பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை வேணுமா, இளைஞர்களே.. வழிசொல்கிறார் உதவி இயக்குனர் பிரபாவதி

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு துறை வழிகாட்டும்' என, மாவட்ட வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பிரபாவதி கூறினார். இத்துறையின் வேலைகள் என்ன?வேலை வாய்ப்புக்கான பதிவுகள், பதிவை புதுப்பித்தல், கூடுதல் தகுதி பதிவு, முன்னுரிமை பதிவு, அரசு துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு கல்வித் தகுதி, பதிவு மூப்பு, வயது
 வெளிநாட்டில் வேலை வேணுமா, இளைஞர்களே.. வழிசொல்கிறார் உதவி இயக்குனர் பிரபாவதி

திண்டுக்கல் : 'வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு துறை வழிகாட்டும்' என, மாவட்ட வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பிரபாவதி கூறினார்.

இத்துறையின் வேலைகள் என்ன?


வேலை வாய்ப்புக்கான பதிவுகள், பதிவை புதுப்பித்தல், கூடுதல் தகுதி பதிவு, முன்னுரிமை பதிவு, அரசு துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு கல்வித் தகுதி, பதிவு மூப்பு, வயது வரம்பு, முன்னுரிமை அடிப்படையில் தகுதியானோரை பரிந்துரைப்பதுதான். வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவு, அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் குறித்த தகவல்கள் பராமரிக்கும் சிறப்பு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.தொழில் நெறி வழிகாட்டும் பிரிவு சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், அதுசார்ந்த நுாலகமும் உள்ளது. தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள், திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தல், வெளிநாட்டு வேலைக்கு வழிகாட்டும் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.

மாவட்டத்தில் இதுவரை எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர்?


தற்போது வரை 95 ஆயிரத்து 940 பெண்கள் உட்பட ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 718 பேர் பதிவு செய்துள்ளனர்.

இத்துறையில் பதிவு செய்தால் உடனே வேலை கிடைக்குமா?


அரசு துறைகளால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு, முன்னுரிமை மற்றும் வயது அடிப்படையில் பதிவு மூப்பு வரிசைப்படி தகுதியானோரை பரிந்துரை செய்வோம். அதன்படி அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற தகுதி எதுவும் உண்டா?


நிச்சயமாக. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் உள்ளவர்கள் 3 ஆண்டுகளுக்கும், கல்வித் தகுதியை பதிவு செய்து ஓராண்டு நிறைவுற்ற மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகளுக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப உதவித் தொகை பெறலாம்.

வேலை வாய்ப்பு தொடர்பாக தரும் பயிற்சிகள் என்னென்ன?


அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோருக்கு மெய்நிகர் கற்றல் www.tamilnaducareerservices.tn.gov.in இணையதளத்தில் போட்டித் தேர்வு பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஆயிரக்கணக்கானோர் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட திறன் அலுவலகம், பிற துறைகள் நடத்தும் குறுகிய கால இலவச திறன் பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்களை தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறதா?


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'வேலைவாய்ப்பு வெள்ளி' யாக கடைபிடித்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம். ஒவ்வொரு காலாண்டுக்கும் மாவட்டத்தின் பல பகுதிகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேவையான பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்கின்றனர். வேலை தேடும் இளைஞர்கள், வேலை அளிக்கும் நிறுவனங்களை இணைய வழியாக இணைத்து வேலை வாய்ப்பு பெற்றுத்தர www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இதில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம். இச்சேவை முற்றிலும் இலவசமே.

எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்?


வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 4 ஆயிரத்து 101 பேர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வெளிநாடு வேலை வாய்ப்பு உள்ளதா?


வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமும் அரசால் நடத்தப்படுகிறது. இதன்மூலம் சட்டபூர்வமாக, பாதுகாப்பாக வெளிநாடுகளில் வேலை பெற வழிகாட்டுதல்கள், முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வகையில் 10 ஆயிரத்து 350 பேர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதுகுறித்த விபரங்களை omcmanpower.com ல் பார்க்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X