இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 02, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்நடு வானில் மாரடைப்பு: விமானி பலிநாக்பூர்-சமீபத்தில், வங்கதேச விமானிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் நாக்பூரில் தரையிறங்கியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.அண்டை நாடான வங்க தேசத்திற்கு சொந்தமான விமானம், 27ம் தேதி மஸ்கட்டில் இருந்து 126 பயணியருடன் டாக்கா புறப்பட்டது.விமானத்தை நவுஷாத் அதவுல்
இன்றைய, கிரைம் ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்


நடு வானில் மாரடைப்பு: விமானி பலி
நாக்பூர்-சமீபத்தில், வங்கதேச விமானிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் நாக்பூரில் தரையிறங்கியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.அண்டை நாடான வங்க தேசத்திற்கு சொந்தமான விமானம், 27ம் தேதி மஸ்கட்டில் இருந்து 126 பயணியருடன் டாக்கா புறப்பட்டது.விமானத்தை நவுஷாத் அதவுல் குய்யும், 49, என்ற விமானி செலுத்தினார். வழியில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக, மஹாராஷ்டிராவின் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவ்விமானம் தரையிறங்கியது.விமானி நவுஷாத், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் செலுத்திய விமானத்தை, வங்கதேசத்தில் இருந்து வந்த மற்றொரு விமானி, தங்கள் நாட்டிற்கு பயணியருடன் கொண்டு சென்றார். சிகிச்சையில் இருந்த நவுஷாத், நேற்று காலை உயிரிழந்தார்.

3 பேருக்கு 'வாரன்ட்'

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்றோருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில், பலரின் பெயர் போலியாக சேர்க்கப்பட்டு அரசு நிதியில் மோசடி நடந்தது உறுதியானது. இது தொடர்பாக இரு ஆய்வகங்கள் மற்றும் அவற்றை ஒப்பந்தம் செய்த நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த மல்லிகா, ஷரத் பந்த் மற்றும் ஆய்வக உரிமையாளர் டாக்டர் நவ்தேஜ் நல்வா ஆகியோருக்கு ஜாமினில் வர முடியாத கைது 'வாரன்ட்' பிறப்பித்து ஹரித்வார் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

என்கவுன்டரில் கொள்ளையன் பலி

ஆக்ரா: உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, பரத்பூர் உட்பட பல இடங்களில் நடந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் தாக்குர் கைதானார். இவர் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக நண்பரின் வீட்டிற்கு போலீசார் நேற்று அவரை அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கியதுடன், அவர்களில் ஒருவரின் துப்பாக்கியை பறித்து முகேஷ் தப்பினார். பிடிக்க முயன்ற போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் முகேஷ் தாக்குர் கொல்லப்பட்டார்.

.பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதி வழியாக நேற்று அதிகாலை பயங்கரவாதி ஒருவர் நம் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றார். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவரிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

வீடு இடிந்து ஏழு பேர் பலி

பித்தோராகர்: உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மலைப்பகுதியில் உள்ள ஜும்மா கிராமத்தில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன.மீட்பு படையினரின் தேடுதல் நடவடிக்கையில் பலியான மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வீடுகளில் இருந்த மற்றவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்பதால் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணிகள் தொடர்கின்றன.


தமிழக நிகழ்வுகள்

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து; 15 பேர் படுகாயம்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, சம்பேரி பஸ் ஸ்டாப் பகுதியில் லாரி சாலையோரம் நின்றிருந்தது. இன்று, காலை, 5:45 காலை, மணி அளவில் சென்னையில் இருந்து, சேலம் நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கண்டக்டர் பயணிகள் அட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களை, அப்பகுதியினர் மற்றும் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சில், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பஸ்சின் முன்புறம் அதிகளவில் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை மாணவர் ஆற்றில் மாயம்

வால்பாறை-வால்பாறைக்கு சுற்றுலா வந்த, சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர், ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

சென்னை, மாம்பலம் பகுதியைச் சேர்ந்த கணேசனின் மகன் ஸ்ரீராம், 25. இவர், கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கிறார். ஸ்ரீராம், நண்பர்கள் ஐந்து பேருடன் நேற்று வால்பாறைக்கு காரில் சுற்றுலா வந்தார்.இவர்கள், சோலையாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள சேடல் டேம் ஆற்றுப் பகுதியில் குளித்தனர். அப்போது ஸ்ரீராம், சுழலில் சிக்கி மாயமானார். ஷேக்கல்முடி போலீசார், மற்றும் தீயணைப்பு வீரர்கள், தேடுதல் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய கொடூரன்

சேலம்-குடும்ப தகராறில் மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய மாநகராட்சி துாய்மை பணியாளரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், குகை எஸ்.எம்.சி., காலனியைச் சேர்ந்தவர் இயேசுதாஸ், 50; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவர் மனைவி ரேவதி, 47; தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். போதை பழக்கத்துக்கு அடிமையான இயேசுதாஸ், தினமும் போதையில் ரேவதியிடம் சண்டையிடுவது வழக்கம்.'டார்ச்சர்' தாங்க முடியாமல், நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் உள்ள தாய் வீட்டுக்கு ரேவதி, கடந்த மே மாதம் சென்றார். குடும்பம் நடத்த வரக் கோரி இயேசுதாஸ் மிரட்டியதால், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில், ரேவதி புகார் அளித்தார்.

இதன்படி, போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். குடும்பம் நடத்த மறுத்து, விவாகரத்து பெற்று கொள்வதாக, ரேவதி எழுதி கொடுத்தார்; 'ரேவதிக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்' என இயேசுதாசும் எழுதி தந்தார்.இதையடுத்து, இரு தரப்பினரும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினர். தாய் ஆராயியுடன் பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிற்கும் நடைமேடைக்கு மாலை 5:30 மணிக்கு ரேவதி சென்றார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த இயேசுதாஸ், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மனைவி, மாமியார் மீது வீசி விட்டு தப்பினார்.அலறி துடித்த இருவரையும், பயணியர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரேவதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆராயி, இரண்டு கைகளில் லேசான காயத்துடன் சிகிச்சை பெறுகிறார். இயேசுதாசை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது.

பசுவை காப்பாற்றிய மூதாட்டி ரயில் அடிபட்டு பலி

திருச்சி,-தண்டவாளத்தில் நின்ற பசுவை காப்பாற்றிய மூதாட்டி, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சிறுக மணியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 62. இவர் நேற்று முன்தினம் மாலை, பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே, தன் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் அவ்வழியே வந்தது.பசுமாடு ஒன்று ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தது. அருகில் சென்று, அதை ராஜேஸ்வரி விரட்டி விட்டுள்ளார். பசு ஓடிவிட, ரயில் ராஜேஸ்வரி மீது மோதியதில், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


latest tamil newsகிருஷ்ணகிரி,-எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்ற காளை இறப்பால், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவர், நந்திதேவா என்ற பெயருடைய காளையை வளர்த்து வந்தார். நான்கு ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் நடந்த எருது விடும் விழாக்களில், இந்த காளை பலமுறை முதல் பரிசை வென்றுள்ளது.வேலுார் மாவட்டம் மேல்மயிலில் 2020ல் நடந்த எருது விடும் விழாவில் 1.25 லட்சம் ரூபாய் முதல் பரிசை வென்றது.

பல்வேறு மாவட்ட மக்களுக்கும் இந்த காளையை நன்கு தெரியும்.உடல்நலக்குறைவால், நேற்று முன்தினம் இரவு காளை இறந்தது. இதையறிந்த வேலுார், சேலம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் காளை வளர்ப்போர், செட்டிமாரம்பட்டி சுற்று வட்டார மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, காளை அடக்கம் செய்யப்பட்டது.

தோழிக்கு திருமண ஏற்பாடு; கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்துார-மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த தோழிக்கு திருமணம் ஏற்பாடு செய்த நிலையில், கல்லுாரி தோழியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் -பெருமாள்பட்டி முதல் கீழத் தெருவை சேர்ந்த தேன்மொழி 21,விஷம் குடித்து இறந்தார்.மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் எம்.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வந்த தேன்மொழியும் , இவருடன் படிக்கும் சோழவந்தானை சேர்ந்த கவுசல்யாவும் நெருங்கிய தோழிகள். இதில் கவுசல்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. திருமணம் முடிந்தால் முன்பு போல் எப்போதும் பேசமுடியாது என தேன்மொழி மனவேதனையில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து விஷம் குடித்து இறந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.


latest tamil news


குழந்தை சித்ரவதை வழக்கு: கள்ளக்காதலனுக்கு வலை

செஞ்சி-குழந்தையை கொடூரமாக தாக்கி 'வீடியோ' பதிவிட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துஉள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி மதுரா, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி துளசி, 22. இவர், தன் இரண்டாவது குழந்தையான 2 வயது பிரதீபை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடிவழகன் கொடுத்த புகாரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த ராம்பள்ளி கிராமத்தில் தாய் வீட்டில் இருந்த துளசியை நேற்று முன்தினம் கைது செய்து, அழைத்து வந்தனர்.துளசியிடம் செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். துளசிக்கும், சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், வீடியோ கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பிரேம்குமார், துளசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

துளசியின் 4 வயது மூத்த மகன் கோகுல், துளசி போன்றும், இளைய மகன் பிரதீப், தந்தை வடிவழகன் போன்றும் இருப்பதாக பிரேம்குமார் கூறியுள்ளார். எனவே, பிரதீபை அடித்து துன்புறுத்தும்படி பிரேம்குமார் கூறியுள்ளார்.இதையடுத்து, பிரதீபை அடித்து சித்ரவதை செய்து, அதை வீடியோ எடுத்து பிரேம்குமாருக்கு அனுப்பியதாக துளசி போலீசாரிடம் கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு துளசிக்கு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மனநல மருத்துவ பரிசோதனையும் நடந்தது.

டாக்டர் பாரதி, துளசியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, பரிசோதனை மேற்கொண்டார்.அதற்கான அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின், துளசியை செஞ்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.துளசி வாக்குமூலத்தின் அடிப்படையில், கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய, தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X