பொது செய்தி

தமிழ்நாடு

இடமில்லாத பள்ளியை தரம் உயர்த்தியது எப்படி? அடிப்படை வசதிகளை மேம்படுத்தாவிடில் சிக்கல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோவை : போதிய இடவசதி இல்லாத, தரம் உயர்த்த கருத்துரு, முன் பணம் கூட செலுத்தாத, குனியமுத்துார் அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக மாற்றி உள்ளதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாமல், திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அருகாமை பள்ளிகளின் தொலைவை பொறுத்தே, தரம் உயர்த்த வேண்டுமென்பது விதிமுறை. குறிப்பாக, ஒரு கிலோமீட்டர் இடைவெளியில், ஒரு
 இடமில்லாத பள்ளியை தரம் உயர்த்தியது எப்படி?  அடிப்படை வசதிகளை மேம்படுத்தாவிடில் சிக்கல்

கோவை : போதிய இடவசதி இல்லாத, தரம் உயர்த்த கருத்துரு, முன் பணம் கூட செலுத்தாத, குனியமுத்துார் அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக மாற்றி உள்ளதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாமல், திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அருகாமை பள்ளிகளின் தொலைவை பொறுத்தே, தரம் உயர்த்த வேண்டுமென்பது விதிமுறை. குறிப்பாக, ஒரு கிலோமீட்டர் இடைவெளியில், ஒரு துவக்கப்பள்ளி, மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோமீட்டர் இடைவெளியில் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஏழு கிலோமீட்டர் இடைவெளியில், மேல்நிலைப்பள்ளி இருப்பது அவசியம்.

பள்ளியை தரம் உயர்த்த, அந்தந்த வகுப்புக்கு ஏற்ப, பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து, முன்பணம் செலுத்த வேண்டும்.தரம் மேலே... வசதி கீழே!குனியமுத்துார் நடுநிலைப்பள்ளியில் ஏற்கனவே, 980 மாணவர்கள் படிக்கின்றனர். இது தவிர, எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் பிரத்யேகமாக, 150 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் பரப்பளவு மொத்தம், 32 சென்ட் மட்டுமே.இடப்பற்றாக்குறையால் மாணவர், மாணவிகளுக்கு தலா ஒரு கழிப்பறையே உள்ளது. ஆசிரியர்களுக்கு பிரத்யேக கழிப்பறை இல்லாததால், மாணவர்களின் கழிப்பறையே இவர்களும் பயன்படுத்தும் நிலை நீடிக்கிறது. கூடுதல் கழிவறை வேண்டி, இப்பள்ளி சார்பில் கருத்துரு அனுப்பியும், நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் உள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்., மாதம், சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.யாருக்குமே தெரியாது!அறிவிப்பு வெளியாகும் வரை, தலைமையாசிரியருக்கு கூட, இந்த தகவல் தெரியாது என ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பில் மட்டும், 82 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.தரைத்தளத்தில் உள்ள, 10 வகுப்பறைகள் துவக்கப்பள்ளிக்கும், முதல் தளத்தில் உள்ள ஆறு வகுப்பறைகள் உயர்நிலைப்பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வந்தால் என்ன செய்வது என தெரியாமல், ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.பெற்றோர் சிலர் கூறுகையில், 'அருகாமையில் குனியமுத்துார் மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம், சுகுணாபுரம் பகுதிகளில் பள்ளிகள் இருந்தாலும், குடியிருப்புக்குள் இப்பள்ளி இருப்பதால் தான் குழந்தைகளை சேர்த்துள்ளோம்.

நடுநிலைப்பள்ளியாக இருந்த போதே, இடவசதி பற்றாக்குறை இருந்தது. தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், வகுப்பறை, ஆய்வகம் இல்லாமல், எப்படி மாணவர்களால் படிக்க முடியும். அரசு இப்பள்ளிக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்' என்றனர்.தலைமையாசிரியர் மனோகரனிடம் கேட்டபோது, ''ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவதால், தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை. புதிதாக இரு கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.பழைய வகுப்பறைகளை இடித்து, புதிதாக வகுப்பறைகள் கட்டினால் தான், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரும் போது சிக்கல் இருக்காது. புதிய கட்டடங்கள் கட்ட விரைவில் நிதி ஒதுக்கி தர வேண்டும்.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியை வேறு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில் இட நெருக்கடி ஏற்படும்,'' என்றார்.'வசதி செய்து தரப்படும்'முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''சிறுபான்மை நலத்துறையில் இருந்தும், வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் போதிய இடம் இல்லாததால், சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த பிறகு, உரிய வசதிகள் மேற்கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு மட்டும் தற்போது வருவதால், மாணவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X