செய்திகள் சில வரிகளில்... அலட்சியத்தால் அதிகரிக்கும் ஆபத்து

Added : ஆக 31, 2021
Share
Advertisement
பொள்ளாச்சியில், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றுக்கு, மூலப் பொருளான தேங்காய் மட்டை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன.பெரும்பாலும், நகரத்துக்கு வெளியே இயங்குவதால், இந்த வாகனங்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதிக புகார்கள்

பொள்ளாச்சியில், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. அவற்றுக்கு, மூலப் பொருளான தேங்காய் மட்டை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன.பெரும்பாலும், நகரத்துக்கு வெளியே இயங்குவதால், இந்த வாகனங்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதிக புகார்கள் எழுகின்றன.

வாகனங்களில், தார்பாலின் அல்லது பிளாஸ்டிக் கவர் கட்டியிருந்தாலும், வாகனத்தின் அளவை விட, விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதால், மட்டைகள் ரோட்டில் சிதறுவது வழக்கமாக உள்ளது.ரோட்டில் மட்டைகள் சிதறி விழுவதால், பிற வாகன ஓட்டுனர்களை விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனை, நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வேலை உறுதி திட்டத்தில் கோரிக்கை

வடசித்துார் கட்சி அலுவலகத்தில், மா.கம்யூ., கட்சி சார்பில், தாலுகா தலைவர் கவிபாரதி தலைமையில், செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கொடியேற்றி வைத்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வடசித்துார், சமத்துவபுரத்தில் பட்டா இல்லாத வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். புதிதாக அமைந்த குடியிருப்புகளுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.வடசித்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து, மருத்துவர்கள், செவிலியர்கள் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வடசித்துார் கிளை செயலாளராக சங்கர்கணேஷ், சமத்துவபுரம் கிளை செயலாளராக திருமூர்த்தி, மகளிர் அணி கிளை செயலாளராக சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பாசன நீரில் முறைகேடு அதிகம்

பி.ஏ.பி., திட்டத்தில், நான்காம் மண்டல பாசனத்தில், வடசித்துார் கிளைக்கால்வாயில், முதல் சுற்று நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கில், நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளது.இந்நிலையில், அதிகாரிகள், விவசாயிகளின் தொடர் கண்காணிப்பு இல்லாத நிலையில், இரவு நேரங்களில் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளதால், பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், கடைமடை பகுதிக்கு குறைந்த அளவே நீர் செல்வதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பி.ஏ.பி.,திட்ட அதிகாரிகள், போலீஸ், வருவாய் துறை, மின்வாரிய அதிகாரிகள் குழுவை நியமித்து, கால்வாய் கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாசன நீர் திருட்டை தடுத்து, கடைமடை நிலங்களுக்கு நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆபத்தான நிழற்கூரையால் அச்சம்

பொள்ளாச்சி - வடக்கிபாளையம் ரோட்டில் கொங்கநாட்டான்புதுார் பிரிவில், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தில் பயணிகள் நிழற்கூரை கட்டப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரோடு விரிவாக்க பணியின் போது, நிழற்கூரை சேதமடைந்தது. இதனால், நிழற்கூரைக்குள் மக்கள் நுழையாதபடி கயிறு கட்டி தடையும் விதிக்கப்பட்டது.பலமிழந்த நிழற்கூரை அப்புறப்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன், கேரளா சென்ற கார் ஒன்று, எதிர்பாராத விதமாக, நிழற்கூரையின் ஒரு பக்கசுவரை இடித்து சேதப்படுத்தியது.

தற்போது, மழை பெய்யும் நிலையில், வயதானோர், வேறு வழியின்றி நிழற்கூரைக்குள் காத்திருக்கும் அபாயம் நிலவுகிறது. நிழற்கூரையை உடனடியாக இடித்து அகற்றி, புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பகலிலும் ஒளிரும் தெருவிளக்கு

வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, வால்பாறை நகர், ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், கருமலை, முடீஸ், சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், உயர் கோபுர மின்விளக்கும் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடும் எஸ்டேட் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று பகல் முழுவதும் தெருவிளக்குகள் அணையாமல் எரிந்தன. மின் சிக்கன நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால், பகலிலும் தெருவிளக்குகள் அணையாமல் எரிகின்றன.அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்பு வயரில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், மின்விளக்கு அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

கொசுக்களால் பரவும் 'டெங்கு'

பொள்ளாச்சியில் கடந்த இரு வாரங்களாக மழை, வெயில், குளிர் என தட்பவெப்பம் மாறி மாறி நிலவுகிறது. இது, கொசு பெருக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் பெருக்கமடைந்துள்ளன.கொசுக்களால் பரவும் 'டெங்கு' காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால், கொசு மற்றும் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்துவதில்லை என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

கொசு மருந்து தெளித்தல், மழைநீர் தேங்காமல் பராமரித்தல், கொசுப்புழுக்கள் அழிப்பு பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் பொறுப்புடன் ஈடுபட வேண்டியது கட்டாயம்.காட்சிப்பொருளான உலர் கலன்கள் உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னையை கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவைக்காக, கடந்த, 2012-13ம் ஆண்டில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், சோலார் உலர் கலன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, தென்னை பிரதானமாக உள்ள கிராமங்களில் உள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறை சார்பில், சோலார் உலர் கலன்கள் அமைக்கப்பட்டது. இவற்றின் வாயிலாக, எளிதாக, கொப்பரை உற்பத்தி செய்யலாம்.ஆனால், தற்போது, இவை பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. தற்போது, கொப்பரை உற்பத்தி செய்து, இருப்பு வைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, சோலார் உலர் கலன்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத பாலம்

மடத்துக்குளம்-கொமரலிங்கம் ரோட்டில், மேற்கு நீலம்பூர் பஸ் ஸ்டாப் அருகே சிறு வாய்க்கால் உள்ளது. இதன் மேல், 1981ல் பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தில் போதியளவு ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லை.பொதுமக்கள் கூறுகையில், 'மேற்கு நீலம்பூர், கண்ணாடிப்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில், விளைநிலங்களுக்கு மத்தியில் உள்ளதால், போதிய தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரம், இந்தப் பாலம் இருளில் மூழ்கி உள்ளது'.'இதனால் டிரைவர்கள் நிலைதடுமாறி விபத்துக்கள் நடக்கிறது. எனவே, பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், தெருவிளக்குகளும் அமைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X