கொரோனா தினசரி பாதிப்பில், மற்ற மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி, சென்னை மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பிட்ட நான்கு மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், மூன்றாவது அலை சென்னையில் துவங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
சென்னையில், கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை, 5 லட்சத்து 43 ஆயிரத்து 968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 5 லட்சத்து, 33 ஆயிரத்து 743 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 8,398 பேர் இறந்துள்ளனர். தற்போது, 1,827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜூன் மாதத்திற்கு பின், கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் முதல், கொரோனா பாதிப்பு சற்று ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. தற்போது, 180 முதல் 220 பேர் வரை தினசரி தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை முழுதும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே, சற்று அதிகமான பாதிப்பு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் அலை தொற்று அதிகரித்த பின், சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், தினசரி 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் வாழ்ந்தாலும், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கோவை, ஈரோடு மாவட்டங்களை விட, குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டது.
தற்போது, பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்றைய பாதிப்பில், கோவை, ஈரோடு மாவட்டங்களை முந்தி, சென்னை மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.நேற்று மட்டும், 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், 183 பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பெரிய அளவிலான கொரோனா பாதிப்பு இல்லை. அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் மட்டுமே, பரவலாக தொற்று பாதிப்பு உள்ளது. மற்ற மண்டலங்களில் குறைவான அளவில் தான் பாதிப்பு உள்ளது. தற்போது வரை, தொற்று கட்டுக்குள் தான் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, தினசரி தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், சென்னையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க, மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பதிவாகும் தொற்று பாதிப்புக்களை கணக்கிட்டு, விரைந்து அதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்று அதிகரிப்பது ஏன்?
சென்னையில் பரவலாக தொற்று கண்டறியப்பட்டு வந்தாலும், நான்கு மண்டலங்களில் ஏற்ற, இறக்கத்துடன் தொற்று பாதிப்பு உள்ளது. அண்ணா நகர் மண்டலத்தை பொறுத்தவரை, அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், தேனாம்பேட்டையில் மெரினா கடற்கரை மற்றும் சில மார்க்கெட் பகுதிகள், கோடம்பாக்கத்தில், தி.நகர், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகள், அடையாறு மண்டலத்தில் பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் அதிகளவு மக்கள் கூடுவது முக்கிய காரணமாக உள்ளது. கூட்டம் கூடினாலும், முக கவசம் அணியாமல் சுற்றுவது, சமூக இடைவெளி பின்பற்றாதது போன்றவை தொற்று பரவலுக்கு முக்கிய காரணம். மேலும், உணவகங்களில் சமூக இடைவெளியின்றி, அதிகளவு கூட்டம் கூடுவதாலும் தொற்று பரவலுக்கு வழிவகுப்பதாக, சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE