கோவை - பொள்ளாச்சி மின் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - பொள்ளாச்சி மின் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

Added : செப் 02, 2021
Share
கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில், மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.கோவை - பொள்ளாச்சியை இணைக்கும், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம், மின் மயமாக்கும் பணிக்காக, 37.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக நடந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. மின்ரயில் வழித்தடத்தில், மின் வினியோகத்துக்கு கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா, என நவீன இயந்திரம்


கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில், மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.கோவை - பொள்ளாச்சியை இணைக்கும், பொள்ளாச்சி - போத்தனுார் ரயில் வழித்தடம், மின் மயமாக்கும் பணிக்காக, 37.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கடந்த, இரண்டு ஆண்டுகளாக நடந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. மின்ரயில் வழித்தடத்தில், மின் வினியோகத்துக்கு கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா, என நவீன இயந்திரம் வாயிலாக ஆய்வு செய்த பின், மின்ரயில் இயக்க வேண்டும்.போத்தனுார் - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில், சோதனை ஓட்டமாக மின் ரயில் இன்ஜின் இயக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு எடுத்தனர். நேற்று மதியம், 12:23 மணிக்கு போத்தனுாரில் இருந்து கிளம்பிய, மின்ரயில் இன்ஜின், 75 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. பொள்ளாச்சிக்கு நேற்று மதியம், 1:03 மணிக்கு வந்தது.முதன்மை துணை மின் பொறியாளர் சாஜூ, ரயில்வே அதிகாரி தியாகராஜன், முதன்மை பிரிவு ரயில்வே அதிகாரி பழனிவேல் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர். பொள்ளாச்சியில் இருந்து நேற்று மதியம், 1:13 மணிக்கு போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்ஜின் கிளம்பியது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில், மின்ரயில் இன்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. மொத்தம், 40 நிமிடத்தில் பொள்ளாச்சியை அடைந்தது. வரும் வழியில், மின் இணைப்பில் ஏதாவது உராய்வு காரணமாக தீப்பொறி ஏற்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

எவ்வித பிரச்னையும் இல்லாமல் சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. விரைவில், இந்த வழித்தடத்தில் மின்ரயில் இயக்க முடிவு செய்யப்படும்.இந்த வழித்தடத்தில், மின் வயர்களில் மின்சாரம் செல்வதால், மின்கம்பங்கள் அருகே கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.லோகோ இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் கூறுகையில், ''மின் பாதையாக மாற்றப்பட்ட பின், இவ்வழியே இயக்கப்படும் சரக்கு ரயில்கள், டீசல் இன்ஜின் மாற்றுவதற்காக காத்திருக்க தேவையில்லை. பயண நேரமும் குறையும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X