தானியங்களை அடமானமாக வைத்து கடன் பெறலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தானியங்களை அடமானமாக வைத்து கடன் பெறலாம்

Added : செப் 03, 2021
Share
கூட்டுறவு வங்கிகள் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் கடன்கள், புதிய திட்டங்கள் குறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் அ.ஜீவாவுடன் நேர்காணல்:தேசிய வங்கியுடன் போட்டியிடும் அளவிற்கு கூட்டுறவு வங்கிகள் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதா.பணப் பரிமாற்றத்தில்ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி., போன்ற வசதிகள் வந்து விட்டன. எங்களது 'ருபே' கார்டுகளை வைத்து
 தானியங்களை அடமானமாக வைத்து கடன் பெறலாம்

கூட்டுறவு வங்கிகள் சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் கடன்கள், புதிய திட்டங்கள் குறித்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் அ.ஜீவாவுடன் நேர்காணல்:

தேசிய வங்கியுடன் போட்டியிடும் அளவிற்கு கூட்டுறவு வங்கிகள் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதா.

பணப் பரிமாற்றத்தில்ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி., போன்ற வசதிகள் வந்து விட்டன. எங்களது 'ருபே' கார்டுகளை வைத்து மற்ற வங்கிகளிலும் பணம் எடுக்கலாம். கோயில், தனியார் நிறுவனங்களின் டெபாசிட்களை பெறுவதிலும் முன்னிலையில் உள்ளோம்.

பயிர்க்கடன் அதிகபட்சமாக எவ்வளவு வழங்குகிறீர்கள்.

ஓராண்டு வரையான பயிர்க்கடனுக்கு ரூ.3 லட்சம் வரை பெறலாம். இதற்கு வட்டி இல்லை. நெல், கரும்பு, வாழை எந்த பயிராக இருந்தாலும்கடன் வாங்கிய ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கான கறவை மாடு, ஆடு, கோழி வளர்ப்பவர்களுக்கு, கிணறு வெட்ட மூன்றாண்டு கால கடன் வழங்குகிறோம். இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தானியங்களை அடமானமாக வைத்து அதன் மதிப்பில் 50 சதவீத கடன் பெறும் திட்டமும் உள்ளது.

பயிர்களுக்கான நகைக்கடன்அதிகபட்சம் எவ்வளவு வழங்கப்படும்.

ரூ.3 லட்சம் வரை தரப்படுகிறது.

சில வங்கிகளில் சிறிய நகைகள், ஒரு பவுனுக்கு குறைவான நகைகள் அடமானமாக பெறுவதில்லை. இங்கு எப்படி.

இது எளியவர்களுக்கான வங்கி. கம்மல், மூக்குத்தி, மோதிரம் போன்ற சிறுநகைகளையும் மக்கள் அடமானமாக வைத்து நகைக்கடன் பெறுகின்றனர். மக்கள் சேவையே இங்கு முக்கியம். பயிர்க்கடன் அல்லாத நகைக்கடனுக்கு தனி நபர் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

விவசாயம், நகைக்கடன் தவிர வேறென்ன சேவைகள் உள்ளன.

எங்களது வங்கிகளில் சிறு வணிக கடனுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சாலையோர பூ வியாபாரிகள்,இட்லி கடை நடத்துபவர்கள், சிறு காய்கறி பிசினஸ் செய்பவர்கள், அழகுநிலையம், சலுான் கடை வைத்திருப்பவர்கள் தங்களது தொழில் மூலதனத்திற்காக ரூ.50ஆயிரம் வரை கடன் பெறலாம். இதை வாரந்தோறும் தவணை முறையில் அதிகபட்சம் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

மகளிர் தொழில்முனைவோர் கடன் ரூ.3 லட்சம் வரையும் பெறலாம். அதுமட்டுமின்றி வீட்டுக்கடன், வீட்டு அடமானக்கடன் வழங்குகிறோம்.

மகளிருக்கு அதிக கடன்கள் வழங்கியதால் கிடைத்த விருது குறித்து.

2019 - 2020ம் ஆண்டில் மதுரை, தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு வங்கிகளில் 678 குழுக்களுக்கு ரூ.30.26 கோடி கடன் வழங்கியதற்காக மதுரை மாவட்ட அளவிலான விருது கிடைத்தது. மார்ச் 2021 வரை 967 குழுக்களுக்கு ரூ.30.67 கோடி கடன் வழங்கியுள்ளோம்.

மற்ற வங்கிகளை விட டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 6.25 சதவீத வட்டி, மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீத வட்டி வழங்குகிறோம். அனைத்து வங்கிகளிலும் லாக்கர் வசதி உள்ளதால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தி பயன்பெறலாம். மொபைல் பேங்கிங் வசதியும் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X