கப்பலோட்டிய தமிழனை கொண்டாடுவோம்| Dinamalar

கப்பலோட்டிய தமிழனை கொண்டாடுவோம்

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (12) | |
உச்சபட்ச செல்வத்தையும்,வறுமையையும் அனுபவித்த ஒரே மனிதன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரமாக மட்டுமே இருக்க முடியும்.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்பவர்நாட்டு விடுதலைக்காக தன்னையே மெழுகாய் உருக்கிக் கொண்ட ஒப்பற்ற தியாகிவசதியான வழக்கறிஞர் வீட்டுப் பிள்ளையாய் பிறந்து சட்டப்படிப்பையே பட்டப்படிப்பாக படித்து சிறந்தlatest tamil newsஉச்சபட்ச செல்வத்தையும்,வறுமையையும் அனுபவித்த ஒரே மனிதன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரமாக மட்டுமே இருக்க முடியும்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழ்பவர்
நாட்டு விடுதலைக்காக தன்னையே மெழுகாய் உருக்கிக் கொண்ட ஒப்பற்ற தியாகி
வசதியான வழக்கறிஞர் வீட்டுப் பிள்ளையாய் பிறந்து சட்டப்படிப்பையே பட்டப்படிப்பாக படித்து சிறந்த வழக்கறிஞர் எனப் பெயரெடுத்தவர்.தனது சட்ட அறிவு ஆற்றல் அனைத்தையும் ஏழைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியவர்.


latest tamil newslatest tamil news


மகாகவி பாரதியின் நட்பு இவரை விடுதலை வேள்வியில் ஈர்த்தது பின் இதுதான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்ற உறுதியை ஏற்கவைத்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவரானார்.
வணிகம் செய்ய வந்து நாட்டையே தனதாக்கிக் கொண்டவர்களை அதே வணிக உத்தி மூலம் வீழ்த்த வேண்டும் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக தனது சொத்துக்கள் அனைத்தும் விற்றும் நிதி திரட்டியும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனி ஆரம்பித்து இரண்டு கப்பல்களை வெற்றிகரமாக இயக்கிகாட்டினார்.
இதை பொறுக்கமுடியாத ஆங்கிலேயர்கள் வ.உ.சி.,யை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது பொய்க்குற்றம் சாட்டி இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் தள்ளினர்.இரட்டை ஆயுள் தண்டனை என்பது அன்று நாற்பது ஆண்டு கால சிறைத்தண்டனையாகும்.


latest tamil news


காற்றோட்டமோ, சுகாதாரமோ இல்லாத தனியறையில் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு நிலையில் வ.உ.சி. அடைக்கப்பட்டார். தலையை மொட்டை அடித்தார்கள். முரட்டுத்துணியாலான சாக்கு போன்ற சட்டை அளிக்கப்பட்டது.
ஆயிரமாயிரம் பேருக்கு அறுசுவையோடு உணவு படைத்த அவருக்கு புளித்தும், புழுத்தும் போன கேழ்வரகு களியைக் கொடுத்தார்கள். அரிசி சோறு வேண்டுமென்று கேட்டதற்காக மூன்று நாட்கள் எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். அளிக்கிற உணவில் கல்லும், மண்ணும் கலந்திருந்தன.
முதலில் சணல் கிழிக்கும் எந்திரத்தைச் சுற்றும் வேலையைச் செய்ய வைத்தார்கள். கொடுத்து சிவந்த அந்த கரங்களின் தோல் கிழிந்து, ரத்தம் வழிந்தது. பார்த்தவர் கண்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன.
'கைகளில்தானே ரத்தம் வருகிறது' என எண்ணெய் ஆட்டும் செக்கில் மாட்டுக்குப் பதிலாக அந்த மாமனிதரைப் பூட்டினார்கள். கொளுத்திய வெயிலில் நாள் முழுக்க செக்கிழுக்க வைத்தார்கள். அதில் தடுமாறி கீழே விழுந்த போதெல்லாம் மாட்டை அடிப்பதைப் போன்றே அடித்தார்கள். தனது தோள்களில் செக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு இழுத்தை பார்த்து சிறையில் அழாதவர்களே கிடையாது.
அவரது பிறப்பு வளர்ப்பு அறிவு ஆற்றல் தியாகம் இதை எல்லாம் உணராத ஆங்கில அரசின் இந்த அராஜக செயல்களை தாங்கிக் கொள்ள முடியாத சிறையில் இருந்த வ.உ.சி.,யின் ஆதரவாளர்கள் சிறைக்குள்ளே கலகம் செய்தனர் வ.உ.சி.,க்கு பதிலாக செக்கை அவர்களே இழுத்தனர்.
இதனால் இன்னும் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் வ.உ.சி.,யை சக கைதிகள் பார்க்க முடியாதபடி கோவை சிறையில் இருந்து இன்றயை கேரளாவில் உள்ள கண்ணனுார் சிறைக்கு மாற்றினர்.1908-ல் சிறை சென்றவர் பின் ஆறு ஆண்டுகள் கழித்து மெலிந்த தேகத்துடன் வந்தவரை தேசம் மறந்திருந்தது.
சிறையில் இருந்து வெளிவந்தவருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலேயரின் சூழ்ச்சி காரணமாக,அவர்களை எதிர்த்து கப்பல் கம்பெனியை நடத்த முடியாது என சுதேசி கப்பல் இயக்குனர்கள் ஒரு சேர முடிவெடுத்து வ.உ.சி.,க்கு சொல்லாமலே கம்பெனியை மூடிவிட்டனர் அதைவிட கொடுமை யாரை எதிர்த்து வ.உ.சி.,கப்பலை இயக்கினாரோ அவர்களுக்கே கப்பல்களையும் விற்றுவிட்டனர் அது மட்டுமின்றி கம்பெனியை நடத்த தெரியாமல் நஷ்டப்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டும் வ.உ.சிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.எல்லாவற்றையும் கேட்டு வ.உ.சி.,யால் வேதனைப்படத்தான் முடிந்தது.
அதன்பிறகு பெரிய அவமானங்களையும் துயரங்களையும் அதன் பிறகு வாழ்ந்த 24 ஆண்டுகளில் அனுபவித்தார்,அவர் எங்கு போனாலும் அவரை வாழவிடாமல் தடுத்து முடக்கி ஆனந்தப்பட்டனர் ஆங்கிலேயர்கள்.
சிறைக்குப் போய்விட்டு வந்ததால் வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமம் ரத்தானது. அதனால் தனக்கு தெரிந்த வக்கீல் தொழிலைச் செய்ய முடியவில்லை. நண்பரான தண்டபாணியின் அரிசிக்கடையில் மாதம் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள், வ.உ.சி.,யின் தொடர்பைக் காரணம் காட்டி தண்டபாணியின் அரிசிக்கடை உரிமத்தையே ரத்து செய்தனர். கடை மூடப்பட்டது. ஊருக்கே படி அளந்தவரின் குடும்பத்திற்கு கிடைத்து வந்த அரை வயிற்று அரிசி கஞ்சிக்கும் ஆபத்து வந்தது.
மனைவி, மக்களைக் காப்பாற்ற மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தார். இதற்காக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் 'பிராமிசரி நோட்' எழுதி கொடுத்து விட்டு, 10 ரூபாய் கடன் வாங்கினார்.அந்த பத்து ரூபாய் கடனை அடைக்கமுடியாமல் பல தவனை கேட்டிருக்கிறார் அப்படியும் அடைக்கமுடியாமல் வியாபாரத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டார்.
வேலை தொழில் வியாபாரம் எல்லாம் கைவிட்ட நிலையில் சென்னை பெரம்பூர் அஞ்சலகம் அருகே ஒரு சிறிய வீட்டில் குடியேறி, ஆன்மிகச் சொற்பொழிவு, புத்தகம் எழுதுதல் எனக் காலங்கழித்தார். அருமையான மனையியல் மற்றும் இலக்கிய நூல்களை எழுதி குவித்தார். அதெல்லாம் தமிழுக்கு அழகு சேர்த்தன ஆனால் எழுதிய வ.உ.சி.,யை பல நாள் குடும்பத்துடன் பட்டினி போட்டன.
'வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று சந்தமில் வெண்பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்நாச்சொல்லும் தோலும் நலிந்து'
இப்படி நண்பர் ஒருவருக்குத் தன் நிலையைக் கவிதையாக வடித்து சிதம்பரனார் எழுதிய கடிதம் படிக்கும் போதே நெஞ்சைப் பிசைகிறது.ஆனாலும் தனது கையறு நிலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தேசமே பெரிதென தனது சொற்பொழிவுகளாலும் எழுத்தாலும் வாழ்ந்து மறைந்திட்டார்.
நாட்டுப்பற்றுக்கும், தியாகத்துக்கும், போர்க்குணத்துக்கும், அஞ்சாமைக்கும், அயராத உழைப்புக்கும் அரிய உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள்தான் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று துவங்கி அடுத்த செப்டம்பர் வரை அவரது பிறந்த நாளை கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஓராண்டு காலத்தில் வ.உ.சி.யின் தியாக வரலாற்றையும், போராட்டக் குணத்தையும், அவர் அனுபவித்தக் கொடுமைகளையும் இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரனாரின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும்.
வரும் தலைமுறை வ.உ.சி.,யின் தியாகத்தை அறிய வேண்டும் காரணம் வ.உ.சி.,வேறு நாடு வேறு அல்ல
-எல்.முருகராஜ்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X