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் மேலாக உள்ளது. இதன் காரணமாக, யூரியா, டி.ஏ.பி., உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு, ஏப்ரல் முதல் இம்மாதம் வரை, யூரியா உரம், 3.83 லட்சம் டன், மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2.56 லட்சம் டன் மட்டுமே, உர நிறுவனங்களால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதே மாதங்களில், டி.ஏ.பி., உரம், 1.20 லட்சம் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 87 ஆயிரம் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, அனைத்து பயிர்களுக்கும், அடி உரம் மற்றும் மேல் உரம் அவசியம். யூரியா மற்றும் டி.ஏ.பி., உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே, உரம் வழங்குவதில், குறைவு நிலவினால், பயிர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம், பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.எனவே, உரிய நேரத்தில், யூரியா மற்றும் டி.ஏ.பி., உரங்களை முழுமையாக வழங்கவும். இறக்குமதி செய்யப்படும் உரங்கள், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கும், புதுச்சேரி துறைமுகத்திற்கும் வந்தடைய ஏற்பாடு செய்து தரவும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X