பாலக்காடு:கேரளாவில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், 'சார், மேடம்' என கூறுவதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 'சேட்டன், சேச்சி' என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழு ஆதரவு
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு பாலக்காட்டில் உள்ளது மாத்துார் கிராம பஞ்சாயத்து. காங்., தலைமையிலான இந்த பஞ்சாயத்தில் சமீபத்தில் புதிய தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதற்கு, கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ., உறுப்பினர்களும் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தின்படி இனி பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை, கோரிக்கைகளுடன் வரும் மக்கள், 'சார், மேடம்' என, அழைக்கக் கூடாது. அவர்களை பெயரைச் சொல்லியோ, பதவியைச் சொல்லியோ அழைக்கலாம். வயதில் மூத்தவராக இருந்தால், 'சேட்டன், சேச்சி' என அழைக்கலாம்.
இது குறித்து பஞ்சாயத்து துணைத் தலைவர் பி.ஆர். பிரசாத் கூறியதாவது:ஆங்கிலேயர் காலத்து காலனி ஆட்சியை நினைவுபடுத்தும் இந்த வார்த்தைகளை தொடர வேண்டிய அவசியமில்லை. ஒவ்வோர் அதிகாரியின் இருக்கையிலும், அவரது பெயர், பதவி அடங்கிய பலகை இருக்கும். எஜமான்பெயர் அல்லது பதவியின் பெயரைச் சொல்லி அவர்களை மக்கள் அழைக்கலாம்.அதிகாரிகளை எப்படி அழைப்பது என்பது குறித்து சரியான வார்த்தைகளை தெரிவிக்கும்படி, அரசிடம் கேட்டுள்ளோம்.
நாட்டிலேயே இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றி செயல்படுத்தியுள்ள முதல் பஞ்சாயத்து இது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமான்கள். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களுக்கு சேவை புரிபவர்கள். அதனால் இனி மக்கள் கோரிக்கையுடன் வர வேண்டிய அவசியமில்லை. தங்கள் உரிமையை கேட்டு வர வேண்டும்.அதனால் சேவைக்கான படிவங்களில் இனி விண்ணப்ப படிவம் என இருக்காது. உரிமை படிவம் என்றே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE