புதுடில்லி-ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், அதிகாரத்தை கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினரை, பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள், சமீபத்தில் சந்தித்து பேசினர். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் செயல்படுத்தப்பட வேண்டிய பயங்கரவாத திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி, தலிபான் அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற, தற்போது ஆறு பயங்கரவாத குழுக்கள் ஊடுருவி உள்ளன.
இந்த குழுக்களை சேர்ந்த, 25 - 30 பயங்கரவாதிகள், நம் பாதுகாப்புப் படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளின் அளவு அதிகரித்திருக்கிறது.ஒவ்வொரு நாளும் பாதுகாப்புப் படையினர் அல்லது அரசியல் கட்சித் தலைவர்கள் மீது, குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள முகாம்களில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளதாக, உளவுத் துறை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.எனவே, நாங்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்கிறோம்; அனைத்திற்கும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.