பெ.நா.பாளையம்;'கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பெண் கவுன்சிலர்களது குடும்பத்தினர், நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என, ஊராட்சி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு நகல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 ஊராட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலையீடு மற்றும் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுற்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று, ஊராட்சி நிர்வாகம் சிறப்புற நடந்து வருகிறது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகத்தில் ஆங்காங்கே நடைபெற்றதாக வருகின்ற சில நிகழ்வுகள், ஊராட்சி நிர்வாகத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை.மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், பெண் பிரதிநிதிகளுக்கான இட ஒதுக்கீட்டை, 33.3 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டதோடு, 2019ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், இந்த விகிதாசார அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தற்போது மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீதத்திற்கு அதிகமானோர் பெண் பிரதிநிதிகளாக உள்ளனர்.தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ன் படி, கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.சில ஊராட்சிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் கவுன்சிலர்களின், கணவர், சகோதரர், தந்தை அல்லது இதர குடும்ப உறவினர்களின் குறுக்கீடுகள் ஊராட்சி நிர்வாகத்தில், அதிகளவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள், சட்டத்துக்கு புறம்பானவை என்பதோடு அல்லாமல், அரசால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வுகளை அவமதிக்கும் செயலாகும். எனவே, பெண் பிரதிநிதிகள் தலைமை பதவி வகிக்கின்ற மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மூன்றடுக்கு ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள், நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.கிராம ஊராட்சிகளை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கண்காணிக்க வேண்டும். வட்டார ஊராட்சிகளை, வட்டார வளர்ச்சி அதிகாரி கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சிகளை, மாவட்ட ஊராட்சி செயலாளர் கண்காணிக்க வேண்டும்.மேற்கண்டவாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE