பொது செய்தி

இந்தியா

மேகதாது குறித்து இப்போது ஆலோசிக்க முடியாது: கர்நாடகாவுக்கு கைவிரித்தது காவிரி ஆணையம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 31, 2021
Share
Advertisement
'மேகதாது அணை தொடர்பான விஷயத்தில் தமிழகம் உட்பட நான்கு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு எடுக்கப்படும்' என, காவிரி மேலாண்மை ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய 30 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படியும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக காவிரி மேலாண்மை

'மேகதாது அணை தொடர்பான விஷயத்தில் தமிழகம் உட்பட நான்கு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு எடுக்கப்படும்' என, காவிரி மேலாண்மை ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய 30 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படியும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்து வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் ஆணையத்தின் கூட்டம் டில்லியில் நேரில் கூடியது.

மத்திய நீர்வளக் குழு ஆணையர் எஸ்.கே. ஹல்கர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் பொதுப்பணிச் செயலராக உள்ள சந்தீப் சக்சேனா பங்கேற்றார். இவருடன் காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரி சுப்ரமணியமும் பங்கேற்றார்.

கூட்டத்தின் அலுவல் குறிப்பேட்டில் மேகதாது அணை கட்டும் விவகாரமும் இடம்பெற்று இருந்தது. இதனால் கூட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.அதை உறுதிப் படுத்தும் விதமாக கர்நாடக அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை மிகத் தீவிரமாக வலியுறுத்தி பேசினர். இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடைமடை பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவொரு புதிய அணையையும் கட்ட முடியாதென்பதையும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் இதுகுறித்து இடம்பெற்றிருக்கும் சில அம்சங்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டது.இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையம் விளக்கிய தமிழக அரசு அதிகாரிகள், மேகதாது அணை விவகாரத்தை இந்த கூட்டத்தில் ஆலோசிக்க கூடாதென வலியுறுத்தினர்.

தமிழகத்துக்கு ஏற்கனவே தரப்பட வேண்டிய நிலுவை தண்ணீரின் அளவுகள் குறித்த புள்ளி விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு உடனடியாக அந்த தண்ணீரை வழங்க உத்தரவிடும்படியும் வலியுறுத்தினர். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டுமென தமிழக அரசு வைத்த கோரிக்கைக்கு கர்நாடகா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியதாவது: சாதாரண கால கட்டங்களில் 86.38 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் கடந்த ஜுன், ஜுலை மற்றும் ஆக., மாதங்களில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு இன்னும் பாக்கி உள்ளது.இதன் விபரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தரப்பட வேண்டிய தண்ணீரின் அளவு 30.6 டி.எம்.சி., என கணக்கீடு செய்யப்பட்டு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலுவை அளவு தண்ணீர் குறித்து ஆலோசித்து வரும் காவிரி ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் இந்த நிலுவைத் தண்ணீர் குறித்த அடுத்தடுத்த விபரங்கள் முறைப்படுத்தப்படும்.

மேகதாது அணை விவகாரம் இன்றைய ஆலோசனையில் இடம்பெறுவதாக இருந்தது. உறுப்பு மாநிலங்களுக்கு இடையில் இதுகுறித்த ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை.இத்திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளது. அதற்குமுன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.

எனவே இதுதொடர்பான மேலதிக விபரங்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதன்பின் முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு இந்த விவகாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமிழகம் சார்பில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த திட்டத்தின் ஆலோசனையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


துரைமுருகன் மகிழ்ச்சி



தமிழக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை குறித்து விவாதிக்கப் போவதாக தகவல் வந்ததும், இந்த சபை ஒருமுகமாக எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தது.அப்போது, 'முதல்வர் சார்பில் எங்கள் அதிருப்தியை தெரிவிப்போம். அமைச்சருடன் பேசுவோம்' எனக் கூறினேன்.

காலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருடன் பேசினேன். அவர் எதிர்ப்பு தெரிவிக்கும்படி கூறினார். அதன்படி ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேகதாது அணை குறித்து பேசுவதில்லை என முடிவு செய்து, அதை கூட்ட குறிப்பிலிருந்து நீக்கிவிட்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X