செஞ்சி : குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ பதிவிட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மணலப்பாடி மதுரா, மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி துளசி,22. இவர், தன் இரண்டாவது குழந்தையான 2 வயது பிரதீப்பை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வடிவழகன் கொடுத்த புகாரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த ராம்பள்ளி கிராமத்தில் தாய் வீட்டில் இருந்த துளசியை நேற்று முன்தினம் கைது செய்து, அழைத்து வந்தனர். துளசியிடம் செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
துளசிக்கும், சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும், வீடியோ கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். பிரேம்குமார், துளசியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். துளசியின் 4 வயது மூத்த மகன் கோகுல், துளசி போன்றும், இளைய மகன் பிரதீப், தந்தை வடிவழகன் போன்றும் இருப்பதாக பிரேம்குமார் கூறியுள்ளார். எனவே, பிரதீப்பை அடித்து துன்புறுத்தும்படி பிரேம்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, பிரதீப்பை அடித்து சித்ரவதை செய்து, அதை வீடியோ எடுத்து பிரேம்குமாருக்கு அனுப்பியதாக, துளசி போலீசாரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு துளசிக்கு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மனநல மருத்துவ பரிசோதனையும் நடந்தது. டாக்டர் பாரதி, துளசியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, பரிசோதனை மேற்கொண்டார்.
அதற்கான அறிக்கை தயார் செய்து கோர்ட்டுக்கு அனுப்பியுள்ளார். இரண்டு மணி நேர பரிசோதனைக்கு பின், துளசியை செஞ்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.துளசி வாக்குமூலத்தின் அடிப்படையில், கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.