தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வாழை மரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சேலம்: பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், வாழை மரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுதும், நேற்று முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள, அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியருக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். ஆட்டையாம்பட்டி அரசு

சேலம்: பள்ளி, கல்லூரிகள் திறந்த நிலையில், வாழை மரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுதும், நேற்று முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள, அரசு, தனியார் பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியருக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாழை மரம், தோரணங்கள் கட்டி, கோலம் வரைந்து மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக, அவரவர் புகைப்படம் மேசையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு மேசையில் இருவர் வீதம், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை, இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.

காடையாம்பட்டி தாலுகா, பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மட்டும் வகுப்புகள் நடந்தன. தலைமை ஆசிரியர் அண்ணாமலை முன்னிலையில், தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் வந்தனர். தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு, கல்லூரி வளாகத்திலேயே போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வகுப்பறைக்கு, 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில், அரசின் வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படுகிறதா என, கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆய்வு நடத்தினர். அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டன.

சீருடை தைக்கும் பணி தீவிரம்: சேலம் மாவட்டம் முழுதும், பள்ளி சீருடை தைக்கும் பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து, வாழப்பாடி தையல்காரர்கள் கூறுகையில், 'இரு ஆண்டாக, பள்ளி, கல்லூரி சரியாக திறக்கப்படாததால், சீருடை தையல் ஆர்டர் இன்றி வருவாய் பாதிக்கப்பட்டிருந்தது. சில தையல்காரர்கள் வேறு வேலை தேடி சென்று விட்டனர். தற்போது, பள்ளி, கல்லூரிகள் திறப்பால், சீருடை தைக்க, 'ஆர்டர்' வருகிறது. இதனால் வேலை மட்டுமின்றி, வருவாயும் அதிகரிக்க தொடங்கியுள்ளது' என்றனர்.

கொரோனா அபாயம்: ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் வந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், அந்த மாணவ, மாணவியர், தங்கள் கிராமத்துக்கு செல்ல, ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். பஸ் வந்ததும், அவர்கள் முண்டியடித்தபடி ஏறினர். 80க்கும் மேற்பட்ட பயணியர் ஏறியதால், சமூக இடைவெளி மாயமாகி கொரோனா பரவும் அபாயம் உருவானது. அதனால், காலை, மாலையில், பள்ளி குழந்தைகள் அதிகம் பேர் வரக்கூடிய கிராம வழித்தடங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

'நேரில் சந்தேகங்களுக்கு தீர்வு': பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 85 சதவீத மாணவ, மாணவியர் வந்தது மகிழ்ச்சியளித்தது. ஆன்லைன் வகுப்பு கள் எடுக்கப்பட்டாலும், நேரில் பார்த்து பேசி சந்தேகங்களுக்கு தீர்வு காணுவதற்கு ஈடாகாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பு நடந்த நிலையில், மாணவர், பெற்றோர் ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி.


- எல்.ஹேமலதா, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி ஆசிரியை, சின்னதிருப்பதி, சேலம்.

'புத்துணர்ச்சியை கொடுத்தது': ஆன்லைன் வகுப்பில் படித்தது மன உளைச்சலை தான் கொடுத்தது. கல்லூரி திறப்பால், நண்பர்கள், பேராசிரியர்களை பார்த்ததே ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் திறந்ததை வரவேற்கிறேன்.


- சி.பிரசாந்த், அரசு கலைக்கல்லூரி மாணவர், சேலம்.

'உத்வேகத்துடன் கூடிய மகிழ்ச்சி': நீண்ட நாளுக்கு பின் பள்ளிக்கு வருவது, ஆசிரியர்களை நேரில் பார்ப்பது, உத்வேகத்துடன் கூடிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நேரில் வந்து படித்தால், தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்.


- டி.அபிநயா, பிளஸ் 2 மாணவி, கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X