மாதத்துக்கு 2 கோடி டோஸ் தடுப்பூசி தேவை : மத்திய அரசிடம் தமிழக அமைச்சர் கோரிக்கை| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மாதத்துக்கு 2 கோடி 'டோஸ்' தடுப்பூசி தேவை : மத்திய அரசிடம் தமிழக அமைச்சர் கோரிக்கை

Updated : செப் 04, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (3+ 1)
Share
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நேற்று டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழக சுகாதார திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி: சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலம் தமிழகம். மாதத்துக்கு 2 கோடி டோஸ் தடுப்பூசி கூட போடக் கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளதால், கூடுதல்
மாதம் 2 கோடி ,டோஸ், தடுப்பூசி ,மத்திய அரசு, அமைச்சர் கோரிக்கை

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நேற்று டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழக சுகாதார திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.அதன்பின், அவர் அளித்த பேட்டி: சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ள மாநிலம் தமிழகம். மாதத்துக்கு 2 கோடி டோஸ் தடுப்பூசி கூட போடக் கூடிய அளவுக்கு வசதிகள் உள்ளதால், கூடுதல் தடுப்பூசி தரும்படி மத்திய அரசிடம் கேட்டோம்.


வலியுறுத்தல்


ஜுனில் 52 லட்சம், ஜூலையில் 57 லட்சம், ஆகஸ்டில் 57 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு போடப்பட்டன. ஜூலையில் 19 லட்சம், ஆகஸ்டில் 34 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன.தடுப்பூசி போடுவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதே, கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீட்டிற்கு காரணம். இந்த மாதத்துக்கு 1.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் தருவதாக கூறி, இரு நாட்களில் 16 லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டுள்ளன.ஆனால், இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி தர வேண்டுமென்றும், கேரள - தமிழக எல்லையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதால், அது குறித்தும் மத்திய அரசிடம் கேட்டு உள்ளோம்.

அரியலூர் போன்ற மாவட்டங்களில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததால், இந்த தொற்று ஏற்பட்டிருப்பதாக கூற முடியாது. அதற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். துவக்கத்திலேயே இப்பிரச்னை கண்டறியப்பட்டு உள்ளதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை. சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் கூறினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகளை துவங்கிட வேண்டும். புதுச்சேரி அல்லது அருகில் உள்ள கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும்.கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இவை குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார். புதிய மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என கேட்டபோது, அடுத்த மாதம் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றார்.
நல்ல முடிவு

செங்கல்பட்டு, குன்னுார் தடுப்பூசி மையங்களை திறப்பது குறித்து கேட்டதற்கு, மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பேசி நல்ல முடிவை எடுக்கலாம் என்றார். வரும் 13 வரை சட்டசபை கூட்டத் தொடர் நடக்க உள்ளதால், அதற்குள் 'நீட்' தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகம் சாதிக்க... இதை செய்வாரா முதல்வர்?



தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட்டு 100 சதவீத இலக்கை எட்டும் முயற்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிர மணியன் இறங்கியுள்ளார். இதற்கேற்ப மத்திய அரசும், தன் பங்கிற்கு தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை தாராளப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை இன்னும் வெற்றிகரமாக செயல்படுத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிடலாம்.'ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் வசிக்கும் மக்களிடம், தி.மு.க., நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தி, 100 சதவீத இலக்கை எட்ட வைக்க வேண்டும்.

'அவ்வாறு எந்த உள்ளாட்சி அமைப்பில் விரைந்து 100 சதவீத இலக்கு அடையப்படுகிறதோ, அப்பகுதி கட்சி நிர்வாகிக்கு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். அதேபோன்று, எந்த சட்டசபை தொகுதியில், 100 சதவீத இலக்கு அடையப்படுகிறதோ, அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு உரிய அங்கீகாரம், பதவி வழங்கப்படும்' என அறிவித்தால், தங்களுக்கு 'சீட் நிச்சயம்' என்று கட்சியினர் உழைப்பர்.இதன் வாயிலாக 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைந்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் மாறும் என்பதில் சந்தேகமில்லை.- நமது டில்லி நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X