மதுரை : ரேஷன்கடைகளில் மத்திய அரசு ஒதுக்கீடு அரிசி வரவில்லை என பணியாளர்கள் தவறான தகவலை கூறி விநியோகிக்க மறுக்கின்றனர் என மதுரையில் பா.ஜ., ஹரீப் கல்யாண் யோஜனா பொறுப்பாளர்கள் ஹரிச்சந்திரன், ராஜா குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரியிடம் மனு வழங்கிய பின் அவர்கள் கூறியதாவது: 2019 முதல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரிசி ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய அரசு கொரோனா நிவாரணமாக கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2021 நவ., வரை நபருக்கு ஐந்து கிலோ வீதம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் 2021 ஜூன், ஜூலை, ஆக., ஒதுக்கீடு அரிசி மக்களுக்கு இதுவரை விநியோகிக்கப்படவில்லை.
90 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளுக்கு நபருக்கு 6 கிலோவும், முன்னுரிமை கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசும் தெளிவுபடுத்த மறுக்கிறது. மத்திய அரசு ஒதுக்கீடு அரிசியை முறையாக விநியோகிக்க ரேஷன்கடை பணியாளர்கள் முன்வர வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE