காங்கிரசுக்குள் பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்து, பொதுச் செயலர் பதவி அளிப்பது தொடர்பாக, மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் 2014 பொதுத் தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்க பட்டபோது, அவரது இமேஜை கட்டமைப்பதில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றினார். அத்துடன், அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவராக கருதப்படுவதால், அவர் தேசிய அரசியலில் மிக முக்கிய பிரமுகரானார்.
தன் 'ஐபேக்' நிறுவனம் மூலம், தமிழகத்தில் தி.மு.க., ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்., மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதற்கிடையே, தேர்தல் களத்திற்கு நேரடியாக வர விரும்பிய அவர், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய துணை தலைவரானார். பின், நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகிய அவர், 2024 பொதுத் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க, முக்கிய எதிர்க்கட்சிகளுடன் தொடர் ஆலோசனையில் உள்ளார்.
சரியல்ல
இந்நிலையில், அவரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வர ராகுல் மற்றும் பிரியங்கா, அவருடன் பல சுற்று பேச்சு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்தை அறியும் பொறுப்பை, ஏ.கே.அந்தோணி. அம்பிகா சோனி ஆகியோரிடம் கட்சி மேலிடம் ஒப்படைத்தது. அப்போது சோனியா குடும்பத்திற்கு எதிராக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர்க்கொடி உயர்த்திய குலாம்நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா, சசி தரூர், மணீஷ் திவாரி உட்பட முக்கிய தலைவர்கள் பலரும், பிரசாந்த் கிஷோரின் வருகை குறித்து அச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
'பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை பெறுவதில் தவறில்லை. ஆனால், கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பான அமைப்பு பொதுச் செயலர் பதவி வழங்குவது சரியல்ல' என்பது இவர்களின் கருத்தாக உள்ளது.இதற்கு மாறாக பிரசாந்த் கிஷோரை இணைப்பது என தீர்மானித்தால், 'அதற்கு முன் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டி, மூத்த தலைவர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை எடுக்க வேண்டும்' என, கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE