குன்னுார்: குன்னுாரில் நடக்கும் விதிமுறை மீறிய பணியால், அரசு மருத்துவமனை இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது; ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகே, பொக்லைன் பயன்படுத்தி தனியார் கட்டுமானத்துக்காக மண் தோண்டப்பட்டதில், அரசு மருத்துவமனை நடைபாதை விரிசல் ஏற்பட்டது. இதை சீரமைப்பதாக கூறி, மண் தோண்டப்பட்டதால், மண்சரிவு ஏற்பட்டு இருவர் காயமடைந்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், மீண்டும், 24 அடி உயரத்துக்கு மண் தோண்டப்பட்டது. இதனால், நேற்று அதிகாலை மீண்டும், மண் சரிந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. அரசு மருத்துவமனையின், ஆக்சிஜன் பிளான்ட் பகுதியில் விரிசல் ஏற்பட்டதால், ஸ்கேன் பிரிவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில், வருவாய்துறையினர், ஆய்வு மேற்கொண்டனர். பணி மேற்கொள்ளும் முன்னாள் கவுன்சிலர் யோகேஷ் கண்ணனுக்கு, விதிமீறியதற்காக, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். குன்னுார் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மூன்று மின்கம்பங்கள் சேதமானதற்கு, 46 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மணிவண்ணன் ஆய்வு செய்த பின், அதிகாரிகளிடம் கூறுகையில்,''மருத்துவமனையின் 'செப்டிக் டேங்க்' பகுதியில், மண்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நவீன இயந்திரங்களை வைத்து போர்க்கால அடிப்படையில், தடுப்பு சுவர் அமைக்காவிட்டால் பாதிப்பு அபாயம் உள்ளது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வரவழைத்து, பாதிப்பு ஏற்படாத வகையில், தடுப்புப் பணி வேகமாக நடந்து வருகிறது.