சென்னை : புதிய வாகனங்களுக்கான காப்பீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளோர் சிரமத்தில் உள்ளனர்.
'புதிய வாகனங்கள் வாங்க, 'பம்பர் டூ பம்பர்' எனும் காப்பீட்டுத் திட்டத்தை கட்டாயமாக்கவும், அதை, போக்குவரத்து துறை கண்காணிக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, புதிய நடைமுறையை நேற்று முதல் பின்பற்றும்படி, போக்குவரத்து துறை இணை கமிஷனர் முத்து, மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.
அதில், 'செப்., முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும், வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணியர் பயனடையும் வகையில், 'பம்பர் டூ பம்பர்' எனும் காப்பீட்டை, ஐந்தாண்டுகளுக்கு கட்டாயமாக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

வாகன உரிமையாளர்கள் கூறியதாவது: ஏற்கனவே மூன்றாம் நபர், ஓட்டுனர், வாகனம் என, உரிமையாளர், தன் வசதிக்கு ஏற்ப காப்பீடு செய்வது வழக்கம். இதனால் ஆண்டுக்கு, 10 - 18 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, ஐந்தாண்டுகளுக்கு, மொத்த காப்பீடும் செய்ய வேண்டியுள்ளதால், நான்கு சக்கர வாகனத்துக்கு குறைந்தது, 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகிறது.
இது, வாகனம் வாங்க, வங்கிக் கடன், நிதி நிறுவன கடன் பெற திட்டமிட்டு இருந்தோருக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் வாடகை வாகனங்கள் சரியாக இயங்காத நிலையில், இந்த உத்தரவு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மோட்டார் வாகன தீர்ப்பாய வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறியதாவது: 'பம்பர் டூ பம்பர் காப்பீடு' மிகச் சிறந்த திட்டம். இதனால், வாகன விபத்தில் பாதிப்படையும், மூன்றாம் நபர், வாகனம், வாகனத்தில் இருப்போர் என, அனைவரும் பயனடைவர். ஆனால், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல்படி நிறைவேற்றாமல், உடனடியாக அமல்படுத்துவதால், அதிருப்தியும், முறைகேடுகளும் தான் அதிகரிக்கும்.
இதனால், வாகன விற்பனையாளர்களும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் கைகோர்க்கும் நிலை ஏற்படும். விருப்பப்படி, காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்காது. இதனால், வாகன விற்பனை சரிவதுடன், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க வாகன உரிமையாளர்களும் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE