திருப்பூரில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது; திடீரென மதியம் 2:30 முதல் 3:30 மணி வரை பரவலாக மழை பெய்தது; அரை மணி நேர அளவுக்கு பலத்த மழை கொட்டியது. பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிழற்குடை, கட்டடங்கள் என ஒதுங்கி நின்றனர். சிலர் குடை, ஜெர்கின், பாலிதீன் கவர்கள் ஆகியவற்றின் துணையுடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

நகரின் அனைத்து முக்கிய ரோடுகளிலும் மழை நீர் வழிந்தோடியது. பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. சில இடங்களில் தாழ்வான பகுதி வீடுகளின் முன் கழிவுநீரும், மழை நீரும் தேங்கி அவதி ஏற்பட்டது.சில ரோடுகளில் தற்போது வடிகால், ரோடு ஆகியன அமைக்கும் பணி நடைபெறுகிறது. இது போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியது.

ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப். பாலம், இரட்டைக் கண் பாலம், ஒற்றைக் கண் பாலம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நொய்யல் ஆற்றின் மீதுள்ள வளம் பாலம், ஈஸ்வரன் கோவில் பாலம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பிரதான ரோடுகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.சுற்றுப் பகுதியில் பெய்த மழையால் நகரில் உள்ள ஓடைகளில் மழை நீர் அதிகளவில் பெருக்கெடுத்து நொய்யல் ஆற்றுக்குள் சென்று பாய்ந்தது.பெருமழை பெய்தால், திருப்பூரில் உள்ள சாலைகள் குளங்கள் ஆகிவிடும்; வெள்ளத்தில் மிதக்க வேண்டி வரும்; சில மணித்துளி மழைக்கே, பல மணி நேரம், திருப்பூர் ஸ்தம்பித்துவிடுகிறது. என்று தீருமோ, இந்த பிரச்னை!

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE