வளசரவாக்கம், : வளசரவாக்கம் மண்டலத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களால், வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் சாலை, மழை நீர் வடிகால், தெருவிளக்கு, துப்புரவு பணி, வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக, மண்டல வாரியாக பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அதிகாரி, செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் என, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், உதவி பொறியாளர்கள் களத்திற்கு சென்று, சாலைகளை ஆய்வு செய்வது, புது கட்டடங்கள் விதிமுறைப்படி கட்டப்படுகின்றனவா என கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, செய்து வருகின்றனர். இதனால், இவர்கள் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள வளசரவாக்கம் மண்டலத்தில், 143 - 155 வரை 13 வார்டுகள் உள்ளன. இதன், 133வது கோட்டத்தில், 145, 148, 149, 152 என, நான்கு வார்டுகள் உள்ளன. இதில் 148வது வார்டில் உள்ள உதவி பொறியாளர் உடல் நல பிரச்னை காரணமாக விடுப்பில் உள்ளார்.மீதமுள்ள மூன்று வார்டுகளிலும் பல மாதங்களாக உதவி பொறியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
பிற வார்டுகளில் உள்ள உதவி பொறியாளர்கள், காலியாக உள்ள வார்டுகளையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.இதனால், உதவி பொறியாளர் பணியிடம் காலியாக உள்ள வார்டுகளில், மழை நீர் வடிகால் பணி, சாலை அமைத்தல், பூங்கா மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் முறையாக நடக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, இந்த வார்டுகளில் உதவி பொறியாளர்களை நியமித்து, வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE