சென்னை, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள சுஹாஞ்சனா:
சிறு வயதில் பக்தி நெறிப் பாடல்களை நன்றாக பாடுவேன். பாடல் மீதான ஆசை, இயல்பாகவே எனக்கு உண்டு. 10ம் வகுப்பு முடித்ததும் இசைத்துறையில் எனக்கிருந்த ஆர்வம் கண்டு, கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பெற்றோர் சேர்த்து விட்டனர்.பயிற்சியை சிறப்பாக முடித்ததும், கரூரில் தனியார் அறநெறி பள்ளியில், ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறநெறி ஆசிரியராக பணியாற்றி வந்தேன்.
ஓதுவார் பணிக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பார்த்தேன்.என் கணவர் கோபிநாத், 'டிசைனிங்' இன்ஜினியராக பணிபுரிகிறார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அனைவரும் உறுதுணையாக இருந்ததால் தான், இந்த பணிக்கே விண்ணப்பித்தேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, பெரிய புராணம், திருமந்திரம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், கந்தர் அனுபூதி, பிள்ளைத் தமிழ் போன்றவற்றை, கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப, தமிழில் பாடல்களை பாடி, இறைவனை மகிழ்விக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்கும் போது, குழந்தைகளுக்கு இறை பக்தி பாடல்கள் பாட பயிற்சி அளிப்பேன்.
தமிழும், இசையும் ஒன்று என, திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறார். அறநெறிப் பாடல்களை நீங்கள் கற்றுக் கொண்டாலே போதும். தமிழ் உச்சரிப்பு மிக சரியாக வந்துவிடும்.தமிழ் மொழியை காதால் கேட்பதே இன்பம் தான். அதிலும், இறைவனுக்கு சொல்லப்படும் அர்ச்சனை மற்றும் பாடல்களை நீங்கள் கவனித்தாலே போதும். உடம்பால் நெக்குருகி நாம் பரவசத்தால் மனமகிழ்ந்து போகலாம்.
பெண்கள் களத்தில் வந்து எது செய்தாலும் அதை தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டும். இப்போது எல்லாருமே பெண்களுக்கு நம்பிக்கை அளித்து, பெரிய அளவில் உறுதுணையாக இருந்து சாதிக்க துாண்டுவதை பார்க்க முடிகிறது.நாம் செய்யும் பணி சரியானது எனத் தோன்றினால், எப்போதும் தயக்கம் காட்ட வேண்டாம். அதுதான் உங்களை வெற்றியின் பக்கம் அழைத்து செல்லும்.
இறைவனுக்காகப் பாடுவது மகிழ்ச்சி. அதிலும், தினமும் இறைவன் முன்னிலையில் சன்னிதியில் நின்று அவனை புகழ்ந்து, பாடல்கள் பாடும் வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு கோடி நமஸ்காரங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE