வில்லியனுார்-'புதுச்சேரியை நுாறு சதவிகித கொரோனா தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதே இலக்கு' என, கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து 48 மணி நேர கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் நேற்று காலை துவங்கியது. முகாம் நாளை காலை 8 மணிக்கு முடிவடைகிறது.துவக்க நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கலெக்டர் (பொறுப்பு) ரிஷிதாகுப்தா, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் திலகம், தாசில்தார் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:நாட்டில் முதல் முறையாக வில்லியனுார் சுகாதார நிலையத்தில் 48 மணி நேர கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டுள்ளது. வில்லியனுார் பகுதியில் 59 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும். இதுவரை 53 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும் முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். புதுச்சேரியில் கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். புதுச்சேரியை நுாறு சதவீத கொரோனா தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். புதிய சுகாதார கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE