சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அரசு ஆணையாக உருவான இடஒதுக்கீடு கொள்கை

Updated : செப் 06, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
அரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை. மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட
அரசு ஆணை , உருவான இடஒதுக்கீடு கொள்கை :

அரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை.

மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது.அதற்குப் பின், 73 ஆண்டுகளுக்குப் பின் 1994ல் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, தமிழக அட்வகேட் ஜெனரல் கே.சுப்ரமணியன் ஆகிய நால்வருமே பிராமணர்கள் என்பது தான் வரலாற்று உண்மை.


சட்டசபையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்ற ஜெயலலிதா முன்முயற்சி எடுக்க, அந்த சட்டத்தை அரசியல் சட்டத்தின் 9வது 'ஷெட்யூலில்' சேர்ப்பதற்கான தொடர் நடவடிக்கை களை தமிழக அட்வகேட் ஜெனரல் கே.சுப்ரமணியனும், பிரதமர் பி.வி.நரசிம்மராவும் மேற்கொள்ள, ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இடஒதுக்கீடு சட்டம் அரசி யல் சட்டப் பாதுகாப்பு பெற உதவிய நால்வரில் ஒருவரான தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கே. சுப்ரமணியன், 1993 -- 94ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நிகழ்வுகளையும், 70 ஆண்டு காலமாக, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு முறை வரலாற்றையும் இங்கு நினைவு கூர்கிறார்...


முதல் அரசாணைபனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு, 1921ல் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதற்கான முதல் அரசாணையை - எண் 613 - மதராஸ் மாகாண அரசு பிறப்பித்தது. அந்த ஆணையின்படி பிராமணர் அல்லாதவர்களுக்கு 44 சதவீதம், பிராமணர்களுக்கு 16 சதவீதம், முஸ்லிம்களுக்கு 16 சதவீதம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16 சதவீதம், பட்டியல் இனத்தவர்களுக்கு 8 சதவீதம் என இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதிலிருந்து இடஒதுக்கீடு கொள்கை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகையில் 3 சதவீதம் அளவே உள்ள பிராமணர்கள், அரசு பணிகளிலும், அரசு மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் முழு அளவில் இடம் பெறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசு வாய்ப்புகள், பிராமணர் அல்லாதவர், பிராமணர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், இந்திய கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.சுதந்திரத்திற்குப் பின் 1969ல், தமிழகத்தில் ஏ.எம்.சட்டநாதன் தலைமையில், முதலாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1970ல் சமர்ப்பிக்கப்பட்டது.அதன் சிபாரிசுகள் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவீதத்திலிருந்து 31 ஆகவும், பட்டியலினத்தார் / பழங்குடியினர் இடஒதுக்கீடு 16லிருந்து 18 சதவீதம் ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இடஒதுக்கீடு 49 சதவீதம் ஆக அதிகரித்தது.


69 சதவீதம் ஆன விதம்மீண்டும் 15.10.1992ல் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, ஜெ.ஏ.அம்பா சங்கர் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் நியமிக்கப்பட்டது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் சிபாரிசு அடிப்படையில் 13.12.1982ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இடஒதுக்கீடு 68 சதவீதம் ஆக மாறியது. 1990ல் மதராஸ் ஐகோர்ட் அளித்த தீர்ப்பின்படி, பழங்குடி இனத்தவருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்தது. இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம் ஆனது.

மதராஸ் மாநிலத்திற்கும், சம்பகம் துரைராஜனுக்கும் இடையேயான வழக்கில், 09.04.1951ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் குறித்த 16.06.1950 தேதி யிட்ட அரசாணையை நிராகரித்தது. அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசியல் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்றும் கோர்ட் தெரிவித்தது.தடை நீக்கம்சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவைச் சமாளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தின் 15வது பிரிவில் 4வது உப பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த 4வது உப பிரிவின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அரசின் எந்த சிறப்பு நடவடிக்கையையும், இந்த ஷரத்து அல்லது உப பிரிவு 2ல் உள்ள அம்சங்கள் தடுக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் முன்னேற்றத்திற்காக, அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்ய எடுக்கப்படும் அரசின் எந்த சிறப்பு நடவடிக்கையையும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதாக இந்த 4வது உப பிரிவு ஆக்குகிறது.

கடந்த 1951ல் செய்யப்பட்ட அரசியல் சட்ட திருத்தத்தின்படி 9வது ஷெட்யூலில் சேர்க்கப்படும் சட்டங்களை, அரசியல் சட்ட உரிமைகளைப் பறிப்பதாக கூறி, எந்த ஒரு கோர்ட்டோ, டிரிபுனலோ செல்லாதென அறிவிக்க முடியாது. மாறாக சம்பந்தப்பட்ட சட்டசபை மட்டுமே இந்த சட்டங்களை ரத்து செய்யவோ, திருத்தவோ, தொடர்ந்து செயல்படுத்தவோ அதிகாரம் கொண்டது. அடிப்படை உரிமைகளை மீறுவதாக கோர்ட் அல்லது டிரிபுனல் அளிக்கக் கூடிய தீர்ப்புகளில் இருந்த குறிப்பிட்ட சட்டத்தைக் காப்பாற்ற, இந்த திருத்தம் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் கொண்டு வரப்பட்டது.9வது ஷெட்யூல்துவக்கத்தில் இந்த 9வது ஷெட்யூல் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, சமூக சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் நோக்கில், ஜமீன்தாரி முறையை ஒழித்து, நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்தம், நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றை எளிமையாக்கவே. நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், பெரிய நிலக்கிழார்களின் சொத்துரிமை என்ற அடிப்படை உரிமையைப் பாதிப்பதால், நிலச்சீர்திருத்தங்களை அமல் செய்வதில் தடங்கல் ஏற்பட்டது. இந்த தடங்கல்களை நீக்கவே 1951ல் முதல் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.


அயர்லாந்து அரசியல் சட்டம் 43 - 2 - ஏ பிரிவில் சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் நில உரிமை தொடர்பாக உள்ள ஷரத்தின் அடிப்படையிலேயே இந்த 9வது ஷெட்யூல் உருவாக்கப்பட்டது.ஆரம்பத்தில் 13 மாநிலச் சட்டங்கள் மட்டுமே - அடிப்படை உரிமைகளை மீறியதாக - கோர்ட்டுகளின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாக சேர்க்கப்பட்டிருந்தன. அடுத்தடுத்து செய்யப்பட்ட அரசியல் சட்டங்கள் மூலம் தற்போது இந்த சட்டங்களின் எண்ணிக்கை 284 ஆக உள்ளது.கடந்த 1963ல் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறுகையில், 'சமுதாயத்தில் நலிவுற்றோர் மேம்பாட்டிற்காக மாநிலங்கள் சிறப்பு சலுகை அளிக்கும் நேரத்தில் அவற்றின் அணுகுமுறை சரியான நோக்கத்துடனும் அறிவுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். எனவே சிறப்பு சலுகை - இடஒதுக்கீடு - 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும்' என தெரிவித்தது.


முதல் ஆபத்துஷெட்யூல் 9ல் சேர்க்கப்படும் சட்டங்கள் நிலச் சீர்திருத்தம் தொடர்பாகத்தான் இருக்க வேண்டியதில்லை என்ற 29வது அரசியல் சட்டத் திருத்தத்தை 1973ல் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டாலும், இந்த ஷெட்யூலில் சேர்க்கப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை சாராம்சத்தை மாற்றும் வகையில் இருக்கக் கூடாது. அப்படி மாற்றும் வகையில் இருந்தால் செல்லாதென அறிவிக்கும் கோர்ட்டின் உரிமை அப்படியே தான் நீடித்தது.கடந்த 16.11.1992ல் மண்டல் வழக்கில் 9 உறுப்பினர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் அளித்த தீர்ப்பில், மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, இதுவரை கடைப்பிடித்து வந்த இடஒதுக்கீட்டு கொள்கையையே தொடர அனுமதிக்க வேண்டும் என, மதராஸ் ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அதை ஏற்றுக் கொண்ட கோர்ட், 1993 - -94ம் கல்வி ஆண்டிற்கு தற்போதைய இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றலாம்; ஆனால் 1994 - -95ம் கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு அளவு 50 சதவீதம் தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.தமிழக அரசு தாக்கல் செய்த சிறப்பு மனு மீது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது எனக் குறிப்பிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 50 சதவீதமே இடஒதுக்கீடு என்ற நிலையைத் தாண்ட முடியாத சட்டப் பிரச்னை எழுந்தது.


சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுசுப்ரீம் கோர்ட் உத்தரவைச் சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டன. கோர்ட் உத்தரவை நிறுத்த வழி எதுவும் தெரியாததால் அப்போதைய முதல்வர்ஜெயலலிதா அட்வகேட் ஜெனரலை அவசரமாக அழைத்து அடுத்து செய்ய வேண்டியது குறித்து ஆலோசனை நடத்தினார். இருவருக்கும் இடையே இரண்டுசந்திப்புகள் நடைபெற்றன.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கன இடஒதுக்கீடு செய்யப்பட்ட வரலாறு, முழுமையாக அந்தக் கூட்டங்களில் ஆராயப்பட்டன. 1921 முதல் இடஒதுக்கீடு கொள்கை அரசு ஆணையின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகிறது. எனவே இது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை அட்வகேட் ஜெனரல் வலியுறுத்தினார்.இடஒதுக்கீடு கொள்கைக்கு வலுவான சட்ட அங்கீகாரம் தேவை என்பதால் இந்த சட்டத்தை 9வது ஷெட்யூலில் இணைக்க ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை என்பதும் விளக்கப்பட்டது.

9வது ஷெட்யூலில் சேர்க்கப்பட்டு விட்டால் இந்த சட்டத்தை எதிர்த்து எளிதில் கோர்ட்டுக்குச் செல்ல முடியாது.சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செய்ய வேண்டிய வற்றை உணர்ந்த முதல்வர், முதலில் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, சமூக நீதியில் அதிக அக்கறை உள்ள அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் இது குறித்து பல்வேறு விளக்கங்களைக்கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

அதில் அட்வகேட் ஜெனரல் பங்கேற்று சட்ட நிலைமையை விளக்கினார். அதற்கு பின் 09.11.1993ல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டைத் தொடர்வதற்கான அரசியல் சட்டத் திருத்தத்தை உடனடியாக கொண்டு வருமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்வது என, கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
கடந்த 26.11.1993ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனஒருமனதாக கேட்டுக் கொள்ளப்பட்டது. பின்னர் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 19.07.1994ல் ஜனாதிபதி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்.


ஏன் சேர்க்க வேண்டும்அதற்குப் பின் இந்தச் சட்டத்தை 9வது ஷெட்யூலில் சேர்க்குமாறு மத்திய அரசை 22.07.1994ல் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. 'அரசியல் சட்டம் வழங்கிஉள்ள மாநில அரசின் கொள்கைக்கு இணங்க இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 'எனவே இந்த சட்டத்திற்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு தேவை. 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதால், இந்த சட்டத்தை 9வது ஷெட்யூலில் சேர்க்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

'அப்படி சேர்த்து விட்டால், அடிப்படை உரிமைகளை மீறுவதாக கூறி, இந்த சட்டத்தை கோர்ட் மூலம் எதிர்க்க முடியாது' என தமிழக அரசு தன் வேண்டுகோளில் குறிப்பிட்டிருந்தது.அதன்படி 1994ல் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் தமிழக அரசின் சட்டம், 76வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 9வது ஷெட்யூலில் 257 ஏ பிரிவில் சேர்க்கப்பட்டு, அரசியல் சட்டப் பாதுகாப்பு பெற்றது.மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் இன்னமும் 50 சதவீத இடஒதுக்கீட்டைத் தாண்ட முடியாமல் இருக்கும் நிலையில், தமிழகம் 1994- - 95 முதல் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை, பொதுப் பிரிவு மாணவர்களுக்காக கூடுதல் இடங்களைக் கல்வி நிறுவனங்களில் உருவாக்குமாறு, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.


இடஒதுக்கீடு தொடருமா?இடஒதுக்கீட்டை கர்நாடகா 70 சதவீதமாகவும், ஆந்திரா 55 சதவீதமாகவும், தெலுங்கானா 62 சதவீதமாகவும் அதிகரிக்க விரும்புகின்றன. குஜராத்திலும், கர்நாடகாவிலும் இது இன்னமும் வாக்குறுதி மட்டத்திலேயே இருக்கிறது. ஆந்திராவும், தெலுங்கானாவும் இதற்கான மசோதாவை நிறைவேற்றி, அரசியல் சட்ட 9வது ஷெட்யூலில் சேர்க்க கோரிக்கை வைத்துஉள்ளன. தமிழக சட்டத்தை, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; 14வது ஷரத்துக்கு -வேலை வாய்ப்பு, நியமனம் மற்றும் இதர விஷயங்களிலும் சம உரிமை - எதிரானதுஎனக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடருமா இல்லையா என்பது, இந்த மனுக்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பைப் பொறுத்தே இருக்கும்.

தொடர்புக்கு:மொபைல்: 9840047337


-கே.சுப்ரமணியன்

சீனியர் அட்வகேட் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல்


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
06-செப்-202120:31:19 IST Report Abuse
s t rajan இந்த இவ ஒதுக்கீடை ஆதரிக்கும் கட்சிகள் அனைத்தும், தேர்தலில் போட்டியிடுவதற்கும், பின் அரசு அமைக்கும் போது அமைச்சரவை பங்கீட்டிலும் முதலில் செயலாக்கட்டுமே. ஏன் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி, மாறன் என்று ஒரு குடும்பத்துக்கே அதிக பட்சமாக ஒதுக்கீடு செய்து கொள்கிறார்கள் ? இதுதான் இவர்களின் சமுக நீதியா ? இதை எந்த வைகோவும், திருமாவும், சுபவீரரும், ஏன் கம்யூனிஸ்டுகள் கூட தடுக்க முயற்சிக்க வில்லை ? இதை முதலில் செய்துவிட்டு வேலைவாய்ப்பு, படிப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு பற்றி பேசலாம். OK ?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
06-செப்-202116:36:43 IST Report Abuse
s t rajan 3% மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தை ஒடுக்க அல்லது ஒழிக்க நினைப்பதே இடஒதுக்கீட்டின் உள் நோக்கம் போல் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு உள்ள இறை பலத்தினால் எப்படியோ பல உயர்படிப்புகளை, உயர் பதவிகளை இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் பெற்று விடுகிறார்கள். ஆனால் , உண்மையாகவே கீழ் தட்டில் உள்ளவர்களும் ஏன் 70 வருடங்களாக முன்னேறி மேல் செல்ல வில்லை. இதற்கு காரணம் இந்த இட ஒதுக்கீட்டில் மறைந்திருக்கும் ஒரு மிகப்பெரிய ஏமாற்றுவேலை, அதுவும் சமூக நீதி பேசும் அநீதிவாதிகளால் தான். ஒரு பிற்பட்ட சமுகத்தில் ஒருவர் டாக்டரோ, இஞ்சினியரோ, அரசு அதிகாரியோ ஆகி நல்ல வீடு பங்களா கார், சொத்து என்று உயர்ந்த பின்னர், அவர்கள் சந்ததி மட்டும் எப்படியோ தொடர்ந்து டாக்டர், இஞ்சினியர் அரசு அதிகாரி ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சமூகத்தை சேர்ந்த இன்னொருவரின் வாய்ப்பையும் இவர்களும், இவர்களின் உறவினரும் மட்டுமே பெறுகிறார்கள். ஆகவே, மற்றவர்களின் முன்னேற்றத்தை இவர்கள் தடை செய்கிறார்கள் என்பதை உலகம் அறியும். ஆகவே ஒரு பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் வருமான வரி கட்டும் அளவுக்கு வசதி வந்துவிட்டால், அந்த சலுகை அவர்களின் சந்ததிக்கு அளிக்கப்பட கூடாது. அப்போது தான், கீழ்தட்டில் உள்ள சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் பயன் பெறுவர். மேலும் இந்த இட ஒதுக்கீடு அரசியல் கட்சிகளின் தலைமைப் பதவிகளிலும், அமைச்சரவைகளிலும் கூட நடை முறைப்படுத்தப்பட்ட படவேண்டும். குடும்ப reservation ஐ அரசியலில் இருந்து ஒழிக்கப் படவேண்டும். ஆதார், PAN card கள் இதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான சமூக மறுமலர்ச்சி ஏற்படும்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
06-செப்-202109:26:27 IST Report Abuse
sankar மொத்தத்தில் தரத்துக்கு இங்கே இடம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X