எம்.ஜி.ஆராக மாறுங்கள் முதல்வரே!

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
முன்பு எப்போதாவது இப்படி பார்ப்பதுண்டு. ஆனால் இப்போது அடிக்கடி வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது. என்னது என்கிறீர்களா... பத்திரிகைகளில் வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள்; சாலைகளில் ரத்தம் தோய்ந்த விபத்துகள்; உறவு களுக்குள் பிரிவு; கணவன் - மனைவி இடையே விவாகரத்து; கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதல்; ஒரே அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடையே தகராறு.
உரத்தசிந்தனை

முன்பு எப்போதாவது இப்படி பார்ப்பதுண்டு. ஆனால் இப்போது அடிக்கடி வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.

என்னது என்கிறீர்களா... பத்திரிகைகளில் வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள்; சாலைகளில் ரத்தம் தோய்ந்த விபத்துகள்; உறவு களுக்குள் பிரிவு; கணவன் - மனைவி இடையே விவாகரத்து; கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதல்; ஒரே அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடையே தகராறு. இதற்கெல்லாம் காரணம், 'ஆல்கஹால்' என மருத்துவத்தில் அழைக்கப்படும் மது என்ற அரக்கன் தான்.

என் 'கிளீனிக்'கிற்கு குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் முகத்தில், தோள்பட்டையில், கைகளில் ரத்த காயங்களுடன் வந்தார்; பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 'என்னாச்சும்மா?' என்ற போது, 'தண்ணீர் எடுக்கும் போது தவறி விழுந்து விட்டேன்' என்றார். நம்பவில்லை நான். 'அது சரி. அதற்கு எப்படிம்மா இப்படி அடிபடும்...' எனக் கனிவுடன் கேட்டு, 'நடந்ததை சொல்லுமா; அப்ப தான் சரியான சிகிச்சை தர முடியும்' என்றதும், தாளமாட்டாமல் பொல பொலவென்று அழுதவர், 'வீட்டுக்காரர் குடிக்க பணம் கேட்டு, நான் கொடுக்காததால் அவர் அடித்த காயங்கள் இவை' என்றார்.

'நேற்று தான் என்றில்லாமல், கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித் தான்' என, அந்த பெண் சொன்னதும், எனக்கு உலகமே இருட்டிக் கொண்டு வந்தது. மது தரும் போதைக்காக கட்டிய மனைவியை கைநீட்டி அடிப்பரா... அதுவும் இந்த அளவுக்கா என நினைத்த போது, மதுவின் வெறி புரிய ஆரம்பித்தது.

சமீப காலமாக, இது போன்ற காயங்களுடன் வரும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களை பார்த்த உடனேயே தெரிந்து விடும், 'இந்த பரிதாப ஜீவன்கள் கணவன் அல்லது தந்தை என்ற மனித மிருகத்திடம் அடி வாங்கி வந்துள்ளது' என்று.

தமிழகத்தில், 'டாஸ்மாக்' எனும் மது அரக்கன் விஸ்வரூபமெடுத்து வந்து விட்டதை நான் புரிந்து கொண்டேன்; மக்களும், ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை இது.

ஒரு காலத்தில், மதுக்கடைகள் இருக்கும் தெரு வழியாகவே மக்கள் செல்ல மாட்டார்கள். அப்படியே சென்றாலும் மக்கள் முகம் சுளித்து சென்றது ஒரு காலம். இப்போது முகம் சுளிக்க ஆரம்பித்தால், அந்த முகத்தோடு தான் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர வேண்டும். அந்த அளவிற்கு தமிழகத்தில் எங்கெங்கு காணினும், 'டாஸ்மாக்' கடைகளே.


வெற்றிவேட்கை


ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு தெருவிலோ, ஒரு கிராமத்தின் கடைக்கோடியிலோ தான் முன்பு, மதுக் கடைகள் இருந்தன. அந்த கடைகளுக்கு சென்றவர்களும் முகத்தை மூடி, வயல்களில் இறங்கி, முக்காடு போட்டு தான் சென்றனர். அந்த அளவுக்கு, பிறர் தன்னை பார்த்து விடக் கூடாது என பயந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், தெருவுக்குத் தெரு மதுக் கடைகள். அதுவும், 'கார்னர் ஷாப்' என்று சொல்லப்படும் இரண்டு தெரு சந்திக்கும் முக்கியமான இடத்தில் இருக்கும் கடைகள் மதுக் கடைகளாக மாறிவிட்டன. 'மது குடிக்க மாட்டேன்' என, மனக் கட்டுப் பாட்டோடு ஒரு தெருவைத் தாண்டினாலும், அடுத்தடுத்த தெருக்களை தாண்டுவது கடினம் தான். மக்கள் குடியிருப்பு பகுதி, அலுவலகங்கள் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் என எல்லாவற்றின் அருகிலும் மதுக்கடைகளும் இருக்கின்றன.

பகல் 12:00 மணிக்கு கடை திறந்த போது அதற்குள் தங்கள் வேலைக்கு, தொழிலுக்கு போய் விடுபவர்கள், அப்படியே வீட்டுக்குச் சென்று, வேலையில், தொழிலில் மூழ்கி விடுவர். ஆனால், இப்போது காலை 10:00 மணிக்கே கடை திறப்பதால், வேலைக்கு, தொழிலுக்கு போவதற்கு எடுக்கும் வண்டி, 'கடை'யில் போய் தான் நிற்கிறது. சரி, உற்சாக பானம் ஏற்றிக்கொண்டு புத்துணர்வோடு வேலைக்கு செல்கின்றனர் என்றால், 'சரக்கை' உள்ளே தள்ளிய பிறகு, உற்சாகமாவது, புத்துணர்ச்சியாவது... சம்பந்தப்பட்டவரை சாக்கடைக்குள் இருந்து மீட்டு எடுத்து தான் வீட்டில் சேர்க்க வேண்டி இருக்கிறது. இது, தமிழகம் முழுதும் உள்ள பெண்களுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது.

மது அருந்திய பின், மற்றவரிடம் உரையாடுவதை மானக்கேடாக நினைத்து, துணியால் வாயை மூடி, ஓரமாக ஒதுங்கி சென்றது ஒரு காலம். மது அருந்திவிட்டு போலீசிடமே வம்பு வளர்ப்பது இந்த காலம். மேலும், போலீஸ் பாதுகாப்போடு மது அருந்துவது இந்த, கொரோனா காலம்.

பிச்சை எடுத்தாவது கல்வியை கற்க வேண்டும் என்ற பொருள்பட, 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றது வெற்றிவேட்கை. ஆனால், இன்றைய இளைய சமுதாயம், பிச்சை எடுத்தாவது, எந்த குற்றத்தை செய்தாவது மது குடித்தாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளது; இது மிகவும் கொடுமையானது. நான் முன்னே சொன்னது போல, மது குடிக்க பணம் கேட்டு மனைவியை அடிக்கும் கணவனின் குணாதிசயங்களை, மனைவிமார் சொல்லும் போது வேதனை பீறிடும்.

'வாங்கிய சம்பளம் முழுதையும் மதுவுக்கு தொலைத்து வீட்டிற்கு வந்து குழந்தைகளையும், என்னையும் அடிப்பார். 'அதன் பின் குடிக்க காசு இல்லாவிட்டாலும், அந்த வெறுப்பையும் எங்கள் மீது தான் காட்டுவார்' என்று அந்த பெண்கள் சொல்லும் போது மனம் துடிக்கும்; நெஞ்சு வெடிக்கும்.

எம்.ஜி.ஆர்., படங்களில், பெண்ணிடம் ஒருவன் அத்துமீறும் போது, எங்கிருந்தோ எம்.ஜி.ஆர்., வருவாரே... அதுபோல, தைரியமாக ஒருவன் வந்து, இதற்கு ஒரு முடிவு கட்ட மாட்டானா என உள்ளம் ஏங்கும்.


பாதிப்பு


ஆணுக்கு மலிவு விலையில் மது; மகளிருக்கு இலவச கிரைண்டர், மிக்சி, 'டிவி' மற்றும் மின் விசிறி. பள்ளி குழந்தைகளுக்கு இலவச லேப்டாப், பாடப்புத்தகங்கள், செருப்பு, பை. அத்துடன் இலவசமாக கிடைக்கும் அடி, உதையை எப்போது நிறுத்தப் போகிறது இந்த சமூகம்?

'தந்தையைப் போல தனயன்' என பழமொழி உண்டு. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என கொன்றைவேந்தன் சொல்கிறது.

நல்ல 'குடி'மகனாக இருக்கும் தந்தையை பார்த்து, ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? 'குடி'மகன் உள்ள குடும்பத்தின் குழந்தைகள், பெண்கள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பர். அந்த வீட்டின் குழந்தைகள், பெண்களை எளிதில் அடையாளம் காணலாம். அவர்கள் கண்கள் பயத்துடன், நிச்சயமற்ற தன்மையுடன் ஒளி இழந்து காணப்படும்.

'மதுக்கடைகளை மூடுவதா; முடியவே முடியாது. இரண்டு நாள் மூடினாலும், 2,000 பேர் இறந்து விடுவர்' என, சொல்லிக் கொண்டு இருந்த வேளையில், மதுக்கடைகளை கொரோனா மூட வைத்தது. 'இப்படியே இருந்து விடக் கூடாதா...' என குடும்பத்தலைவியர் பலரும் ஏங்கினர். 'பணம் இல்லாவிட்டாலும், அடி, உதை வாங்காமல் குழந்தைகளோடு நிம்மதியாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம். என் கணவர் சம்பளத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தாலே போதும்' என்றனர், பெண்கள்.

ஆனால், ஊரடங்கு தளர்வுகளில் முதலில் அறிவிக்கப்பட்ட தளர்வு, மதுக்கடைகளுக்குத் தான். மதுவில், ஆல்கஹால் இருக்கும் ரசாயனம் தான் போதை அளிக்கிறது. அதுவே உடல் நலத்திற்கும் உலை வைப்பது.சண்டையிட்டு ஒருவரையொருவர் தாக்கி கொள்ளுதல், கத்திக்குத்து, சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழத்தல் போன்றவை மதுவால் உடனடியாக நடக்கும் பிரச்னைகள்.

கொரோனா மது முடக்க காலத்தில், மேற்சொன்ன காரணங்களால், மருத்துவமனைகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது.நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரலின் வேலை, நம் உடலுக்குள் வரும் உணவுப் பொருளில் உள்ள நச்சுக்களை பிரித்து, நம் உடலை சம நிலையில் வைத்துக் கொள்வது தான். ஆனால், தெரிந்தே மது என்ற நச்சுப் பொருளை அடிக்கடி உடலுக்குள் அனுமதிக்கும் போது, கல்லீரல் மிகுந்த வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு, ஒரு காலகட்டத்தில், 'என்னால் முடியல...' எனச் சொல்லி கைவிட்டு விடும்.அப்போது கல்லீரல் மாற்று சிகிச்சை தான் தீர்வாக இருக்கும். ஆனால் அது சாதாரண மனிதர்களுக்கு பலவிதங்களில் சாத்தியமில்லை.

மது அருந்தும் போது, உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதால், எல்லா விதமான நோய்க்கும் அவர்கள் ஆளாவர். குடல் முழுவதும் வெந்து போன நிலையிலேயே இருப்பதால், செரிமான சக்தியும் இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். வெகு விரைவிலேயே கல்லீரல், கணையம், குடல் பகுதிகள் செயல் இழந்து தவிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும்; இதயம் தேவைக்கு அதிகமாய் துடிக்கும்; பக்கவாதம் வரும்; வாய், தொண்டை, உணவுக்குழாய், வயிறு, கல்லீரல், குடல் புற்றுநோய் சுலபமாக வரும். மன நோய், மறதி நோய், பதற்றம் உள்ளிட்ட பல நோய்களும் மது குடிப்பதால் பஞ்சமில்லாமல் வரும்.


தொற்று நோய்


இதன் தொடர்ச்சியாக குடும்ப வன்முறை, வேலை இழத்தல் போன்ற வையும் ஏற்படும். இந்திய அளவில் தமிழகத்தில் தான், மதுவால் கணவனை இழந்த 30 வயதுக்கு உட்பட்ட விதவைப் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்று புள்ளி விபரம் ஒன்று சொல்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டு களாக கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத தொற்று பரவலால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு இழப்பு; எவ்வளவு பொருளாதார செலவழிப்பு... அதை விடவா டாஸ்மாக்கை மூடுவதன் மூலமாக இழப்பு வந்து விடப் போகிறது? ஒவ்வொரு ஆண்டும், மது அருந்துவதால் உண்டாகும் சேதங்களால் உயிரிழப்போர் எத்தனை பேர்; இதுவும் கொரோனா போன்ற ஒரு கொடும் தொற்று நோயே!

நம் மாநிலத்தை ஆண்ட ஒரு முதல்வர் சமீபத்தில், 'ஒவ்வொரு 3 கி.மீ.,க்கும் ஒரு ஆரம்பப் பள்ளியை துவக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். ஆனால் இன்று நடப்பதென்ன... ஒவ்வொரு முக்கால் கிலோ மீட்டருக்கும் ஒரு மதுக்கடை அல்லவா திறக்கப்பட்டு வருகிறது.

முன்னேற வேண்டிய நாடுகளின் தலைவர்கள், நாட்டு மக்களிடம், 'உங்கள் அனைவருடைய கைகளும் இங்கே வேலை செய்வதற்கு தேவை' என்றனர். ஆனால் இங்கோ, உழைக்க வேண்டிய கைகள் டாஸ்மாக்கால் முடங்கிக் கிடப்பது நியாயமா?

ஒரு நாட்டின் வலுவான மற்றும் நிலையான முன்னேற்றம், மக்களை கல்வியில் சிறந்தவர்களாகவும், ஆரோக்கியத்தில், சுகாதாரத்தில் திடமானவர்களாகவும் உருவாக்குவதில் தான் இருக்கிறது.

ஆட்சியாளர்களே... மதுக்கடைகளால் எத்தனை ஆயிரம் கோடிகள் வந்தாலும், அது துாசுக்கு சமம். காலக்கெடு நிர்ணயித்து, 'கடைகளை' கொஞ்சம் கொஞ்சமாக மூடுங்கள். எளிதில் கிடைக்க முடியாதபடி, கடைகளை நீண்ட தொலைவில் அமையுங்கள். மதுவிலிருந்து மீண்டவர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களின் அனுபவங்களை பொது ஊடகங்களில் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். மதுக்கடைகள் இருந்த இடங்களை, பள்ளிகளாகவும், நுாலகங்களாகவும், உயர் கல்வி பயிற்சி இடங்களாகவும், சிறு மருத்துவமனைகளாகவும், மது அடிமை மீட்பு நிலையங்களாகவும் மாற்றுங்கள்; மதுக்கடைகளை முற்றிலுமாக ஒழியுங்கள்.பல குடும்பங்களின் நிம்மதி மீளும்; பல குழந்தைகளின் முகத்தில் புன்னகை பூக்கும்; நாட்டின் பொருளாதாரமும், சுகாதாரமும் மேம்படும்.

மாண்புமிகு முதல்வரே, 'சொல்வதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என அடிக்கடி சொல்வீர்களே, அதன்படி இதையும் செய்வீர்கள் தானே!

டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:

இ - மெயில்: doctorjsharma@gmail.com


மொபைல்: 80560 87139

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
20-செப்-202112:32:17 IST Report Abuse
sankar Karunanithi ed the wine shops in 1971. He later realised the fault and invoked the prohibition in 1974. But MGR deliberately revoked the prohibition in 1980, continuing it till his death and even Jayalalitha dweveloped it by establishing tasmac. How can advise like this supporting MGR.
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
18-செப்-202119:40:05 IST Report Abuse
Krish சினிமா கலாச்சாரமும் , டாஸ்மாக் கடைகளும் எப்போது ஒழிக்கப்படுகிறதோ , அப்போதுதான் தமிழகம் உருப்படும். ஆனால் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்வதே இந்த மூச்சு ஆதாரத்தில்தான் .
Rate this:
Cancel
Tharumar - TPR,இந்தியா
07-செப்-202116:42:13 IST Report Abuse
Tharumar அருமையான, உணர்வுபூர்வமான கட்டுரை இதைப்போல் ஏற்கனவே அனைத்துபத்ரிக்கைகளிலும் வந்து, அனைத்து சமூக ஆர்வலர்களும் களைத்துபோய்விட்டனர். எந்த ஆட்சியாளர்களும் இதை செவி மடுக்கவே மாட்டார்கள். அந்த அளவு இதில் பணம் புரள்கிறது. மக்கள் எழுச்சி ஒன்றே இதற்க்கு ஒரே தீர்வு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X