கொரோனா தொற்று பரவலை காரணமாக வைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவவும், அவற்றை கடலில் கரைக்கவும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதற்கு, ஹிந்து மத தலைவர்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அர்ஜுன் சம்பத், நிறுவன தலைவர் - ஹிந்து மக்கள் கட்சி:
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்திருப்பது, ஹிந்துக்களுக்கு அரசு ஏற்படுத்தி இருக்கும் மிக பெரிய அநீதி. விநாயகர் சதுர்த்தி விழா என்பது, பலருடைய வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் விழா. பூ வியாபாரத்தில் துவங்கி, பொரி வியாபாரம் செய்பவர் வரை, லட்சக்கணக்கான ஏழை, எளியோருக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு இது பொருளாதார பின்புலமாக இருக்கிறது.இதை புரிந்து, அரசு உடனடியாக தடையை விலக்க வேண்டும். இல்லையென்றால், தடையை மீறி விழா நடத்தப்படும். கோர்ட் வாயிலாக பரிகாரம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்.

ராம ரவிக்குமார், தலைவர் - ஹிந்து தமிழர் கட்சி:
கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் ஒருதலைபட்சமாக இருப்பதைத் தான் எதிர்க்கிறோம். கோகுலாஷ்டமி விழாவை கேரளாவில் சிறப்பாக கொண்டாட, அம்மாநில அரசு அனுமதி கொடுத்தது. அங்கு தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள், சாமி சிலைகள் மற்றும் மத விழாக்களுக்கு மட்டும் தானா; மது கடைகளுக்கு கிடையாதா என்பது தான் கேள்வி. டாஸ்மாக் கடைகள் முன் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்து வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம்.
காடேஸ்வர சுப்பிமணியன், தலைவர் - ஹிந்து முன்னணி:
ஹிந்துக்களும் ஓட்டு போட்டுத் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதை மொத்தமாக மறந்து விட்டு, அரசு செயல்படுகிறது. அரசு விழாக்கள் என்ற பெயரில், தினமும் ஆயிரக்கணக்கில் கூட்டி வைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் நடத்தும்போது வராத கொரோனா, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டால் மட்டும் பரவி விடுமா?அரசின் ஒருதலைப்பட்சமான முடிவை எதிர்த்து, நாளை தமிழகம் முழுதும் கோவில்களில், ஹிந்து முன்னணியை சேர்ந்தோர் பிரார்த்தனை செய்ய உள்ளனர். முடிவை மாற்றவில்லை என்றால், அரசு உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடக்கும்.
கோவை, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள்:
விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. கோவில்களில் வழிபாடுகளும், பூஜைகளும் சிறப்பான முறையில் நடைபெறும்பட்சத்தில், நாட்டை ஆளும் மன்னனுக்கும், மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும். மன்னனுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பது எம்முடைய விருப்பம் மட்டுமல்ல; கடவுளின் விருப்பமும் கூட.ஆனால், மது கடைகளுக்கும், மாமிச கடைகளுக்கும் அனுமதி அளித்திருக்கும் அரசு, அங்கு மட்டும் கட்டுப்பாடு இல்லாமல், மக்கள் கூட அனுமதித்து விட்டு, கோவில் வழிபாட்டுக்கும், திருவிழாக்களுக்கும் தடை ஏற்படுத்துவது சிறிதும் ஏற்புடையது அல்ல. எனவே, மக்கள் உணர்வுகளைப் புரிந்து, அரசு கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும். அதற்காக, இறைவனிடம் எல்லாரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.
அரசூர் கணபதி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கம்:
விநாயகர் சிலைகள் செய்வதற்கு தமிழகம் முழுக்க, 1500க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. வட மாநிலங்கள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, தமிழகத்தில் செய்யப்படும் விநாயகர் சிலைகள் அனுப்பப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி, தமிழகம் முழுதும் ஐந்து லட்சம் குடும்பங்கள் உள்ளன.கடந்த ஆண்டிலும் கொரோனாவை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் தொழில் நிறுவனங்களையும், சிலைகள் செய்து வைக்கப்பட்ட குடோன்களையும் பூட்டி, 'சீல்' வைத்தனர். இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.கந்து வட்டிக்கு பணம் வாங்கி, தொழில் செய்யும் நிறுவனங்களும், தொழிலாளர்களும், துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த தொழிலில் இருக்கும் ஐந்து பேர், தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதனால், இந்த குடும்பங்களை காப்பாற்ற, கட்டுப்பாடுகளுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வழி செய்ய வேண்டும். இனி எங்கள் குடும்பங்களில் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு, அரசு காரணமாகி விடக் கூடாது.
ரவிச்சந்திரன், மாநில தலைவர் - சிவசேனா கட்சி:
தமிழகத்தில் கொரானா பாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் திரையரங்குகள் கூட திறக்கப்பட்டன. ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த, ஒட்டுமொத்த தடை விதித்திருப்பது மிகப் பெரிய ஏமாற்றத்தை தருகிறது.தமிழக அரசின் தடை உத்தரவு, ஹிந்துகளின் விழாவை முடக்க நினைக்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
கோவில்களில் கூடும் போராட்டம்
விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்கக்கோரி, நாளை ஹிந்து முன்னணி சார்பில், கோவில்களில் கூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஹிந்து முன்னணி அறிக்கை: மதுக்கடைகள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், சந்தைகள் திறக்க அனுமதியுள்ளது. அதேபோல, பக்ரீத் தொழுகை, வேளாங்கண்ணி தேர் திருவிழா உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஹிந்துக்கள் கொண்டாடும் ஆடிப்பெருக்கு, கூழ் வார்த்தல் உள்ளிட்டவற்றோடு, விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், சிலை வைக்கவும், அரசு தடை விதித்துள்ளது. இது, தி.மு.க., அரசு ஹிந்துக்களுக்கு செய்யும் அநீதி. இதை எதிர்த்து, 'ஹிந்துக்களே கோவில்களில் கூடி, இறைவனிடம் முறையிடுவோம்' என்ற போராட்டத்தில் பங்கெடுப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் சொல்வது என்ன?
தியேட்டர்களை திறக்கும் போது, விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தடை விதிப்பது நியாயமில்லை. கட்டுப்பாட்டுடன் சிலை வைத்து, பூஜை செய்து, கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டும். சிலையுடன், பொதுமக்கள் செல்லும் எண்ணிக்கையை போலீசார் தீர்மானிக்கலாம். பஜனை பாட, அன்னதானம், சுண்டல் வழங்க தடை விதிக்கலாம். கூட்டம் கூட அனுமதிக்க மாட்டோம் என, சிலை வைப்பவர்களிடம் எழுதி வாங்கலாம். போலீசார் கண்காணிப்பை அதிகரித்து, சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்.
எஸ்.குமாரராஜா, 61, வேளச்சேரி.
ஹிந்துக்களின் விழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. இதை நாடு முழுதும் கொண்டாடுகின்றனர். விநாயகர் சிலைகளை வெளியில் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இது, காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதைய அரசு இதற்கு தடை விதித்துள்ளது எங்களை போன்ற பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதனால், மறு பரிசீலனை செய்து, எப்போதும் போல் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
ஆர்.ராமதாஸ், 46, குரோம்பேட்டை.
பாரம்பரியமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அரசு தடை விதித்துள்ளது சரியல்ல; இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் செயல். கொரோனா நேரத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதைவிட்டு விட்டு, விழா கொண்டாடுவதற்கு முழுதுமாக தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது. இதை, அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
எஸ்.மீனாட்சிசுந்தரம், 67, தாம்பரம். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE