10 ஆண்டு கால நிதியை 121 நாளில் அளித்த முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'10 ஆண்டு கால நிதியை 121 நாளில் அளித்த முதல்வர்'

Added : செப் 04, 2021
Share
அ.தி.மு.க., - சேவூர் ராமச்சந்திரன்: கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா துவக்கி வைத்தார். தற்போது, 754 கோவில்களில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை, அதிக வருமானம் வரும் கோவில்கள் அனைத்திலும்

அ.தி.மு.க., - சேவூர் ராமச்சந்திரன்:

கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா துவக்கி வைத்தார். தற்போது, 754 கோவில்களில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை, அதிக வருமானம் வரும் கோவில்கள் அனைத்திலும் செயல்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா அரசால் துவக்கப்பட்ட கோவில் திருப்பணிகள், கொரோனா வால் தடைபட்டன. அப்பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும்.கோவிலில் ஐந்து ஆண்டு பணி முடித்தவர்களை வரன்முறைப்படுத்தவும், திருக்கோவில் தொலைக்காட்சி துவக்கவும், அரசாணை வெளியிடப் பட்டது. தேர்தல் நடத்தை விதிகளால் செயல்படுத்த முடியவில்லை. விரைவாக, அந்த தொலைக்காட்சியை அமைக்க வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு:

ஐந்து ஆண்டுகள் கடந்து, கோவிலில் பணிபுரிவோரை வரன்முறைப்படுத்த ஆணை வெளியிட்டதாக தெரிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவித்தீர்கள். அதன்பின், ஓராண்டு ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த முடியவில்லை. அதை செய்து காட்டுகிற முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.திருக்கோவில் தொலைக்காட்சி துவக்க அரசாணை வெளியிட்டீர்கள். அதற்கு நிதி ஒதுக்கவில்லை. அப்போது, நீங்கள் தான் அமைச்சர்.

கடந்த 2006 முதல் 2011 வரை, கருணாநிதி ஆட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு 384.74 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பத்து ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், 332.47 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. பத்து ஆண்டுகளில் ஒதுக்கிய நிதியை, முதல்வர், 121 நாளில் ஒதுக்கியுள்ளார்.

அ.தி.மு.க., - ராமச்சந்திரன்:

2015ல் 2,217 பணியாளர்களை வரன்முறை செய்து ஆணை வழங்க பட்டது.தொலைக்காட்சியை அறநிலையத் துறை தொகுப்பு நிதியில் இருந்து செயல்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டது; அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படாது.

அமைச்சர் சேகர்பாபு:

நீங்கள் அரசாணை பிறப்பித்து ஏன் செய்யவில்லை என்று தான் கேட்டேன். தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் விட்டு சென்ற பணியை முதல்வர் நிறைவேற்றுவார்.இவ்வாறு விவாதம் நடந்தது.


'மாஜி' பேச்சால் சிரிப்பலை!

அ.தி.மு.க., அமைச்சரவையில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், சட்டசபையில் மானிய கோரிக்கையில் பேசினார். அவர் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அதற்கு பதில் அளித்து பேசிய ராமச்சந்திரன் தன் பேச்சை முடிக்கும் போது, 'இத்தகவலை மாண்புமிகு உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்' எனக்கூற, சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, 'அமைச்சர்' என கூறும்படி சொன்னார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X