சென்னை:லண்டனில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, எட்டு மாதங்களுக்கு பின், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவையை மீண்டும் துவக்கி உள்ளது.
கொரோனா தொற்று முதல் அலை, 2020ல் பரவத் துவங்கியதும், அந்த ஆண்டு மார்ச் 25 முதல், வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும், சென்னை உட்பட, இந்தியாவிற்கான அனைத்து சேவைகளையும் ரத்து செய்தது. அதன்படி, லண்டன் - - சென்னை - லண்டன் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்பட்ட சேவையும் நிறுத்தப்பட்டன.
இந்தியாவில், கொரோனா முதல் அலை குறையத் துவங்கியது. இதையடுத்து, 2020 அக்டோபர் இறுதி முதல், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்தியாவிற்கான விமான சேவையை மீண்டும் துவக்கியது.மீண்டும் நிறுத்தம்கடந்தாண்டு டிசம்பரில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், உருமாறிய கொரோனா பரவத் துவங்கியது. உடனே, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், சென்னை உள்ளிட்ட இந்தியாவிற்கான சேவைகளை மீண்டும் நிறுத்தியது.
தற்போது, எட்டு மாத இடைவெளிக்குப் பின், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், சென்னைக்கு தன் சேவையை, துவக்கியது.லண்டன் நகரின், ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதல் விமானம், 189 பயணியர், 14 விமான ஊழியர்கள் என மொத்தம் 203 பேருடன், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானம், சென்னையில் இருந்து லண்டனுக்கு, இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. லண்டனில் இருந்து சென்னைக்கு, ஞாயிறு, புதன், வெள்ளி; சென்னையில் இருந்து, லண்டனுக்கு, திங்கள், வியாழன், சனிக்கிழமை என, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.