ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், அவர் அளிக்கும் வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுததும் என தெரிகிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி, காவலாளி ஓம் பகதுார் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
கோடநாடு வழக்கில், ஆக., 13ம் தேதி ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், இவ்வழக்கில் சில தகவல்களை தெரிவிப்பதாக குற்றச்சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான் போலீசாரிடம் மனு தாக்கல் செய்தார். அதன்பின், சம்மன் அனுப்பிய போலீசார், ஆக., 17ம் தேதி சயானிடம், 3 மணி நேரம் விசாரணை நடத்தி வீடியோவில் பதிவு செய்தனர். அதில், சில முக்கிய தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. பின், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை அமைத்து ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., சுரேஷ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் வேல்முருகன் குழுவினர், சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை, நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில், டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விசாரித்து வருகின்றனர். இவர்களுடன் கூடுதலாக ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி சேர்க்கப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று காலை, 11:00 மணி முதல், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடந்தது . அவர்களுடன் மேற்கு மண்டல ஐஜி., சுதாகரும் இணைந்து விசாரணை நடத்துவதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறை சென்ற பிறகு, எஸ்டேட் நடராஜன் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது. அவர் தான் அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இச்சூழ்நிலையில், தற்போது அவரிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் அவர் அளிக்கும் வாக்குமூலம், இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.