பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... அரைகுறை பணியால் அவதி

Added : செப் 01, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது வினோபாஜி வீதி. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.நகராட்சி எல்லைப்பகுதியான இங்கு,பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் தேங்காமல் இருக்க ரோட்டின் நடுவே குழாய் அமைத்து, மற்றொரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்கப்பட்டது. இதற்காக ரோடு தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், பணிகள் முழுமை

பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது வினோபாஜி வீதி. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.நகராட்சி எல்லைப்பகுதியான இங்கு,பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் தேங்காமல் இருக்க ரோட்டின் நடுவே குழாய் அமைத்து, மற்றொரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்கப்பட்டது.

இதற்காக ரோடு தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மக்கள் கூறியதாவது:கழிவுநீர் வெளியேற குழாய் பதிக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. பணிகள் முழுமை பெறாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சீரமைப்பு பணிகளை முழுமையடைய செய்ய வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

கொரோனா கேர் சென்டர் மூடல்

வால்பாறை அரசு கலைக்கல்லுாரி கடந்த, ஆறு மாதத்திற்கு முன், கொரோனா கேர் சென்டராக மாற்றப்பட்டு, தொடர்ந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால், இன்று கல்லுாரிகள் திறக்கப்படும் போது, மாணவர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, கல்லுாரியில் செயல்பட்டு வந்த, கொரோனா கேர் சென்டர் மூடபட்டது.

ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை தாலுகாவில், கொரோனா தொற்றால், 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 27 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். வால்பாறையில், ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாலும், கல்லுாரியில் வகுப்புகள் துவங்க உள்ளதாலும், கொரோனா கேர் சென்டர் மூடப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.

நடைபாதையில் மண் சரிவு

வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை பெய்யும் நிலையில், அண்ணாநகர் முத்துமாரியம்மன் திருக்கோவில் செல்லும் நடைபாதை இடிந்து விழுந்தது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியாமல், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மக்கள் நடந்து செல்லும் நடைபாதை மற்றும் தடுப்புசுவர் இடிந்து விழுந்துள்ளது. மக்கள் நலன் கருதி, அவசர பணியாக தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடக்கிறது,' என்றனர்.

ஓட்டுனர்களுக்கு 'அட்வைஸ்'
வால்பாறையில், இரு சக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனையடுத்து, காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் கற்பகம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். அவர், பேசும்போது, 'இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் 'ெஹல்மெட்' அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் வேகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மொபைல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டினாலும், குடிபோதையில் வாகனத்தை இயக்கினாலும், மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ளதால், 'மாஸ்க்' அணியாமல் வாகனத்தை ஓட்டினால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும்,' என்றார்.

ஒற்றை யானையால் அச்சம்

வால்பாறையை சுற்றியுள்ள, பல்வேறு எஸ்டேட் பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, அங்கு பயிரிடப்பட்ட வாழை மரங்களை உட்கொண்டது. அங்குள்ள, மோகன் என்பவரின் வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட யானையை, வனத்துறையினர் தொழிலாளர்களுடன் இணைந்து விரட்டினர்.கடந்த மாதம், இதே எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளியை, யானை மிதித்து கொன்றது. இந்நிலையில் ஒற்றை யானை எஸ்டேட் பகுதிக்குள் மீண்டும் நுழைந்துள்ளதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

ஓடைகளை பாதுகாக்க கோரிக்கை
உடுமலையின் முக்கிய அடையாளமாக திகழும், தங்கம்மாள் மற்றும் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடைகள் நகரின் மத்தியில் ஓடுகின்றன. இதில் தங்கம்மாள் ஓடை, 3 கி.மீ., துாரம், கழுத்தறுத்தான் பள்ளம் ஓடை, 3.60 கி.மீ., துாரம் பயணிக்கிறது. ஒரு காலத்தில் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த ஓடைகள், நகரமயமாதல் காரணமாக வீடுகளின் கழிவுநீர் கலந்ததாலும், சாக்கடை கழிவுநீர் ஓடைகளாக மாறி விட்டது.

நாளடைவில் ஓடையின் இரு கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு, கான்கிரீட் மற்றும் ஓட்டு வீடுகளாக மாறி விட்டன.தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரளவு ஆவணங்களில், இவ்விரு ஓடைகளும், 80 அடி அகலத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, ஓடைகளின் அகலம், 25 அடியாக காணப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்,' என்றனர்.

ஆற்றுப்பாலம் அருகே புதர் அகற்றம்
கோவை--திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் ஓரமுள்ள வெள்ளை கோடு வரை முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்திருந்தன. போதிய விளக்கு வெளிச்சம் இல்லாத இந்த இடம், இரவுநேரம் இருள் சூழ்ந்து, டூ-வீலரில் செல்பவர்களுக்கு விபத்துகள் ஏற்பட்டன.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது அமராவதி ஆற்றுப்பாலம் பகுதியிலுள்ள புதர்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.பொதுமக்கள் கூறுகையில், 'தற்போது ரோடு முழுமையாக பார்வைக்குத் தெரிகிறது. ரோடு ஓரம் ஒதுங்கிச்செல்லவும் இட வசதி ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X