அமெரிக்க படைகள் வாபஸ்: தலிபான் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம்

Updated : செப் 02, 2021 | Added : ஆக 31, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
காபூல் : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகளுக்கு எதிராக 20 ஆண்டுகள் நீடித்த அமெரிக்க ராணுவத்தின் போர் முடிவுக்கு வந்தது. ஆப்கனிலிருந்து தங்கள் படைகளை முழுமையாக அமெரிக்கா 'வாபஸ்' பெற்றுள்ளது. இதையடுத்து காபூல் விமான நிலையமும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.அல் - குவைதா பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2001ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் களமிறங்கின.
ஆப்கன், அமெரிக்க படைகள் 'வாபஸ்!'தலிபான், காபூல்

காபூல் : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகளுக்கு எதிராக 20 ஆண்டுகள் நீடித்த அமெரிக்க ராணுவத்தின் போர் முடிவுக்கு வந்தது. ஆப்கனிலிருந்து தங்கள் படைகளை முழுமையாக அமெரிக்கா 'வாபஸ்' பெற்றுள்ளது. இதையடுத்து காபூல் விமான நிலையமும்
தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

அல் - குவைதா பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2001ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் களமிறங்கின. அதன்பின் தலிபான்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் துவங்கியது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய போராக ஆப்கானிஸ்தான் நடவடிக்கை நீடித்து வந்தது.இதற்கிடையே ஆப்கனில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தங்கள் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.அவரைத் தொடர்ந்து அதிபராக பதவியேற்ற ஜோ பைடனும் இதில் உறுதியாக இருந்தார்.அதன்படி ஆக., 31க்குள் தங்கள் படைகளை முழுமையாக விலக்கி கொள்வதாக ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளும், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

இதையடுத்து ஆப்கனிலிருந்து வெளியேறுவதற்கு வெளிநாட்டவர், ஆப்கானிஸ்தானியர்கள் முயற்சித்தனர். காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.கடந்த 15 நாட்களாக நடந்து வந்த மீட்பு நடவடிக்கைகளில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர், வெளிநாட்டவர், ஆப்கானிஸ்தானியர்களை மீட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதேபோல் நட்பு நாடுகளும், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டுள்ளன.
முழுமையாக வெளியேறுவதற்கான காலக்கெடு நெருங்கி வந்த நிலையில் விமான நிலையத்தின் வெளியே தற்கொலைப் படை தாக்குதல் நடந்து 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக விமான நிலையம் அருகே தாக்குதல் நடந்தன.அமெரிக்க படையின் கடைசி விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவில் காபூலில் இருந்து புறப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தலிபான்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் விமான நிலையத்துக்குள் நுழைந்து அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விமான ஓடுதளப் பாதையில் நடந்து மகிழ்ந்தனர்.
''ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்துள்ளது. விமான நிலையம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி உறுதி செய்யப்படும்,'' என, தலிபான் மூத்த தலைவர் ஹக்மத்துல்லா வாசிக் கூறியுள்ளார்.''அன்னிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது. இது உலக நாடுகளுக்கு ஒரு பாடம்,'' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.


விமான நிலையம் சேதம்தலிபான்கள் காபூலை கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் திரண்டனர். தற்போது அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்பட்டு தலிபான் கட்டுப்பாட்டுக்குள் விமான நிலையம் வந்துள்ளது. ஆனாலும், நாட்டை விட்டு செல்வதற்காக நேற்றும் பலர் விமான நிலையம் அருகே காத்திருந்தனர்.

அமெரிக்க படைகள் பயன்படுத்தி வந்த 27 'ஹம்வீஸ்' ரக ராணுவ வாகனம், 73 விமானங்கள் உள்ளிட்டவை விமான நிலையத்திலேயே கைவிடப்பட்டுள்ளன. ஆனால் அதை மீண்டும் சரி செய்து பயன்படுத்த முடியாத வகையில் அவை பிரித்து போடப்பட்டுள்ளன.நாட்டை விட்டு தப்பிக்க முயன்றவர்கள் விட்டுச் சென்ற பைகள், கிழிந்த துணிகள் என விமான நிலையமே குப்பை காடாக காட்சியளிக்கிறது.
இதைத் தவிர தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தவர்களின் கார்களும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் காபூல் விமான நிலையத்தில் தரையிறங்க தனியார் விமானங்களுக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் விமான நிலையத்தை பராமரிக்க தேவையான தொழில்நுட்ப நிபுணர்களும் தலிபான்களிடம் இல்லை. கத்தார் அல்லது துருக்கியின் உதவியை நாட உள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர்


200 அமெரிக்கர்கள் தவிப்புஅமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் 200 அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் கூறியுள்ளதாவது:கடந்த இரண்டு வாரங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்கள் அங்கு இருந்திருந்தால் அனைவரையும் மீட்டிருப்போம்.

விமான நிலையத்துக்கு வர முடியாமல் 200 அமெரிக்கர்கள் மற்றும் ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க முடியவில்லை. காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டதும் இவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே அமெரிக்கர்களை சாலை மார்க்கமாக மீட்பது குறித்து ஆப்கனின் அண்டை நாடுகளுடனும், தலிபான்களுடனும் பேசி வருகிறோம். தற்போதைக்கு ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க துாதரகம் கத்தாரின் தோஹாவில் இருந்து செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


முடிவுக்கு வந்தது!ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த நம் ராணுவத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. அதிக மக்களை மீட்பதற்கு தயாராக இருந்தோம். பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் உயிர் பலியை தவிர்க்க, மீட்பு பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். ஆப்கனில் தவிக்கும் அனைவரையும் மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம்.ஜோ பைடன், அமெரிக்க அதிபர்


பலி, இழப்பு, செலவு எவ்வளவு?கடந்த 2001ல் அமெரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் படைகள் களமிறக்கப்பட்டன.அமெரிக்க வரலாற்றிலேயே, மிக நீண்ட காலம் நடந்த அதிக உயிரிழப்பு, மிகப் பெரிய செலவு ஏற்படுத்திய இந்தப் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.இந்த 20 ஆண்டு காலத்தின் சில முக்கிய புள்ளி விபரங்கள்: அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், பென்சில்வேனியா நகரங்களில் 2001, செப்., 11ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் 3,000 பேர்

* தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை அழிக்க படைகளை பயன்படுத்த 2001, செப்., 18ல் அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது

* கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் 1.74 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* இந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்டது 167 லட்சம் கோடி ரூபாய்

* ஆப்கனில் 2,461 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

* அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர்களில் 3,846 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் போலீஸ் படைகளைச் சேர்ந்த 66 ஆயிரம் பேர் பலியாயினர்
* ஆப்கன் மக்களில் 47 ஆயிரத்து 245 பேர் பரிதாபமாக இறந்தனர்

* ஆப்கனில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவின் கடைசி விமானத்தில் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டோபர் டொனாஹே, ஆப்கனுக்கான பொறுப்பு துாதர் ராஸ் வில்சன் கடைசி
நபர்களாக ஏறினர்.


தலிபான் தலைவருடன் இந்திய துாதர் சந்திப்பு!மத்திய கிழக்கு நாடான, கத்தாரில் உள்ள தலிபான் அரசியல் அலுவலக பிரிவு தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்ஸாயை, கத்தாருக்கான இந்திய துாதர் தீபக் மிட்டல் நேற்று
சந்தித்து பேசினார்.தலிபான் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தோஹாவில் உள்ள இந்திய துாதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் விரைவாக நாடு திரும்புவது குறித்து பேசப்பட்டது.

இந்தியா வர விரும்பும் ஆப்கன் சிறுபான்மையினர் குறித்தும் விவாதிக்கப்பட்டது.ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என நம் துாதர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் முறையாக கையாளப்படும் என, தலிபான்கள் உறுதி அளித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
01-செப்-202118:24:22 IST Report Abuse
Rajagopal இதெல்லாம் ஒரு நாடுன்னு சொல்லிட்டு திரியறானுங்க பிக்காளிப்பயலுங்க.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
01-செப்-202113:26:23 IST Report Abuse
பெரிய ராசு ஒரு அணுகுண்டு போடுங்க
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-செப்-202107:21:48 IST Report Abuse
Kasimani Baskaran பாக்கிஸ்தானுக்கு அடுத்ததாக தீவிரவாதிகளால் ஆளப்படும் நாடு என்ற பெருமையைப் பெருகிறது ஆப்கானிஸ்த்தான். பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தால் இந்தியா என்ன செய்யும் என்பதையும் அவர்களிடம் சொல்லிவிடுவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X