சென்னை : தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக நேற்று துபாய் புறப்பட்டு சென்றார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது, சிங்கப்பூர் சென்று, தற்காலிக சிகிச்சை எடுத்த பின், தேர்தல் நிகழ்சிகளில் பங்கேற்றார். தேர்தல் முடிந்த பின், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சென்னையில் சிகிச்சை எடுத்த பின், சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் முழுமையான சிகிச்சை பெற்றார்.
இந்த சிகிச்சைக்கு பின், அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. தைராய்டு பிரச்னை, தொண்டையில் நோய் தொற்று மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நிலை மோசமானது. கடந்த, 2017 முதல், 2018ம் ஆண்டு வரை, சென்னையில் சிகிச்சை பெற்ற பின், சிங்கப்பூர், அமெரிக்கா என, பல்வேறு நாடுகளுக்கு சென்று, மேல் சிகிச்சைகள் பெற்றார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த், நேற்று காலை, துபாய்க்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்ற அவருடன், அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அவரது உதவியாளர்களும் உடன் சென்றனர்.
லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர், அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த பரிசோதனையின் அடிப்படையில், அவர் துபாயில் இருந்து சிகிச்சை பெறுவதா அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.