தமிழக அரசின் விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு (ஆர்கானிக் சான்று) துறை, கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஐ.ஏ.எஸ்., அல்லாத தொழில்நுட்ப அதிகாரியை இயக்குனராக கொண்டு இந்த அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை சென்னைக்கு மாற்றுவதாக, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் அங்ககச்சான்று பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் குழுக்களில், 50 சதவீதம் பேர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதேபோல, விதை உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளும் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.'அரசின் இந்த முடிவால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். வேளாண் உற்பத்தியும், ஏற்றுமதியும் பாதிக்கும் நிலை உள்ளது' என்கின்றனர், விவசாயிகள்.
'அனைவருக்கும் சிரமம்'

வேளாண் துறை முன்னாள் அமைச்சரும், கிணத்துக்கடவு எம்.எல். ஏ.,வுமான தாமோதரன் கூறியதாவது: பிரசித்தி பெற்ற கோவை வேளாண் பல்கலையை ஒட்டி, இந்த அலுவலகம் அமைந்திருப்பதால், விவசாயிகளுக்கு பல விதங்களிலும் வசதியாக உள்ளது. இயற்கை விவசாயம் செய்வோர், மேற்கு மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.ஏற்றுமதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் எல்லோரும் சான்று பெறுவதற்காக சென்னைக்கு செல்ல வாய்ப்பில்லை. சான்றளிப்பு இயக்குனரகமும், வேளாண் பல்கலையும் அருகருகே இருப்பது தான் சிறப்பு. இதை இடம் மாற்றுவது வீண் வேலை. துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பெரும் சிரமம். தலைமையிடம் கோவையில் இருப்பதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை.எங்கு பயன், பயனாளிகள் அதிகம் இருக்கின்றனரோ அங்கு தான் அந்த அலுவலகம் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'தவறான முடிவு'

கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி கூறுகையில், ''வேளாண் பல்கலை இருக்கும் இடத்தில் தான் விதைச்சான்றளிப்புத்துறை இருக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் அந்த அலுவலகம், கோவையில் அமைக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் எல்லாமே கான்கிரீட் காடுகளாக மாறி விட்டன. அங்கு வேளாண்மை என்பதே இல்லை. அத்தகைய சூழலில், கோவையில் இருக்கும் அலுவலகத்தை சென்னை கொண்டு செல்வது தவறான முடிவு. அமைச்சர் அறிவித்தபடி, இயக்குனரகத்தை சென்னைக்கு மாற்றினால், எந்த நோக்கத்துக்காக அந்த இயக்குனரகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் சிதைந்து விடும். பாதிக்கப்படுவது விவசாயமும், விவசாயிகளும் தான்,'' என்றார்.
இங்கே இருப்பதே சிறப்பு!

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''விதைச்சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, கோவையில் இருப்பது தான் பல விதங்களிலும் சிறப்பு. கோவை சுற்றுப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் அங்ககச்சான்று பெற்றுள்ளனர். அதை முறையாக கண்காணிக்க வேண்டும் எனில், அந்த அலுவலகம் இங்கே இருந்தாக வேண்டும். நிர்வாக நலன் என்று கூறி, சென்னைக்கு கொண்டு செல்வது சரியல்ல,'' என்றார்.
'விளைபொருள் ஏற்றுமதி பாதிக்கும்'
விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கக சான்று (ஆர்கானிக் சான்று) பெற்றிருப்பது அவசியம். இந்த சான்று இல்லையெனில் ஏற்றுமதி செய்ய முடியாது. விளைபொருள் ஏற்றுமதி, அதற்கு அங்ககச்சான்று பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மத்தியில் சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பலரும் வேதி உரங்களை தவிர்க்க தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில்,அங்கக சான்றளிப்புத்துறையை சென்னைக்கு கொண்டு செல்வது, இயற்கை வேளாண் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE