கூடுதல்: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கடந்த ஆண்டைவிட...அரசு பள்ளி மாணவர்கள் 397 பேர் விண்ணப்பிப்பு| Dinamalar

தமிழ்நாடு

கூடுதல்: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கடந்த ஆண்டைவிட...அரசு பள்ளி மாணவர்கள் 397 பேர் விண்ணப்பிப்பு

Added : ஆக 31, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 397 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பொது மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து 720

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 397 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பொது மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து 720 மதிப்பெண்ணுக்கு 180 வினாக்கள் கேட்கப்படும்.ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால், 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறாக பதில் அளிக்கும் வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைத்து கணக்கிடப்படும்.கடந்த கல்வியாண்டில், கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.

இதையொட்டி, 'நீட்' வினாத்தாளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதாவது இதுவரை நடந்த தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும்.தற்போது, நடைபெற உள்ள 'நீட்' தேர்வில், 'ஏ, பி' என இரண்டு பிரிவாக 200 கேள்விகள் கேட்கப்படும். இதில், 'ஏ' பிரிவில் கேட்கப்படும் 140 வினாக்களுக்கும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். 'பி' பிரிவில் கேட்கப்படும் 60 வினாக்களில், 40 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும். 20 கேள்விகளை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தவிர்க்கலாம்.அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், போதிய பயிற்சியின்மையால் 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பினை இழந்தனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களிடையே 'நீட்' தேர்வு குறித்து அச்சம் இருந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இதை சரிசெய்யும் விதமாக கடந்த 2019-20ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 'நீட்' தேர்வு பயிற்சி மையம் துவங்கப்பட்டது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட 212 பேரில், 152 பேர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தொடர்ந்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கியது. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 25 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்காக நடந்த கலந்தாய்வில், 6 பேர் எம்.பி.பி.எஸ்., 5 பேர் பி.டி.எஸ்., என 11 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ படிப்பு செலவினத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டதால், அரசு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த 'நீட்' தேர்வு குறித்த அச்சம் தீர்ந்தது.கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளை திறக்க முடியாத நிலை இருந்தது.

இதனால் அரசு பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் வீட்டில் இருந்தவாரு பாடங்களைக் கற்றனர்.இதில், நீட் தேர்வு எழுத விரும்பிய மாணவ, மாணவிகள், பிளஸ் 1 வகுப்பு தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை 'இ-பாக்ஸ்' என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து, 'நீட் ஆன்லைன் ட்ரெய்னிங் தமிழ்நாடு' மூலமாக சிறப்பு வகுப்பினை கவனித்தனர்.தினமும் 2 மணிநேரம் இலவசமாக 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் முடிந்ததும் மாதிரி தேர்வுகள், மீள்பார்வை நடத்தப்பட்டது.

மாவட்டத்தில், 485 பேர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டனர்.நடப்பு கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 392, அரசு நிதி உதவியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 5 என மொத்தம் 397 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 134 பேர், மாணவிகள் 263 பேர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X