மேட்டுப்பாளையம் : காந்தை ஆற்றில், 30 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி உள்ளதை அடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள், பரிசலில் செல்கின்றனர். அவர்களிடம் பரிசல் ஓட்டிகள் கட்டணம் ஏதும் வாங்காமல், இலவசமாக அழைத்துச் செல்கின்றனர்.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலம் உள்ளது.
இப்பாலம் பவானிசாகர் அணையின், அதிகபட்ச நீர்மட்ட உயரத்திற்கு மேலே கட்டாமல், கீழே கட்டப்பட்டுள்ளது. இதனால், அணையில், 96 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, காந்தை ஆற்றுப் பாலம், நீரில் மூழ்கிவிடும். தற்போது அணையில், 102 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதனால் ஆற்றில், 30 அடிக்கு மேலும், பாலத்தின் மீது, 8 அடிக்கு மேலும் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால், பொது மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய மலைகிராமங்களைச் சேர்ந்த 14 பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். பரிசல் ஓட்டிகள் பள்ளி மாணவ-ர்களிடம், கட்டணம் வாங்காமல் இலவசமாக ஏற்றிச் சென்றனர். பொதுமக்களிடம், 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE