தி.நகர் : போக்குவரத்து கழகத்தின் பொறுப்பின்மையால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான தி.நகர் பேருந்து நிலையம், படுமோசமாக உள்ளது.
சென்னை மாநகரின் வர்த்தக மையமாக, தி.நகர் உள்ளது. இங்கு, ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இவற்றில், பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தினமும் திருவிழா போன்று இங்கு மக்கள் குவிவர்.இதனால், தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னையின் மற்ற பகுதிகளுக்கு, பேருந்து சேவை அதிகம் இருக்கும். தினமும், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன;
25 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.தி.நகர் பேருந்து நிலையம், சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில், பேருந்து நிலையத்தில், தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது.பேருந்து நிலையத்தில், பயணியர் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. மேலும், இங்குள்ள பாலுாட்டும் பெண்களுக்கான தனி அறையும் பூட்டியே கிடக்கிறது.பேருந்து நிலையத்தின் நுழைவாயல் அருகே, 'இ -- டாய்லெட்' வைக்கப்பட்டு உள்ளது.
அதுவும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது; மக்கள் முகம் சுளிக்கின்றனர்.தி.நகர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், 'தி.நகர் பேருந்து நிலையத்தை சர்வதேச தரத்தில், பல அடுக்கு பேருந்து நிலையமாக அமைக்க வேண்டும். நவீன் வசதிகள், கடைகள், மருத்துவ உதவி மையம் ஆகியவை அமைத்து மேம்படுத்த வேண்டும்' என, தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி சட்டசபையில் சமீபத்தில் பேசியுள்ளார்.இனியாவது அரசு மற்றும் போக்குவரத்து துறையின் பார்வையில், தி.நகர் பேருந்து நிலைய அவலங்கள் தென்படுமா என, பயணியர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE